நாட்டின் சகல விளையாட்டுப் போட்டிகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு

212

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சகல உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளையும், பயிற்சிகளையும் பிற்போடுமாறு பாதுகாப்பு அமைச்சினால் நாட்டிலுள்ள அனைத்து விளையாட்டு சங்கங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதிர்த்த ஞாயிறு (EASTER SUNDAY – 21) காலை இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களில் இதுவரையில் பெரும் தொகையினர் பலியாகியுள்ளதோடு, 500 பேர் வரையில் காயமடைந்தனர். இதில் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற தாக்குதல்களினால் 12 நாடுகளைச் சேர்ந்த 40 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  

உதிர்த்த ஞாயிற்றுக் கிழமையின் கொடூரங்களை நினைவு கூறும் தசுன் சானக்க

உதிர்த்த ஞாயிறு காலை ……..

இதுஇவ்வாறிருக்க, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெறவிருந்த அனைத்து விளையாட்டுப் போட்டிகளையும் இடைநிறுத்துவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. அத்துடன், பெரும்பாலான சர்வதேசப் போட்டிகளையும் காலவரையறையின்றி பிற்போடுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதில், உதிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி காலை நுவரெலியாவின் வசந்த கால நிகழ்வுகளையொட்டி நுவரெலியா குதிரைப் பந்தயத்திடலில் நடைபெற இருந்த வருடாந்த குதிரைப் பந்தயப் போட்டிகள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. அத்துடன், 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த நுவரெலியா மோட்டார் வாகன மற்றும் மோட்டார் சைக்கிளோட்டப் போட்டிகளையும் பிற்போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.    

அதேபோல, இம்முறை உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படவிருந்த அதிரடிப்படையின் 3 நாட்கள் கொண்ட அணி இணைப்பு விசேட பயிற்சிகள் மற்றும் தம்புள்ளையில் நடைபெற இருந்த 5 நாட்கள் கொண்ட வதிவிடப் பயிற்சிகள் என்பன கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாக இருந்தன. எனினும், நாட்டின் பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு குறித்த பயிற்சிகள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இரத்து செய்யப்பட்டது.

எனினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பில் வைத்து இலங்கை வீரர்கள் தமது பயிற்சிகளை முன்னெடுத்திருந்ததாக கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இரத்துச் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை

உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட ……..

இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியுடனான போட்டித் தொடரை பிற்போடுவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கிடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மே மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவிருந்தது.

குறித்த தொடரில் பங்கேற்பதற்காக 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த 30ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று, இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் மிகப் பெரிய தொடர்களில் ஒன்றான, வான்டேஜ் எப்.ஏ கிண்ண தொடர் கடந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகியது. அதன் ஆரம்ப கட்டமான லீக் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நாட்டின் பல பகுதிகளிலும் இடம்பெற்று வந்தன.

எனினும், 21ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து, கால்பந்து போட்டிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டன. அதேபோன்று, கால்பந்து தொடர்பிலான போட்டிகள், கூட்டங்கள் எதனையும் நடாத்த வேண்டாம் என்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவித்திருந்தார்.

“வன்டேஜ் எப்.ஏ கிண்ணம் 2019” நாளை ஆரம்பம்

இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த கால்பந்து ……..

இந்நிலையில், நாட்டில் உள்ள அச்ச நிலைமை நீங்கி ஒரு சுமுகமான நிலை ஏற்படுமாயின் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் மீண்டும் கால்பந்து போட்டிகளை நடாத்துவதற்கு உத்தேசித்துள்ளதாக ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 22ஆம் திகதி ஆரம்பமாக இருந்த பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டித் தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் முதலாவது வாரத்துக்கான லீக் ஆட்டங்களையும் பிற்போடுவதற்கு இலங்கை பாடசாலைகள் றக்பி சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அத்துடன், இலங்கையின் பிரபல பாடசாலைகளான கொழும்பு றோயல் மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரிகளுக்கிடையில் நடைபெறுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பிரட்பி கேடய றக்பி போட்டிகளையும் பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்ற குறித்த போட்டிகள் எதிர்வரும் மே மாதம் 11ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், கடந்த 27ஆம் திகதி நடைபெற இருந்த தேசிய வயது நிலை நீச்சல் சம்பியன்ஷிப் போட்டித் தொடரையும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி நடத்துவதற்கு போட்டி ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி பாசிக்குடாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட டீகப் சர்வதேச சைக்கிளோட்ட சவாரியை பிற்போடுவதற்கு ஏற்பாட்டுக் குழு நடவடிக்கை எடுத்தது.

