அபார சதங்களால் மைதானத்தை அலங்கரித்த மெதிவ்ஸ், சந்திமால்

4057

கொழும்பு கிரிக்கெட் கழக (CCC) மைதானத்தில் இன்று (19) நடைபெற்ற இலங்கை குழாத்துக்குள்ளான ஒருநாள் பயிற்சிப் போட்டியில், அனுபவ துடுப்பாட்ட வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் அபாரமான சதங்களை பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியில் தசுன் ஷானக தலைமையிலான அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்கப்பட்ட நிலையில், அபாரமாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது

>>IPL ஏலத்தில் புது வரலாறு படைத்த கிறிஸ் மொரிஸ்<<

தசுன் ஷானக பதினொருவர் அணியின் மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய தினேஷ் சந்திமால், இன்னிங்ஸின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி 149 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்

சந்திமால் இந்த 149 ஓட்டங்களை 123 பந்துகளில் பெற்றுக்கொண்டதுடன், 5 சிக்ஸர்கள் மற்றும் 14 பௌண்டரிகளையும் விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக வனிந்து ஹசரங்க 56 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவர்களுடன், அணித்தலைவர் தசுன் ஷானக 58 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

திமுத் கருணாரத்ன பதினொருவர் அணி சார்பாக வேகப் பந்துவீச்சாளர் லஹிரு குமார மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரத்ன பதினொருவர் அணி 45 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களை பெற்றிருந்த போது, போட்டியானது வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்டது

திமுத் கருணாரத்ன பதினொருவர் அணி சார்பாக அனுபவ துடுப்பாட்ட வீரரான அஞ்செலோ மெதிவ்ஸ் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பௌண்டரிகள் அடங்கலாக 121 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இவருக்கு அடுத்தப்படியாக மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ஓசத பெர்னாண்டோ 71 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். ஷானக பதினொருவர் அணி சார்பாக நுவான் பிரதீப் 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது மூன்று T20I, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் முகமாக, எதிர்வரும் 23ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் நோக்கி புறப்படவுள்ளது. இந்த தொடருக்கு வீரர்களை தெரிவுசெய்யும் வகையிலேயே இந்த பயிற்சிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சுருக்கம்

தசுன் ஷானக XI – 321/5 (50) தினேஷ் சந்திமால் 149*, வனிந்து ஹசரங்க 80*, தசுன் ஷானக 51, லஹிரு குமார 2/60, ரமேஷ் மெண்டிஸ் 2/56

திமுத் கருணாரத்ன XI – 258/5 (45) அஞ்செலோ மெதிவ்ஸ் 121, ஓசத பெர்னாண்டோ 57, திசர பெரேரா 33, பெதும் நிசங்க 18, நுவான் பிரதீப் 3/23, வனிந்து ஹசரங்க 2/64 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<