மதீஷ பதிரன என்ன செய்தார்? இனி என்ன செய்ய வேண்டும் – மாலிங்க

437

இந்தப் பருவத்திற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயற்பட்டு வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான லசித் மாலிங்க, தனது பாணியில் பந்துவீசும் ஆற்றல் கொண்ட மதீஷ பதிரன குறித்து ESPNcricnfo செய்திச் சேவையிடம் செவ்வி ஒன்றினை வழங்கியிருக்கின்றார்.

21 வயது மாத்திரமே நிரம்பியிருக்கும் மதீஷ பதிரன இந்தப் பருவத்திற்கான IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருவதோடு, இம்முறை லீக் சுற்றில் 10 போட்டிகளில் 15 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருக்கின்றார்.

>>த்ரில் வெற்றியோடு பிளே ஒப் வாய்ப்பினை உறுதி செய்த லக்னோவ் சுபர் ஜயன்ட்ஸ்<<

சென்னை சுபர் கிங்ஸ் அணியின் தலைவர் மஹேந்திர சிங் டோனியின் நம்பிக்கைக்குரிய பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் மாறியிருக்கும் மதீஷ பதிரன இம்முறைக்கான IPL தொடரில் டெத் ஓவர்களை வீசுவதில் கைதேர்ந்தவராகவும் காணப்படுகின்றார்.

இவ்வாறான நிலையில் மதீஷ பத்திரன குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் லசித் மாலிங்க, மாலிங்க அவரை முதல் தடவையாக சந்தித்த நிகழ்வு குறித்தும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

”2020ஆம் ஆண்டில் நடைபெற்ற 19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் அவர் (மதீஷ) பற்றி அறிந்து கொண்டேன். இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயற்படும் மஹேலவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மஹேல, “மாலி, கண்டியில் இருந்து உங்களைப் போன்று பந்துவீசும் ஒரு பையன் இருக்கின்றார். மிகவும் வேகமாக பந்துவீசுகின்றார். ஆனால் அவர் இரு முனைகளிலும் இருந்து பந்துவீசுவதன் காரணமாக போட்டிகளில் விளையாட வைக்க முடியாது. அத்துடன் அவரிடம் (பந்துவீசுவதில்) கட்டுப்பாடும் இல்லை. அவருக்காக உங்களால் ஏதும் செய்ய முடியுமா?” எனக் கேட்டார்.”

”எனவே அவர் (மஹேல) மதீஷவினை என்னிடம் அனுப்பி வைத்தார். நாங்கள் இருவரும் கெத்தாராம அரங்கில் வைத்து சந்தித்தோம். அவரை சந்தித்த போது அவரிடம் அனுபவம் இல்லாத போதும், அவர் பயமின்றிய வலுவான கிரிக்கெட் வீரர் என்பதனை என்னால் அறிந்து கொள்ள முடியுமாக இருந்தது. அது மிக முக்கியமான ஒன்று.

நான் அவரிடம் விடயங்களை இலகுவாகவே ஆரம்பித்தேன். அவரிடம் பின்வரும் விடயத்தினையும் கூறியிருந்தேன். ”போட்டிகளின் வடிவத்தினை பற்றி இப்போது தெரிவு செய்ய வேண்டாம். இலங்கைக்கு என்ன விளையாட வேண்டிய நிலை ஏற்படுகின்றதோ, அதனை நீங்களும் விளையாட வேண்டும். உங்களுக்கு உபாதை ஏற்படும் சந்தர்ப்பத்தில் நீங்கள் விளையாடும் போட்டி வடிவத்தில் கவனம் செலுத்த முடியும். ஆனால் அது வேற விடயம். ஆனால் இந்த பந்துவீச்சுப் பாணியில் சிறு வயது தொடக்கம் நீண்ட காலம் பந்துவீசுவதோடு அதில் பிரச்சினைகள் எதனையும் எதிர் கொள்ளவில்லை. எனவே இது உங்களுக்குப் பிரச்சினையாக இருக்காது என்றேன்.”

இதேவேளை செவ்வியின் போது மாலிங்கவிடம் மதீஷவின் பந்துவீச்சு குறித்து கேட்கப்பட்டிருந்தது. அதற்கு அவர் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.

