LPL தொடரை ஆக்கிரமித்த பந்துவீச்சாளர்கள்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

237

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் நெருக்கடிகளுடன் இந்த வருடத்திற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.

இதன் இறுதிப் போட்டியில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்களினால் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி முதலாவது LPL சம்பியன் பட்டத்தை வென்றது.

இதுஇவ்வாறிருக்க, லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இம்முறை மொத்தம் 252 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. இதில், அதிகபட்சமாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க, 17 விக்கெட்டுக்களை சாய்த்தார்.

>>Video – இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்திய LPL FINAL: |Jaffna Stallions – LPL2020 Champions..!

எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹெட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் மொஹமட் ஆமிர் மாத்திரம் 5 விக்கெட் பிரதியைப் பதிவு செய்தார்.

அத்துடன், நான்கு ஓட்டமற்ற ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டு இருந்தன. இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் வனிந்து ஹசரங்க 2 ஓட்டமற்ற ஓவர்களையும், கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் மொஹமட் ஆமிர் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் அணியின் அசேல குணரட்ன ஆகியோர் தலா ஒரு ஓட்டமற்ற ஓவர்களையும் வீசியிருந்தனர்.

மேலும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் 7 வேகப் பந்துவீச்சாளர்களும், 3 சுழல் பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் 4 உள்நாட்டு வீரர்களும், 6 வெளிநாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளதுடன், முதல் 5 இடங்களில் உள்ள நான்கு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் விளையாடிய ஜப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் க்ளேடியேட்டர்ஸ்  அணிக்காக விளையாடியவர்கள் என்பது சிறப்பம்சமாகும்.

>>LPL தொடரில் துடுப்பாட்டத்தில் ஜொலித்தவர்கள்

இந்த நிலையில், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு முதல் ஐந்து இடங்களைப் பிடித்த பந்துவீச்சாளர்கள் யார்? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

வனிந்து ஹசரங்க (17 விக்கெட்)

ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி இம்முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற வனிந்து ஹசரங்கவின் பங்களிப்பும் முக்கிய காரணமாக இருந்தது. இந்தத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரரும் இவர் தான்.

இவரது கட்டுக்கோப்பான, நெருக்கடியளிக்கும் பந்துவீச்சு ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியை பல முறை தோல்விகளிலிருந்து மீட்டுள்ளது. பந்துவீச்சு சராசரியை 6க்கு கீழே தொடர்ந்து தக்கவைத்து வந்த இவரது ஸ்விங், கூக்ளி போன்ற பந்துகள் ஜப்னா அணியின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.

>>Video – வியாஸ்காந்தின் திறமைக்கு உத்தரவாதம் கொடுத்த Wanindu Hasaranga..!

அத்துடன், தம்புள்ள வைகிங் அணிக்கெதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஒரு ஓட்டமற்ற ஓவர் அடங்கலாக 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் அவர் பதிவுசெய்தார்.

அதேநேரம், கோல் க்ளேடியட்டர்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை எடுத்தார்.

எனவே, இம்முறை LPL தொடரில் 10 போட்டிகளில் விளையாடிய வனிந்து ஹசரங்க, 17 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக இருந்ததுடன், தொடர் நாயகன் விருதினையும் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடருக்குப் பிறகு இலங்கை அணி, தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

>>அடுத்த LPL தொடருக்கு கிழக்கில் இருந்தும் ஒரு அணி

இந்தத் தொடருக்கான இலங்கை அணியில் வாய்ப்பைப் பெற்ற வனிந்து ஹசரங்க முதல்தடவையாக இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். எனவே. ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற வனிந்து, டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தனன்ஜய லக்ஷான் (13 விக்கெட்)

இம்முறை லங்கா ப்ரிமியர் லீக் T20 தொடரில் தொடர்ச்சியாக 5 தோல்விகளை சந்தித்து கடைசி தருவாயில் 2 போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகிய இளம் வீரர்களைக் கொண்ட கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக்கின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொண்டது.

எனினும், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அந்த அணிக்காக பந்துவீச்சில் மிரட்டிய தனன்ஜய லக்ஷான், குறித்த போட்டியில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்து அசத்தியிருந்தார்.

>>Video – LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான Dhananjaya Lakshan..!

முன்னதாக, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் மேலதிக வீரராக இடம்பிடித்த தனன்ஜய லக்ஷான், இறுதியாக நடைபெற்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் அணிகளுடனான லீக் போட்டி மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் திறமைகளை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்.

அரையிறுதிப் போட்டியில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்திய தனன்ஜய லக்ஷான் ஆட்டநாயகனாகவும் தெரிவாகினார்.

அத்துடன், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

காலி றிச்மண்ட் கல்லூரியின் ஊடாக கிரிக்கெட் விளையாட்டுக்கு பிரவேசித்த 22 வயதான தனன்ஜய லக்ஷான், பந்துவீச்சு சகலதுறை வீரர் ஆவார்.

 கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில் மேலதிக வீரராக இடம்பெற்ற அவர், அந்த அணிக்காக இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுக்களை எடுத்து அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். அவரது பந்துவீச்சு சராசரி 8.65 ஆகும்.

>>இலங்கையின் வேகப் புயலாக உருவெடுக்கும் டில்ஷான் மதுஷங்க

இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான டிபாஷிஸ் மொஹட்டியின் பாணியில் பந்துவீசுகின்ற, இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் நுவன் குலசேகரவைப் போல் பந்தை ஸ்விங் செய்கின்ற ஆற்றல் படைத்த தனன்ஜய லக்ஷான், மிக விரைவில் இலங்கை தேசிய அணியில் இடம்பெறுவார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

கைஸ் அஹ்மட் (12 விக்கெட்)

கொழும்பு கிங்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கியவர் ஆப்கானிஸ்தான் வீரர் கைஸ் அஹ்மட். 20 வயதுடைய லெக் ஸ்பின் பந்துவீச்சாளராக இவர் விளங்கினாலும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த வந்த இவர், ஒரேயொரு போட்டியைத் தவிர ஏனைய 8 போட்டிகளில் 6.50 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுக்களை எடுத்தார்.

இதில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கெதிரான லீக் போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

>>Video – புள்ளிப் பட்டியில் முதலிடத்தைப் பெற்றும் ஏமாற்றமே மிஞ்சியது: Angelo Mathews கவலை

அதிலும் குறிப்பாக, தம்புள்ள வைகிங் அணிக்கு எதிராக நடைபெற்ற லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் கடைசி லீக் போட்டியில், 22 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 2 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்கமால் 50 ஓட்டங்களைப் பெற்று கொழும்பு கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இவர் விளையாடிய 9 போட்டிகளில் 12 விக்கெட்டுக்களை வீழ்த்தி அதிக விக்கெட் எடுத்த பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

லக்ஷான் சந்தகன் (12 விக்கெட்)

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றதில் லக்ஷான் சந்தகனுக்கு முக்கிய பங்கு உண்டு.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆரம்பத்தில் சறுக்கிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணி, பிற்பகுதியில் பிரபல அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து இறுதிப் போட்டி வரை நெங்கியது.

கொழும்பு கிங்ஸ் அணியுடன் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் 36 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சந்தகன், துடுப்பாட்டத்தின்போது 20ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் பௌண்டரி ஒன்றை விளாசி அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

>>Video – “வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை இருந்தது” – பானுக ராஜபக்ஷ!

எனினும், துரதிஷ்டவசமாக ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் அந்த அணியின் சம்பியனாகும் கனவு வீண் போனது.

எதுஎவ்வாறாயினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அவ்வப்போது பந்துவீச்சில் பிரகாசித்த லக்ஷான் சந்தகன், 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். அத்துடன், பந்துவீச்சாளர் பட்டியலில் 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

மொஹமட் ஆமிர் (11 விக்கெட்)

பாகிஸ்தான் அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர் இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் கோல் க்ளேடியேட்டர்ஸ் அணிக்காக விளையாடினார். இவர் அவ்வணியின் முக்கிய துருப்புச் சீட்டாகவும் விளங்கினார்.

இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் களமிறங்கிய கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியில், சிரேஷ்ட வீரர்களான லசித் மாலிங்க மற்றும் சஹீட் அப்ரிடி இல்லாத குறையை மொஹமட் ஆமிர் சிறப்பாக நவர்த்தி செய்தார் எனலாம்.

இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் ஆரம்பத்தில் மொஹமட் ஆமிர் சிறப்பாக பந்து வீசவில்லை. ஓட்டங்களை வாரி வழங்கினார். முக்கிய போட்டிகளில் விக்கெட் வீழ்த்தவில்லை.

எனினும், தொடரின் பிற்பகுதியில் சிறப்பாகச் செயற்பட்டு கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

>>“பாகிஸ்தான் தேசிய அணியில் மொஹமட் ஆமிர் இல்லை” – PCB

அதிலும் குறிப்பாக, கொழும்பு கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் 26 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொஹமட் ஆமிர், அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், நடப்பு லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் 5 விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் தான்.

இதேவேளை, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 6 முதல் 10 இடங்கள் வரை முறையே ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் டுவான்னே ஒலிவியர் (10 விக்கெட்), ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உஸ்மான் ஷின்வாரி (9 விக்கெட்), கண்டி டஸ்கர்ஸ் அணியின் அசேல குணரட்ன (9 விக்கெட்), தம்புள்ள வைகிங் அணியின் அன்வர் அலி (9 விக்கெட்) மற்றும் கொழும்பு கிங்ஸ் அணியின் அன்ட்ரே ரஸல் (8 விக்கெட்) ஆகியோர் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர நடப்பு லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் நுவன் ப்ரதீப், துஷ்மன்த சமீர, சுரங்க லக்மால், கசுன் ராஜித்த உள்ளிட்ட இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் பந்துவீச்சில் அசத்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<