சர்வதேச சைக்கிளோட்ட சம்மேளனத்தின் பூரண அனுமதியுடன் இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தெற்காசியாவில் உள்ள முன்னணி சைக்கிளோட்ட வீரர்களின் பங்குபற்றலுடன் வருடந்தோறும் நடத்தப்படுகின்ற குறித்த சைக்கிளோட்ட போட்டியில் 11 சர்வதேச சைக்கிளோட்ட அணிகள் பங்குபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இளையோர் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக்…

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. எனவே, இனிவரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து விசேட அனுமதியொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேநேரம், பாதுகாப்பு காரணமாக பிற்போடப்பட்ட போட்டிகளை மீண்டும் நடத்துவது குறித்த விசேட கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, இவ்வருடத்துக்கான தேசிய விளையாட்டு விழாவுக்கான மாவட்ட மட்டப் போட்டிகள் உரிய தினங்களில் நடைபெறும் என தெரிவித்த விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் அடுத்த வாரம் நடைபெறவுள்ள போட்டிகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பிலான இறுதி முடிவு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையினை அடுத்து அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உடற்பயிற்சி மற்றும் கல்விப் பிரிவின் ஆலோசகர் சுனில் ஜயவீர தெரிவித்தார்.

இம்முறை அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவை ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குமுன் மாவட்ட மற்றும் மாகாண மட்டப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இவ்வனைத்துப் போட்டிகளும் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இரண்டாம் தவணையுடன் ஆரம்பமாகவுள்ளன. எனினும், நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு அந்தப் போட்டிகளை நடத்துவது குறித்த இறுதி அறிவிப்பு இன்னும் ஒருசில வாரங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம், எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவிருந்த 4 ஆயிரம் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் வைபவமும் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறிருக்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்திற்கொண்டு நேற்றுமுன்தினம் (30) நடைபெறவிருந்த தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை கூட்டத்தை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடத்துவதற்கு தேசிய ஒலிம்பிக் சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

>> இலங்கை அணிக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.சி.சியிடம் கோரிக்கை

இலங்கைத் தரப்பில் இவ்வாறு இருக்க, குறித்த தீவிரவாத தாக்குதலையடுத்து இலங்கைக்கு செல்ல வேண்டாமென பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பல்வேறு வெளிநாட்டு அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடுவதை தவிர்த்துக் கொண்டுள்ளதாக பெரும்பாலான விளையாட்டு சங்கங்கள் கவலை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த பிறகு நியூசிலாந்து, பங்களாதேஷ் ஆகிய கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருந்தன. அதேபோல, அடுத்த வருட முற்பகுதியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்தது. எனினும், தற்போதைய நிலையில் குறித்த தொடர்களும் ரத்தாகலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

சுமார் 10 வருடங்களுக்கு முன், அதாவது 2009ஆம் ஆண்டு இலங்கை அணி, பாகிஸ்தான் சென்றபோது அங்கு தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது. இதனையடுத்து கடந்த 10 வருடங்களாக பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கு எந்தவொரு சர்வதேச அணியும் முன்வரவில்லை. அதுமாத்திரமின்றி, குறித்த தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் உலகில் மாத்திரமல்லாது அனைத்து விளையாட்டுக்களில் இருந்தும் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினால் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிராத்தனை செய்கிறோம்.

>> மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க <<