”திறமையினை வைத்துப் பார்க்கும் போது, அவருக்கு நான் ஒரு பந்துடன் மாத்திரமின்றி புதிய பந்தினையும் பழைய பந்தினையும் எவ்வாறு வீச வேண்டும் என்பதனை கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கியிருக்கின்றேன். இந்த வகையிலான பந்துவீச்சுப் பாணிக்கு உங்களுக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என அனைத்திற்கும் ஒரே வகையிலான திறமைகளே வேண்டும்.

திறமைகளை நீங்கள் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டிகளிலும் எவ்வாறு பயன்படுத்துகின்றீர்கள் என்பதிலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றது. அவரின் கையின் அமைப்பு காரணமாக அவரினால் பந்தினை உண்மையாக ஸ்விங் செய்ய முடியாது. 19 வயதுக்கு ஏற்றவாறு பந்துவீசுவதன் காரணமாக, பந்துவீசும் கைகளில் சில மாற்றங்களை செய்வதற்கு வலியுறுத்தினேன். இந்த மாற்றங்களுக்கு அவருக்கு ஒன்று இரண்டு வருடங்கள் தேவைப்படலாம்.”

“இப்போது அவருக்கு இருப்பதனை வைத்து முகாமை செய்து கொள்ள முடியும். அவரினால் அழகிய முறையில் யோக்கர் பந்துகளை வீச முடியும். ஆனால் தொடர்ச்சியாக வீசுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. நான் அவருக்கு மெதுவாக பந்துவீசுவதற்கும் கற்றுக் கொடுத்திருக்கின்றேன். அவர் எனது பாணியில் பந்துவீசுவதனால் அவருக்கு அது மிக இலகுவாக இருக்கும். அவரிடம் நான் மெதுவான பந்துகளுக்காக வேலை செய்வோம் எனக் கூறினேன். அவர் இப்போது அதில் சிறப்பாக செயற்படுகின்றார். அவருக்கு இன்னும் சிறிய கட்டுப்பாடு தேவைப்பட்ட போதும், இப்போது நல்ல நிலையிலையே இருக்கின்றார்.”

இலங்கை அணிக்காக மதீஷ பதிரன இதுவரை ஒரேயோரு T20I போட்டியில் மாத்திரமே ஆடியிருக்கின்றார். மதீஷ பதிரன இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை தரும் வீரர்களில் ஒருவராக இருப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மாலிங்க மதீஷ பதிரன சர்வதேச போட்டிகளுக்காக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

”அவர் IPL போட்டிகளில் சிறப்பாக செயற்படுகின்றார். ஆனால் அவர் சர்வதேச போட்டிகளுக்காக இன்னும் கொஞ்சம் தயாராக வேண்டும். இந்த ஆண்டுக்கான IPL போன்று சர்வதேச போட்டிகளில் உங்களால் 12 வீரர்களை விளையாட வைக்க முடியாது. CSK அணியில் அவரை டெத் ஓவர்களை வீசும் ஒரு பந்துவீச்சாளராகவே வைத்திருக்கின்றனர். ஆனால் நீங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு செல்லும் போது அதிக பவர் பிளே ஓவர்களை வீச வேண்டும். அங்கே ஸ்விங் பந்துகளை அதிகம் வீச நேரிடலாம். ஆனால் இப்போது அவரிடம் போதுமான அளவு ஸ்விங் பந்துகள் வீசுவது கடினம்.”

>>மீண்டும் நைட் ரைடர்ஸ் அணிக்குத் திரும்பும் பிராவோ<<

”அவர் கொஞ்சம் புத்தி சதூரியமாகவும் இருக்க வேண்டும். சில போட்டிகளின் பின்னர் எதிரணிகள் நீங்கள் யார் என்பது தொடர்பில் இனங்கண்டு அதற்கான வேலைகளை மேற்கொள்ளும். நீங்கள் அந்த சந்தர்ப்பத்திலும் எவ்வாறு விடயங்களை முகாமை செய்வது என்பது தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டும். நான் சிறப்பான விடயமாக அவர் குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகளிலாவது விளையாட வேண்டும் என கருதுகின்றேன். அதன் மூலமே உங்களுக்கு, உங்களது பந்துவீச்சு வலிமையினை வளர்க்க முடியும். நான் 30 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கின்றேன். அது எனக்கு T20I மற்றும் ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சு வலிமையினை வளர்த்துக் கொள்ள உதவியாக இருந்தது. ஏனெனில் ஒரு இன்னிங்ஸில் நீங்கள் 25 தொடக்கம் 30 ஓவர்கள் வரையில் வீசுவது, உங்களுக்கு உங்கள் திறமைகளை குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தற்காத்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.”

