அடுத்த LPL தொடருக்கு கிழக்கில் இருந்தும் ஒரு அணி

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

1452

இந்த ஆண்டுக்கான (2020) லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடர் நேற்று (16) வெற்றிகரமான முறையில் நிறைவுக்கு வந்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கான LPL தொடர் ஆறு அணிகளின் பங்கேற்போடு இடம்பெறவிருப்பதாக தொடரின் இயக்குனர் ரவின் விக்ரமரட்ன இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ YouTube சேனலுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதன்படி, அடுத்த ஆண்டுக்கான LPL தொடரில் பங்கேற்கும் ஆறாவது அணி இலங்கையின் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணியாக இருக்கும் என்றும் ரவின் விக்ரமரட்வினால் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவம் செய்கின்ற அணி கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலையினை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

அதேவேளை, ரவின் விக்ரமரட்ன அடுத்த ஆண்டுக்கான LPL தொடரில் கிறிஸ் கெயில்,  பாப் டு ப்ளேசிஸ், ஏபி.டி.வில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்களை பங்குபெறவைத்து இந்த தொடரினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

மேலும், ரவின் விக்ரமரட்னவின் கூற்றுக்கு அமைய அடுத்த ஆண்டுக்கான LPL தொடர் ஜூலை மாதம் 27ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம், நடைபெற்று முடிந்த LPL தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கிளேடியேட்டர்ஸ் அணியினை வீழ்த்தி திசர பெரேரா தலைமையிலான ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<