இலங்கையின் வேகப் புயலாக உருவெடுக்கும் டில்ஷான் மதுஷங்க

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

408

இலங்கையில் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்ற அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரில் பல இளம் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதில் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வந்த தனன்ஞய லக்ஷான், ரமேஷ் மெண்டிஸ், மினோத் பானுக உள்ளிட்ட வீரர்கள் பிரகாசித்திருந்ததை அவதானிக்க முடிந்தது.

தம்புள்ள வைகிங்கை வீழ்த்திய ஜப்னா ஸ்டாலியன்ஸ் LPL இறுதிப் போட்டியில்

இந்த வீரர்களின் வரிசையில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்காக விளையாடிய 19 வயது நிரம்பிய சுழல்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் தம்புள்ள வைகிங் அணிக்காக விளையாடிய 20 வயது நிரம்பிய வேகப் பந்துவீச்சாளரான டில்ஷான் மதுஷங்க ஆகிய இருவரும் அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டவர்களாக உள்ளனர்.  

அந்த வகையில், தம்புள்ள வைகிங் அணிக்காக அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட டில்ஷான் மதுஷங்க, இம்மாதம் நடைபெறவுள்ள தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடருக்கான 22 பேர் கொண்ட இலங்கை குழாத்திலும் இடம்பிடித்துள்ளார்.  

உள்ளூர் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்திய 20 வயது நிரம்பிய இளம் வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுஷங்க முதல்தடவையாக இலங்கை டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இறுதியாக நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடிய டில்ஷான் மதுஷங்க, இலங்கை கனிஷ்ட அணிக்காக 17 இளையோர் ஒருநாள் போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்

இதனிடையே, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் தம்புள்ள வைகிங் அணியில் இடம்பெற்றிருந்த இவர்,  09ஆம் திகதி நடைபெற்ற கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியுடனான லீக் போட்டியில் முதல்தடவையாகக் களமிறங்கினார்

Video – திசரவின் தரமான Captaincy: கதாநாயகனாக மாறிய Wanindhu Hasaranga..!| LPL 2020 2nd Semi Final Highlights

குறித்த போட்டியில் 2 ஓவர்களை வீசிய அவர், 24 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை எடுத்தார். குறித்த இரண்டு ஓவர்களிலும் அதிக ஓட்டங்களை அவர் விட்டுக்கொடுத்தாலும், 140 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசி அனைவரது பாராட்டையும் பெற்றுக் கொண்டார்

இந்த நிலையில், டில்ஷான் மதுஷங்கவின் பந்துவீச்சு தொடர்பில் எல்.பி.எல் தொடரில் வர்ணனையாளர்களில் ஒருவராக செயற்பட்டு வருகின்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து வெளியிடுகையில்,

”டில்ஷானின் திறமைகள் தொடர்பில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அவர் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளார். அவர் சரியான முறையில் பட்டை தீட்ட வேண்டிய ஒரு இரத்தினக்கல். நாங்கள் தொடர்ந்து அவரை இலங்கை அணியில் வைத்துக் கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்

Video – ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடும் அனுபவத்தை கூறும் வியாஸ்காந்த்!

நாங்கள் அவரை பலப்படுத்த வேண்டும். இன்னும் இரண்டு வருடங்களில் அவர் இலங்கை அணியின் பந்துவீச்சில் அதிரடி வெடிகுண்டாக இடம்பெறுவார் என நாங்கள் நம்புகிறோம்” என அவர் தெரிவித்தார்.

உண்மையில் யார் இந்த டில்ஷான் மதுஷங்க? இவருடைய பின்னணி என்ன? என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.  

கடந்த 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பிறந்த டில்ஷான் மதுஷங்க, ஹுங்கம விஜயா பாடசாலையில் கல்வி கற்றார். ஆரம்பத்தில் அவர் மென்பந்து கிரிக்கெட்டில் மாத்திரம் தான் அதிக விருப்பம் கொண்டவராக இருந்தார்.

எனினும், அந்தப் பாடசாலையின் கிரிக்கெட் பயிற்றுநரான இலங்கரத்னவின் கீழ் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டை ஆரம்பித்த டில்ஷான் 2014 மற்றும் 2015இல் பாடசாலையின் 15 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார்

எனினும், 17 வயதாகும்போது கடினப்பந்தை கைவிட்டு மீண்டும் மென்பந்து கிரிக்கெட்டில் டில்ஷான் ஆர்வம் செலுத்தினார்.

Video – LPL இல் மேலதிக வீரராக இணைந்து ஹீரோவான Dhananjaya Lakshan..!

இதன்போது தான் ஹம்பாந்தோட்டை மாவட்ட கிரிக்கெட் பயிற்றுநர் மஞ்சுள கருணாரத்ன, டில்ஷானிடம் காணப்பட்ட திறமையை இனங்கண்டு அவரை மாவட்ட அணியில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்தார். அங்கு அவர் திறமையை வெளிப்படுத்தியதால் 2018இல் தென் மாகாண கிரிக்கெட் அணிக்கும் தேர்வாகினார்

எனவே மாவட்ட மற்றும் மாகாண அணிகளில் விளையாடி டில்ஷான், கடினப் பந்தில் மீண்டும் விளையாட ஆரம்பித்தார்

எதுஎவ்வாறாயினும், டில்ஷான் மதுஷங்கவிடம் காணப்பட்ட அபரிமிதமான திறமையை அவதானித்த இலங்கை அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளரான சமிந்த வாஸ், அவரை தேசிய அணிக்குள் கொண்டு வருவதற்கு வழிவகைகளை அமைத்துக் கொடுத்தார். இதற்கான ஏற்பாடுகளை டில்ஷானை பயிற்றுவித்த மஞ்சுள கருணாரத்ன முன்நின்று செய்து கொடுத்தார்.  

