அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆறுதல் வெற்றி

152
England vs Australia
Photo - Getty Images

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தினை 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, ஆறுதல் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

>> இலகு வெற்றியுடன் T20 தொடர் இங்கிலாந்து வசம்

எனினும், இந்த T20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரினை 2-1 எனக் கைப்பற்றியிருக்கின்றது. 

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி சௌத்தம்ப்படன் நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை (08) ஆரம்பமானது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் T20 தொடரினை இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஏற்கனவே கைப்பற்றிய போதும், ஆறுதல் வெற்றியினை எதிர்பார்த்து முதல் துடுப்பாட்டத்தினை எதிரணிக்கு வழங்கினார். 

இதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இப்போட்டியில் டேவிட் வோர்னர், பெட் கம்மின்ஸ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்குப் பதிலாக மெதிவ் வேட், ஜோஸ் ஹேசல்வூட், மிச்செல் மார்ஸ் ஆகியோரினை உள்வாங்கியிருந்தது. 

மறுமுனையில் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் விரல் உபாதையினால் விலக, இங்கிலாந்து தரப்பினை மொயின் அலி வழிநடாத்தியிருந்ததோடு, விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜோஸ் பட்லருக்கு பதிலாக ஜோ டென்லியும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார். 

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைக் குவித்தனர். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பாக T20 சர்வதேச போட்டிகளில் தன்னுடைய 5ஆவது அரைச்சதத்தினைப் பூர்த்தி செய்த ஜொன்னி பெயர்ஸ்டோவ் 44 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 55 ஓட்டங்களினைப் பெற்று சிறப்பாக செயற்பட்டிருந்தார். 

>> ஆஸிக்கு எதிரான மூன்றாவது T20 போட்டியில் பட்லர் நீக்கம்

மறுமுனையில் அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல்வீரரான அடம் ஷம்பா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 146 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, குறித்த வெற்றி இலக்கினை அடைய தடுமாற்றம் ஒன்றினை காண்பித்திருந்தது.

எனினும், அவுஸ்திரேலிய அணிக்காக துடுப்பாட்டத்தில் கைகொடுத்த மிச்செல் மார்ஷ் மற்றும் அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் தமது தரப்பினை வெற்றிப்பாதையில் வழிநடாத்தினார். 

அந்தவகையில் இந்த வீரர்களின் துடுப்பாட்ட உதவியோடு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களுடன் அடைந்தது. 

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்கினை அடைவதற்கு உதவியாக இருந்த மிச்செல் மார்ஷ் 36 பந்துகளுக்கு 39 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, ஆரோன் பின்ச்சும் 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 39 ஓட்டங்களை எடுத்திருந்தார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஆதில் ரஷீட் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்த போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியிருந்தது. 

போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிச்செல் மார்ஷ் தெரிவாக, தொடர் நாயகன் விருது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் ஜோஸ் பட்லருக்கு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான T20 தொடர் நிறைவடைந்திருப்பதனை தொடர்ந்து அடுத்ததாக இரண்டு அணிகளும் மோதுகின்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) தொடக்கம் மன்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம் 

இங்கிலாந்து – 145/6(20) ஜொன்னி பெயர்ஸ்டோவ் 55, அடம் ஷாம்பா 34/2

அவுஸ்திரேலியா – 146/5 (19.3) ஆரோன் பின்ச் 39, மிச்செல் மார்ஷ் 39*, ஆதில் ரஷீட் 21/3

முடிவு – அவுஸ்திரேலியா 5 விக்கெட்டுக்களால் வெற்றி  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<