உலகக் கிண்ண தகுதிகாண் தொடருக்கான நெதர்லாந்து குழாம் அறிவிப்பு

89

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றில் விளையாடும் நெதர்லாந்து குழாம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கான தகுதிகாண் சுற்றுத் தொடர் அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் நடைபெறுகின்றது. மொத்தம் 10 நாடுகள் பங்கெடுக்கும் இந்த தொடரில் நெதர்லாந்து ஐ.சி.சி. ஒருநாள் சுபர் லீக்கில் இறுதி 5 இடங்களில் வந்த அணிகளில் ஒன்றாக பங்கெடுக்கின்றது.

அதன்படி இந்த தகுதிகாண் தொடரில் பங்கெடுக்கும் நெதர்லாந்து கிரிக்கெட் அணி விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஸ்கொட் எட்வார்ட்ஸ் மூலம் வழிநடாத்தப்படுகின்றது.

இதேவேளை நெதர்லாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பிரகாசித்த வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு, நெதர்லாந்து அணி உலகக் கிண்ணத்திற்கான தமது தகுதிகாண் குழாத்தினை தயார் செய்திருக்கின்றது.

அந்தவகையில் நெதர்லாந்தின் உள்ளூர் தொடர்களில் பிரகாசித்த வீரர்களான கொலின் ஏக்கர்மென், ரியாலப் வான் டி மெர்வே, பிரட் கிளாஸன், போல் வான் மீக்கிரன், ஷேன் ஸ்னாட்டர் மற்றும் பிரன்டன் குளோவர் ஆகிய வீரர்கள் நெதர்லாந்தின் இந்த குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

எனினும், மத்திய வரிசையில் துடுப்பாடும் டொம் கூப்பருக்கு நெதர்லாந்து ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேவேளை, தென்னாபிரிக்காவை அடிப்படையாக கொண்ட இளம் துடுப்பாட்ட வீரர் மைக்கல் லேவிட், அறிமுக வீரராக நெதர்லாந்து குழாத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்.

அணியின் சுழல் வீரர்களாக சரிஸ் அஹ்மட் மற்றும் ஆர்யன் தத் ஆகியோர் இணைக்கப்பட்டிருக்க, வெளிநாட்டு வம்சவாளியினைச் சேர்ந்த வீரர்களான லோகன் வான் பீக், பாஸ் டி லீடே ஆகியோரின் சேவைகளும் நெதர்லாந்து அணிக்கு கிடைக்கின்றது.

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடருக்கு முன்னர் தென்னாபிரிக்கா சென்று ஸ்கொட்லாந்து, நேபாள அணிகள் பங்கெடுக்கும் முக்கோண ஒருநாள் தொடரில் ஆடவுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி, இன்னும் இரண்டு வாரங்களில் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர் நடைபெறும் ஜிம்பாப்வேயினை சென்றடையவிருக்கின்றது.

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் குழு A இல் பெயரிடப்பட்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகள், ஜிம்பாப்வே, நேபாளம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் மோதவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து குழாம்

ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), மெக்ஸ் ஓடொவ்ட், விக்ரமஜித் சிங், மைக்கல் லெவிட், வெஸ்லி பாரெஸ்ஸி, பாஸ் டி லீடே, நோவா க்ரோஸ், தேஜா நிதமானுரு, சரிஸ் அஹ்மட், சகீப் சுல்பீக்கார், லோகன் வான் பீக், ஆர்யன் தத், கிளய்டோன் போர்ட், றயான் கிளேய்ன், விவியன் கிங்மா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<