உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இரத்துச் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை

277

உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் குழாத்திற்கு வழங்கப்படவிருந்த மூன்று நாட்கள் கொண்ட ஹபரன மாதுரு ஓயா விஷேட அதிரப்படை முகாமின் அணி இணைப்பு (Team Bonding) பயிற்சிகள் மற்றும் தம்புள்ளை மைதானத்தின் ஐந்து நாட்கள் கொண்ட வதிவிட பயிற்சிகள் என்பன இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

லசித் மாலிங்க உலகக் கிண்ணத்தில் முக்கிய வீரராக அமைவார்: வாஸ்

அண்மைக்காலமாக ஐ.பி.எல். உள்ளடங்களாக…

உதிர்த்த ஞாயிற்றுக்கிழமை (21) அன்று இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்கள் என்பவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடாத்திய தாக்குதல்களினால் இதுவரையில் 350 இற்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதோடு, 500 இற்கு மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த கொடூர தற்கொலை தாக்குதல் சம்பவங்களை கருத்திற் கொண்டே இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வழங்கப்படவிருந்த பயிற்சிகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

அதேநேரம் இந்த தொடர் தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களில் தெற்காசியாவில் அதிக உயிர்களை காவு வாங்கிய நிகழ்வாகவும் பதிவாகியிருக்கின்றது. இலங்கை நாட்டையே  மொத்தமாக உலுக்கியுள்ள இந்த கொடூர சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை கிரிக்கெட் குழாம் பெற்றுக்கொள்ளவிருந்த  ஹபரன மாதுரு ஓயா விஷேட அதிரப்படை  முகாத்தின் அணி இணைப்பு பயிற்சிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருந்ததோடு, தம்புள்ளை மைதானத்தின் வதிவிட பயிற்சிகள் அதனை அடுத்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களால் உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இழந்திருக்கும் இலங்கை அணி, வருகின்ற மே மாதம் 07ஆம் திகதி உலகக் கிண்ணம் நடைபெறும் இங்கிலாந்து நாட்டிற்கு பயணமாகின்றது.

இங்கிலாந்து சென்ற பின்னர், இலங்கை அணிக்கு உலகக் கிண்ணத்தில் தாம் விளையாடும் முதல் போட்டிக்கு முன்னர் மூன்று வாரங்கள் எஞ்சியிருக்கின்றன. அதன்படி, குறித்த காலப்பகுதிக்குள் இங்கிலாந்து நிலைமைகளுக்கு தங்களை இசைவாக்கி உலகக் கிண்ணத்தில் ஜொலிக்க இலங்கை அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் உலகக் கிண்ணத்திற்கு முன்னதாக இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் ஆடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில், 2015 ஆம் ஆண்டே ஒரு நாள் போட்டிகளில் ஆடிய திமுத் கருணாரத்னவினால் வழிநடாத்தப்படும் இலங்கை அணி தமது முதல் மோதலில் நியூசிலாந்து அணியினை ஜூன் மாதம் 01ஆம் திகதி கார்டிப் நகரில் வைத்து எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<