நேபாள கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இராஜினாமா

155

நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக புபுது தசநாயக்க நியமிக்கப்பட்டார். எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது பதவியை கடந்த ஜுலை மாதம் இராஜினாமா செய்திருந்ததுடன், கனடா கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம், நேபாள கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் மனோஜ் பிரபாகர் நியமிக்கப்பட்டார். இவரது பயிற்சியின் கீழ் கென்யா சென்ற நேபாள அணி, ஐந்து போட்டிகள் கொண்ட T20i தொடரை 3–2 எனக் கைப்பற்றியது. அதன்பிறகு, ஒருநாள் தொடரை 3–0 என முழுமையாக வென்றது.

இந்த நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியம் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2–1 என தட்டிச் சென்றது. எனினும், ஒருநாள் உலகக் கிண்ண சுபர் லீக் போட்டியில் ஸ்கொட்லாந்து, நமீபியாவிடம் தோல்வியடைந்தது.

எனவே, நேபாள அணிக்காக 5 T20i, 7 ஒருநாள் போட்டிகளில் பணியாற்றிய பிறகு தனது பதவியை மனோஜ் பிரபாகர் இராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக நேபாள கிரிக்கெட் சங்கத்திடம் பிரபாகர் அறிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொண்ட நேபாள கிரிக்கெட் சங்கம், மனோஜ் பிரபாகரை அப்பதவியில் இருந்து உடனடியாக விடுவித்தது.

இதுகுறித்து நேபாள கிரிக்கெட் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”மனோஜ் பிரபாகரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறோம். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்,” என தெரிவித்திருந்தது.

59 வயதான மனோஜ் பிரபாகர் 1984 முதல் 1996 வரை இந்திய அணிக்காக 39 டெஸ்ட், 130 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<