LPL தொடருக்கு நேரடி ஒப்பந்தம் செய்யப்பட்ட 20 வீரர்களின் விபரம்

Lanka Premier League 2023

2942

இலங்கையில் 4ஆவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான ஏலத்துக்கு முன்னர் நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரங்களை இலங்கை கிரிக்கெட் சபை (SLC) வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையில் செவ்வாய்க்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இலங்கையின் குழு இதுவா?

கடந்த பருவகாலங்களில் வீரர்களை தெரிவுசெய்வதற்கு வீரர்கள் வரைவு நடத்தப்பட்டிருந்த நிலையில், இம்முறை வீரர்கள் ஏலம் நடத்தப்படவுள்ளது. இந்த வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (ஜூன்) 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் தொடரில் விளையாடும் 5 அணிகளும் 2 உள்ளூர் வீரர்களையும் பொதுவான வீரர்கள் இருவரையும் அணிகள் நேரடியாக ஒப்பந்தம் செய்ய முடியும்.

அணிகள் வெளியிட்டுள்ள வீரர்களின் விபரங்களின் படி பாபர் அசாம் (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்), டேவிட் மில்லர் (ஜப்னா கிங்ஸ்), மெதிவ் வேட் (தம்புள்ள ஓரா), சகீப் அல் ஹசன் (கோல் கிளேடியேட்டர்ஸ்), டப்ரைஷ் சம்ஷி (கோல் கிளேடியேட்டர்ஸ்), நசீம் ஷா (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்), லுங்கி என்கிடி (தம்புள்ள ஓரா), ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ் (ஜப்னா கிங்ஸ்), முஜிப் உர் ரஹ்மான் (கண்டி பல்கோன்ஸ்) மற்றும் பகர் ஷமான் (கண்டி பல்கோன்ஸ்) போன்ற முன்னணி வெளிநாட்டு வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் பொதுவான வீரர்கள் ஒப்பந்தத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த திசர பெரேரா (ஜப்னா கிங்ஸ்), மதீஷ பதிரண (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்), குசல் மெண்டிஸ் (தம்புள்ள ஓரா), தசுன் ஷானக (கோல் கிளேடியேட்டர்ஸ்) மற்றும் வனிந்து ஹஸரங்க (கண்டி பல்கோன்ஸ்) ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிட்ட வீரர்களுடன் உள்ளூர் வீரர்களாக சாமிக்க கருணாரத்ன (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்), மஹீஷ் தீக்ஷன (ஜப்னா கிங்ஸ்), அஞ்செலோ மெதிவ்ஸ் (கண்டி பல்கோன்ஸ்), பானுக ராஜபக்ஷ (கோல் கிளேடியேட்டர்ஸ்) மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ (தம்புள்ள ஓரா) ஆகியோரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

வீரர்கள் ஏலத்துக்கு முன்னர் மேற்குறித்த வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதுடன், வீரர்கள் ஏலத்தில் ஏனைய வீரர்களை அணிகள் வாங்க முடியும். வீரர்கள் ஏலத்துக்காக ஒரு அணிக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையின் கீழ் வீரர்களை ஏலத்தில் இணைக்க முடியும் என்பதுடன், நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்காக 5 இலட்சம் அமெரிக்க டொலர்கள் ஒரு அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LPL தொடருக்காக பதிவுசெய்துள்ள வீரர்கள் தேசிய அணி வீரர்கள், புதுமுக வீரர்கள் மற்றும் முன்னாள் தேசிய வீரர்கள் என்ற ரீதியில் மூன்று பிரிவுகளின் கீழ் ஏலத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

இம்முறை LPL தொடரானது ஜூலை 30ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 20ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மற்றும் கண்டி பல்லேகலை மைதானங்களில் நடைபெறவுள்ளன. முதல் 5 போட்டிகள் கொழும்பில் நடைபெறவுள்ளதுடன், அடுத்த 8 போட்டிகள் பல்லேகலையிலும் பின்னர் இறுதிப்போட்டி உட்பட ஏனைய போட்டிகள் மீண்டும் கொழும்பிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேரடியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களின் விபரம்

  • கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – பாபர் அசாம், மதீஷ பதிரண, சாமிக்க கருாணரத்ன, நசீம் ஷா
  • ஜப்னா கிங்ஸ் – டேவிட் மில்லர், திசர பெரேரா, மஹீஷ் தீக்ஷன, ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ்
  • கண்டி பல்கோன்ஸ் – முஜிப் உர் ரஹ்மான், வனிந்து ஹஸரங்க, அஞ்செலோ மெதிவ்ஸ், பகர் ஷமான்
  • கோல் கிளேடியேட்டர்ஸ் – சகீப் அல் ஹசன், தசுன் ஷானக, பானுக ராஜபக்ஷ, டப்ரைஷ் சம்ஷி
  • தம்புள்ள ஓரா – மெதிவ் வேட், குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, லுங்கி என்கிடி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<