மஹேந்திர சிங் டோனி மதீஷ பதிரனவினை உபயோகம் செய்யும் விதம் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட மாலிங்க, மதீஷ இன்னும் அனுபவங்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

”அவரினால் (மதீஷவினால்) புதிய பந்தினை வீசுவதற்குரிய ஆற்றலை கொண்டிருக்கவில்லை என்பதனை MS டோனி அறிந்து வைத்திருக்கின்றார். அத்துடன் டோனி அவரினை உள்ளூர் போட்டிகளில் ஆடிய இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மாத்திரமே பயன்படுத்தியிருக்கின்றார். இந்தப் பாணியில் மணிக்கு சுமார் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசும் போது வீரர்களுக்கு மதீஷவிற்கு எதிராக ஆடுவது சிரமமாகவே அமையும். அது டோனியின் சுமார் 20 வருட அனுபவத்தினை பணியில் காட்டுவதற்கு உதாரணமாக அமைகின்றது. அத்துடன் அதிக ஆற்றலுடன் திறமையாக ஆடக் கூடிய  துடுப்பாட்டவீரர்களுக்கு (Power Players) எதிராக டோனி, அவரின் (மதீஷவின்) வேகத்தினை குறைக்க குறிப்பிடுகின்றார். வேகத்தினை பயன்படுத்தி ஓட்டங்கள் பெறக் கூடிய துடுப்பாட்டவீரர்களாக இருக்கும் ரோஹிட் சர்மா, மஹேல ஜயவர்தன மற்றும் விராட் கோலி போன்றவர்களுக்கு எதிராக மதீஷ இப்போது தடுமாறலாம்.”

>>சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் புதிய மாற்றம்<<

இதேவேளை, மதீஷ டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தக் கூடாது என MS டோனி கூறிய விடயம் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட மாலிங்க அது உபாதைகளை கருத்திற் கொண்டு அவரினால் கூறப்பட்டிருக்கலாம் எனக் கூறியிருந்தார்.

”MS டோனி அவர் (மதீஷ) ICC இன் அனைத்து தொடர்களிலும் ஆட வேண்டும் எனக் கூறியிருக்கின்றார். நான் அவர் சில வேளை கேளிக்கைக்காக கூறியிருக்க முடியும் என நம்புகின்றேன். (டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருப்பது) தேசிய அணிக்காக நீங்கள் ஆடும் போது சாத்தியம் கிடையாது.

”நான் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருப்பதனை யாராவது வலியுறுத்துவார்கள் எனில், அதனை அவர்கள் உபாதைகளை கருத்திற் கொண்டு கூறியிருக்கலாம் என கருதுகின்றேன். நான் டெஸ்ட் போட்டிகளிலேயே முதலில் ஆடினேன். என்னிடம் அவ்வாறு யாரும் கூறவில்லை. நான் 2004 தொடக்கம் 2010 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடினேன். நான் 16 வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் ஆடினேன். அத்துடன் அநேகமான IPL போட்டிகளிலும் ஆடியிருக்கின்றேன். இன்னும் வேறு லீக்குகளிலும், பிக் பேஷ் தொடரிலும் ஆடியிருக்கின்றேன். இந்த சந்தர்ப்பங்களில் நான் உபாதை என மைதானத்தினை விட்டு வெளியேறியது கிடையாது. என்னை பலர் எதிர்க்கலாம். ஆனால் நாம் அதனை அவர் (மதீஷ) உபாதைக்கு உள்ளாகுவார் என்ற அர்த்தத்தில் பார்க்க கூடாது. நான் இந்த வழியிலேயே கிரிக்கெட் ஆடியிருப்பதோடு, அவர் மாதிரியே பந்தும் வீசியிருக்கின்றேன். எனவே அதில் இருக்கும் சவால்கள் தெரியும்.”

மதீஷவின் சென்னை சுபர் கிங்ஸ் அணி இந்த ஆண்டுக்கான IPL தொடரில் பிளே ஒப் சுற்றுக்கு முன்னேறியிருப்பதோடு, பிளே ஒப் சுற்றின் முதல் குவாலிபையர் போட்டியில் அடுத்ததாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (23) குஜராத் டைடன்ஸ் அணியுடன் விளையாடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை இடம்பெறும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<