புதிய பயிற்சியாளரை தேடும் இலங்கை வலைப்பந்து அணி

162

இலங்கை வலைப்பந்து சம்மேளனம் (NFSL) தற்போது வெற்றிடமாகியுள்ள, இலங்கை வலைப்பந்து அணியின் (தலைமைப்) பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை கோருவதாக தெரிவித்திருக்கின்றது.

இலங்கை வலைப்பந்து அணியின் (தலைமைப்) பயிற்சியாளராக செயற்பட்டு வந்த திலக்கா ஜினதாச கடந்த மாதம் தீடிரென பதவி விலகினார். இதனால், இலங்கையின் வலைப்பந்துப் பிரியர்கள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியதோடு, புதிய பயிற்சியாளராக யார வருவார்? என்ற கேள்விகளும் எழுந்தன.

>> இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளர் திலகா ஜினதாச இராஜினாமா

இந்த நிலையிலையே அடுத்த (2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள) ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப்பினை இலக்காகக் கொண்டு, இலங்கை வலைப்பந்து அணிக்கு புதிய (தலைமைப்) பயிற்சியாளர் ஒருவர் தெரிவு செய்யப்படவிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டின் செப்டம்பரில் இலங்கை வலைப்பந்து அணியின் பயிற்சியாளராக நியமனம் பெற்ற திலக்கா ஜினதாச தனது ஆளுகையில், 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வலைப்பந்து அணியை முதல் தடவையாக ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளராக மாற வழிநடாத்தியதோடு, உலக வலைப்பந்து அணிகள் தரவரிசையில் 28ஆம் இடத்தில் காணப்பட்ட இலங்கையை 18ஆம் இடத்திற்கும் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, புதிய பயிற்சியாளர் ஒருவரின் ஆளுகைக்குள் வரவுள்ள இலங்கை வலைப்பந்து அணி, 2021ஆம் ஆண்டின் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய உள்ளூர் விளையாட்டுப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளதாக இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவி விக்டோரியா லக்ஷ்மி குறிப்பிட்டிருக்கின்றார்.

மறுமுனையில், இலங்கை வலைப்பந்து வேறு நாடுகளுடனும் வலைப்பந்து போட்டிகளில் விளையாடுவதற்கான திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வலைப்பந்து அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்படும் நபரொருவர் ஒரு வருடகாலத்திற்கே பயிற்சியாளராக பணியாற்ற சட்டம் காணப்படுகின்ற போதிலும், வலைப்பந்து அணியின் திறமை அடிப்படையில் அவரின் பதவிக்காலத்தை நீடிக்க இலங்கை வலைப்பந்து சம்மேளனம் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வலைப்பந்து அணியின் (தலைமை) பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை அனுப்ப விரும்புவோர், ஜூன் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் தங்களது சுய விபரக் கோவையினை மின்னஞ்சல் மூலமோ அல்லது பதிவுத் தபால் மூலமோ அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.

அதோடு, மேலதிக விபரங்களை பெறுவதற்கான தொலைபேசி (சம்பா குணவர்த்தன – 0773332400 – இலங்கை வலைப்பந்து சம்மேளன செயலாளர்) இலக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

>> மேலும் பல விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<