மோசமான துடுப்பாட்டத்தினால் தோல்வியடைந்த யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி

45
 

சிங்கர் நிறுவனம் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – II பாடசாலைகள் இடையே நடாத்தும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஒன்றின் போட்டியில் களுத்துறை திருச்சிலுவை கல்லூரி (Holy Cross College) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியினை 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்துள்ளது.

நேற்று (30) யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மைதானச் சொந்தக்காரர்கள் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தெரிவு செய்து கொண்டனர். 

இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!

இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட…

அதன்படி, இந்த தொடரில் தமது இறுதிப் போட்டியில் திஸ்ஸ மத்திய கல்லூரி அணியினை வீழ்த்திய அதே நம்பிக்கையுடன் துடுப்பாடிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிரணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி 21.4 ஓவர்களில் 68 ஓட்டங்களுக்கு தமது முதல் இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினை பந்துவீச்சில் மிரட்டிய திருச்சிலுவை கல்லூரி வீரர் தில்ஹார நாணயக்கார வெறும் 2 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார். அதேநேரம், ஆரோஷ் பாக்யா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய திருச்சிலுவை கல்லூரி அணியும் மோசமான துடுப்பாட்டத்தை காண்பித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 87 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. யாழ் அணியின் பந்துவீச்சு சார்பில்  மிரட்டலாக செயற்பட்ட விதுசன் 17 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

தொடர்ந்து 19 ஓட்டங்கள் பின்தங்கியவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை தொடங்கிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி இம்முறை 154 ஓட்டங்களை பெற்றது. சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் தனுஜன் 38 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்ய மீண்டும் திறமையினை வெளிப்படுத்திய தில்ஹார நாணயக்கார  திருச்சிலுவை கல்லூரிக்காக 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை அடுத்து போட்டியின் வெற்றி இலக்காக திருச்சிலுவை கல்லூரிக்கு 136 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய பதிலுக்கு தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய திருச்சிலுவை கல்லூரி அணி 46.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 138 ஓட்டங்களுடன் போட்டியின் வெற்றி இலக்கை அடைந்தது.

>>Photos : St.John’s College Jaffna vs Holy Cross College Kaluthara l U19 Cricket Tournament 2019/20<<

திருச்சிலுவை கல்லூரி அணியின் வெற்றியை பெத்தும் பெர்னாந்து 32 ஓட்டங்கள் பெற்று உறுதி செய்திருந்தார். அதேநேரம், யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிக்காக விதுஷன் 4 விக்கெட்டுக்கள் சாய்த்திருந்த போதும் அது வீணாகியிருந்தது.

போட்டியின் சுருக்கம்

சென். ஜோன்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 68 (21.4) – N. சௌம்யன் 26, தில்ஹார நாணயக்கார 6/02, அரோஷ் பாக்ய 2/04

திருச்சிலுவை கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 87 (29.5) – Y. விதுசன் 5/17, A. சரண் 3/22

சென். ஜோன்ஸ் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 154 (61) – T.P தனுஜன் 38, தில்ஹார நாணயக்கார 5/41, ஆதீப் அஸ்லி 2/37

திருச்சிலுவை கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 138/7 (46.3) – பெத்தும் பெர்னாந்து 32, Y. விதுசன் 4/66

முடிவு – திருச்சிலுவை கல்லூரி அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<