மல்ஷாவின் சுழல் அபாரத்தால் சம்பியனாகிய ரெட்ஸ் அணி

SLC Women's Super Four 50 Over Tournament 2022

79

இலங்கை கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட Super Four ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் நிலக்ஷி டி சில்வா தலைமையிலான ரெட்ஸ் அணி, கிரேய்ஸ் அணியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.

நான்கு அணிகள் பங்குகொண்ட இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்ற குழுநிலைப் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக ஹர்ஷிதா சமரவிக்ரம தலைமையிலான கிரேய்ஸ் அணியும், புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்த நிலக்ஷி டி சில்வா தலைமையிலான ரெட்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

கொழும்பு BRC மைதானத்தில் இன்று (25) நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, ரெட்ஸ் அணித் தலைவி நிலக்ஷி டி சில்வா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய ரெட்ஸ் அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தினை எதிர்கொண்டது. எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை பிரசாதனி வீரக்கொடி (37), அணித் தலைவி நிலக்ஷி டி சில்வா (35) மற்றும் மல்ஷா ஷெஹானியின் (29) துடுப்பாட்டத்தின் உதவியுடன் 42 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

கிரேய்ஸ் அணியின் பந்துவீச்சில் சந்தனி திவங்கா 4 விக்கெட்டுகளையும், இனோகா ரணவீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 151 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கிரேய்ஸ் அணி போட்டி எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 97 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இம்முறை போட்டித் தொடரில் தோல்வியுறாத அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கிரேய்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் கௌஷினி நுத்யங்கா 23 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம 19 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.

ரெட்ஸ் அணியின் பந்துவீச்சில் மல்ஷா ஷெஹானி 23 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், தாரிகா செவ்வந்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

இதன்படி, 53 ஓட்டங்களால் வெற்றியீட்டிய நிலக்ஷி டி சில்வா தலைமையிலான ரெட்ஸ் அணி, மகளிர் Super Four ஒருநாள் தொடரின் சம்பியனாகிய மகுடம் சூடியதுடன், 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணப் பரிசும் வழங்கப்பட்டது.

போட்டியின் சுருக்கம்

ரெட்ஸ் அணி – 150 (42) – பிரசாதனி வீரக்கொடி 37, நிலக்ஷி டி சில்வா 35, மல்ஷா ஷெஹானி 29, சந்தனி திவங்கா 4/31, இனோகா ரணவீர 2/30

கிரேய்ஸ் அணி – 97 (34.1) – கௌஷினி நுத்யங்கா 23, ஹர்ஷிதா சமரவிக்ரம 19, சிகாரி டி சில்வா 11, மல்ஷா ஷெஹானி 5/23, தாரிகா செவ்வந்தி 2/20

முடிவு – ரெட்ஸ் அணி 53 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<,<