Video – தனக்கான சந்தர்ப்பத்தினை எதிர்பார்த்துள்ள ”கிளிநொச்சி எக்ஸ்பிரஸ்” விஜயராஜ்

எனவே, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்குத் தேர்வாகிய டில்ஷான் மதுஷங்க, அப்போதைய இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக கடமையாற்றிய சமிந்த வாஸின் மேற்பார்வையின் கீழ் பயிற்சிகளை முன்னெடுத்தார்.

இதன் பிரதிபலனாக அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆசிய கிண்ணம் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் உள்ளிட்ட தொடர்களில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்து விளையாடினார்.

எனவே, இடதுகை வேகப் பந்துவீச்சாளராக இவ்வருட ஆரம்பத்தில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியில் இடம்பிடித்து டில்ஷான் மதுஷங்க விளையாடினார்

குறித்த தொடரில் இந்திய அணியுடன் நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஷாஸ்வி ஜெய்ஸ்வாலின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

அதன்பிறகு நியூசிலாந்து அணிக்கெதிரான போட்டியில் அந்த அணியின் தலைவர் ஜெஸ்ஸி டஸ்கோப்பின் விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து ஜப்பான் அணிக்கெதிரான போட்டியிலும் 2 விக்கெட்டுக்களை டில்ஷான் கைப்பற்றினார்.  

Video – சங்காவின் மறு அவதாரமா Danushka? அப்ரிடி வெளியிட்ட Tweet..!

எனினும், இளையோர் உலகக் கிண்ணத்தில் சுப்பர் 8 சுற்றில் விளையாடும் வாய்ப்பு இலங்கை அணிக்கு கிடைக்காவிட்டாலும், கேடயத்திற்கான பிரிவில் இலங்கை அணி விளையாடியது

இதன் காலிறுதிப் போட்டியில் நைஜீரியா இளையோர் அணி 76 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதில் இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் மிரட்டிய டில்ஷான் மதுஷங்க 36 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை எடுத்து தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இதனையடுத்து ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டி ஆகியவற்றில் தலா 2 விக்கெட்டுக்களை டில்ஷான் கைப்பற்றினார்

எனவே ஆறு போட்டிகளில் 13 விக்கெட்டுக்களை எடுத்த அவர், இளையோர் உலகக் கிண்ணத்தில் அதிக விக்கெட்டுக்களை எடுத்த 5ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.

முன்னதாக நடைபெற்ற ஆசிய கிண்ண இளையோர் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுக்களை எடுத்த அவர், 2019இல் பாகிஸ்தான் இளையோர் அணிக்கெதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தார்.  

PSL ஐ விட LPL பௌண்டரி எல்லை பெரியது – சொஹைப் மலிக்

இதனையடுத்து கடந்த வருடம் தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வளர்ந்துவரும் அணியில் இடம்பிடித்த அவர், இவ்வருட முற்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியிலும் இடம்பிடித்தார்

குறித்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ப்ரெண்டன் கிங், கிரென் பொல்லார்ட் மற்றும் ஜேசன் ஹோல்டர் உள்ளிட்ட வீரர்களின் விக்கெட்டுக்களை எடுத்து அசத்தினார்

எனவே மிகவும் குறுகிய காலத்தில் பந்துவீச்சில் மிரட்டி அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்ட டில்ஷான் மதுஷங்க, அண்மையில் நிறைவுக்கு வந்த முதல்தர கழங்களுக்கிடையிலான 3 நாட்கள் கொண்ட போட்டியில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துக்காக அறிமுகத்தைப் பெற்று விளையாடியிருந்தார்.

நீர்கொழும்பு விளையாட்டுக் கழத்துக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அவர், முதலாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் எடுத்து அசத்தியிருந்தார்.

Video – LPL தொடரில் பங்கேற்கும் நான்கு சகோதர ஜோடிகள்…!

முதல்தரப் போட்டிகளில் இதுவரை 10 விக்கெட்டுக்களை கைபற்றியுள்ள டில்ஷான், இறுதியாக நடைபெற்ற கழகங்களுக்கிடையிலான 23 வயதுக்குட்பட்ட ஒருநாள் போட்டியில் சரசென்ஸ் கழகத்துடன் விளையாடியிருந்தார்.   

குறித்த போட்டியில் 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை எடுத்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, வேகப்பந்துவீச்சில் தொடர்ந்து பிரகாசித்து வருகின்ற டில்ஷான் மதுஷங்க, எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியின் முக்கிய துரும்புச் சீட்டாக இருப்பார் என்பதில் எந்தவொரு சந்தேகமுமில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<