கிறிஸ் கெயில், பொல்லார்ட், மஹேல ஆகியோரை வழிநடாத்தவுள்ள குமார் சங்கக்கார!

10587

இரண்டாவது பருவகாலத்துக்கான பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில்,  அதிரடி துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட கராச்சி கிங்ஸ் அணியை இலங்கை வீரர் குமார் சங்கக்கார வழிநடாத்தவுள்ளார்.

வலிமைமிக்க அணியாக உருவெடுத்துள்ள இவ்வணி, ஏற்கனவே முதல் பருவகால அணியில் இடம்பெற்றிருந்த சொஹைல் தன்வீரை நீக்கிவிட்டு அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயிலை அணியில் இணைத்துள்ளது.

கராச்சி கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களாக குமார் சங்கக்கார, ரவி பொபார, முஹமட் ஆமீர், கிரோன் பொல்லார்ட் மற்றும் கிறிஸ் கெயில் ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

2௦17ஆம் ஆண்டுக்கான T-2௦ போட்டிகளுக்கு கராச்சி கிங்ஸ் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கடந்த பருவகால போட்டிகளில் அணியைத் தலைமை தாங்கிய  பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சுஹைப் மலிக்கிற்குப் பதிலாக துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார தலைமை தாங்கவுள்ளார்.

அதேநேரம், குமார் சங்கக்காரவின் தலைமையின் கீழ் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெயில், மஹேல ஜயவர்தன மற்றும் இமாட் வசீம் மற்றும் போலார்ட் போன்ற முக்கிய மற்றும் அனுபவம் மிக்க வீரர்கள் விளையாட உள்ளமையானது, அணித் தலைவருக்கும் வீரர்களுக்கும் வித்தியாசமான, புதிய அனுபவத்தை வழங்கும்.

கடந்தாண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் போட்டிகளில் குமார் சங்கக்கார டாக்கா டைனமைட் அணிக்காக விளையாடி, துடுப்பாட்டத்தில் அவ்வணிக்காக கூடிய ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், தொடரின்  இறுதிப் போட்டியில் அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று, ஆட்ட நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

அதேபோன்று, கடந்த பல தொடர்களில் அவர் தனது சிறந்த துடுப்பாட்டம் மற்றும் வேறு வகையிலான பங்களிப்புக்களை செய்துள்ளமையே, இந்த தொடரில் அவருக்கு அணியின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளமைக்கு காரணியாக இருக்கலாம்.

பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் சங்கக்காரவின் துடுப்பாட்டம்

போட்டிகள் ஓட்டங்கள் கூடிய ஓட்டம் சராசரி துடுப்பாட்ட வேகம் அரைச் சதம் பவுண்டரிகள் சிக்சர்கள்
13 370 66 28.46 115.62% 2 43 5

இறுதியாக நியுசிலாந்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்மாஷ் T-2௦ போட்டிகளில் சென்ட்ரல் ஸ்டக்ஸ் அணிக்காக விளையாடிய ஜயவர்தன, அத்தொடரில் தனது சிறந்த துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அதில் ஒரு போட்டியில் அவர் 56 பந்துகளுக்கு முகம் கொடுத்து 116 ஓட்டங்களை விளாசியிருந்தார்.கராச்சி கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள மற்றொரு இலங்கை வீரரான மஹேல ஜெயவர்தன உலகளவில் நடைபெறும் பல T-2௦ தொடர்களில் பங்கு பற்றி வருகிறார்.

அந்தப் போட்டி, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுகிடையிலான T-2௦ போட்டியில் இரு அணிகளும் இணைந்து பெற்றிருந்த 489 ஓட்டங்கள் என்ற அதிக ஓட்ட சாதனையை முறியடித்த (497) போட்டியாகவும் இருந்தது.

மேலும், மஹேல அத்தொடரில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைச் சதங்கள் உள்ளடங்கலாக 367 ஓட்டங்களை பெற்று அணியை இறுதிப் போட்டி வரை கொண்டுசெல்ல சிறந்த முறையில் பங்காற்றியிருந்தார்.

அத்தொடரில் மஹேலவின் துடுப்பாட்டம்

போட்டிகள் ஓட்டங்கள் கூடிய ஓட்டம் சாராசரி துடுப்பாட்ட வேகம் சதம் அரைச் சதம் பவுண்டரிகள் சிக்ஸ்சர்கள்
9 367 116 45.87 175.59% 1 2 43 5

கராச்சி கிங்ஸ் அணிஇவர்களைத் தவிர, இலங்கை அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரத்ன தில்ஷான் பெஷாவர் சல்மி அணி சார்பாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ள அதேநேரம், மற்றொரு அதிரடி வீரரான திசர பெரேரா குவெட்டா கிளாடியேட்டர் அணிக்காக சகல துறை ஆட்டக்காரராக இணைந்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல்

சுஹைப் மாலிக், பாபர் ஆஸம், இமாத் வாசிம், முகமது ஆமீர், சொஹைல் கான், சபிஉலா பங்காஷ், ஷசைப் ஹசன், காஷிப் பாட்டி, குர்ராம் மன்சூர், அப்ரார் அகமட், அப்துல் ஹமீட், உஸாமா மீர், ரஹத் அலி, அமத் ஆலம்

வெளிநாட்டு வீரர்கள்

குமார் சங்கக்கார (அணித் தலைவர்), ரவி பொபாரா, கிறிஸ் கெயில், பொல்லார்ட், ரியான் மெக்லரன், மஹேல ஜயவர்தன