உலகின் பணக்கார வீராங்கனையாக ஜப்பானின் நயோமி ஒசாகா சாதனை

99

ஜப்பானின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். 

உலகின் பிரபலமான போர்ப்ஸ் சஞ்சிகை ஆண்டுதோறும் உலகின் அதிக வருவாய் ஈட்டும் 10 விளையாட்டு வீராங்கனைகளை பட்டியலிடும்.   

>> பெண் குழந்தைக்குத் தந்தையானார் உசைன் போல்ட்

2019ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி முதல் 2020ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி வரையிலான வீரர்களின் பரிசுத் தொகை, விளம்பர ஒப்பந்த வருமானம் போன்றவற்றைக் கொண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு வருமானத்தை மதிப்பிட்டது.  

ஒட்டுமொத்த வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் வீராங்கனைகளான நயோமி ஒசாகா (ஜப்பான்) 29ஆவது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 33-வது இடத்திலும் இருப்பதாக போர்ப்ஸ் அறிவித்துள்ளது.   

அதேசமயம், அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகள் என்று பார்த்தால், முதல் முறையாக ஒசாகா முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்

அந்தவகையில் இந்தப் பட்டியலில், முன்னாள் முதல்நிலை டென்னிஸ் வீராங்கனையான 22 வயதான நயோமி ஒசாகா, 37.4 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 15 விளம்பர நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தில் உள்ளார்.

>> புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

இதன்மூலம் இவர் கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸைப் பின் தள்ளியுள்ளார். இந்த வருடம் செரீனாவின் வருமானத்தை விடவும் ஒசாகா, 1.4 மில்லியன் டொலர் அதிகமான வருமானம் ஈட்டியுள்ளார்

கடந்த வருடம், உலகின் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நான்காவது முறையாக முதலிடத்தைப் பிடித்தார்

அவரது ஆண்டு வருவாய் 29.2 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டது. இந்த வருடம் செரீனா வில்லியம்ஸ் 36 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளார்.

அத்துடன், இதுவரை எந்தவொரு விளையாட்டு வீராங்கனையும் ஓர் ஆண்டில் 37.4 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டியதில்லை. இதன்மூலம் நயோமி ஒசாகா புதிய சாதனையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு முன்பு கடந்த 2015ஆம் ஆண்டு ரஷ்ய வீராங்கனையான மரியா ஷரபோவா 29.7 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டியதே சாதனையான இருந்தது. அந்தச் சாதனையை நயோமி ஒசாகா தற்போது முறியடித்துள்ளார்.

>> கரப்பந்து விளையாட்டில் கொரோனா தொற்று அதிகம்

1990ஆம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை மதிப்பிட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான முழுப் பட்டியலில் அடுத்த வாரம் வெளியிடப்படவுள்ளது.

உலகின் 10ஆம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒசாகா, இரண்டு முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

2018ஆம் ஆண்டு அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரிலும், 2019ஆம் ஆண்டு அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரிலும் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். தற்போது அவர் டென்னிஸ் தரவரிசையில் 10-வது இடம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<