FIFA தரவரிசை வெளியீடு : வரலாற்றில் இலங்கைக்கு மிகப் பெரிய சரிவு

1325
Latest FIFA rankings

சர்வதேச கால்பந்து சம்மேளத்தின் (FIFA) தரவரிசையில் உலகக் கிண்ண நடப்புச் சம்பியன் ஜெர்மனி கால்பந்து அணி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு, இலங்கை கால்பந்து அணி வரலாற்றில் தனது மோசமான தரநிலைக்கு சரிந்துள்ளது.  

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் அனைத்தும் முடிவுற்று அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் தேர்வாகி இருக்கும் நிலையில் FIFA தரவரிசை நேற்று (23) புதுப்பிக்கப்பட்டது. இதில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் பலம் மிக்க அணிகளும் தமது இடங்களை அவ்வாறே தக்க வைத்துக்கொண்டன.

நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16)…

ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் இருப்பதோடு 2016 ஐரோப்பிய சம்பியன் கிண்ணத்தை வென்ற போர்த்துக்கல் மூன்றாவது இடத்தில் நிலைகொண்டுள்ளது. இம்முறை உலகக் கிண்ணத்திற்கு கடும் நெருக்கடியுடன் தகுதி பெற்ற ஆர்ஜென்டினா நான்காவது இடத்திலும், பெல்ஜியம் ஐந்தாவது இடத்திலும் நீடிக்கின்றன.

எனினும் தரவரிசையின் முதல் 10 இடங்களில் சில மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்பெயின் இரண்டு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்ததோடு சுவிட்சர்லாந்து மூன்று இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு வந்துள்ளது.  

குறிப்பாக ஐரோப்பிய மண்டல பிளே ஓப் (play-off)  தகுதிகாண் போட்டிகளில் வெற்றியீட்டிய சுவிட்சர்லாந்துடன் டென்மார்க் 7 இடங்கள் முன்னேறி 12ஆவது இடத்திற்கும், குரேசியா ஒரு இடம் முன்னேறி 17 ஆவது இடத்திற்கும் சுவீடன் 7 இடங்கள் முன்னேறி 18 ஆவது இடத்திற்கும் ஏற்றம் கண்டன.

நான்கு முறை உலக சம்பியனான இத்தாலியை பிளோ ஓப் போட்டியில் வீழ்த்தி உலகக் கிண்ணத்திற்கு முன்னேறிய சுவீடன் அணி இந்த மாதத்தில் FIFA தரவரிசையில் அதிக தரநிலைப் புள்ளிகளை பெற்ற அணியாக உள்ளது. மொத்தம் 998 புள்ளிகளை பெற்றிருக்கும் சுவீடன் இந்த மாதத்தில் அதிகபட்சமாக 126 புள்ளிகளை பறித்துக்கொண்டது.         

60 ஆண்டுகளில் முதல் முறையாக இம்முறை உலகக் கிண்ணத்திற்கு இத்தாலி தகுதி பெறாதபோதும் அவ்வணி தரவரிசையில் ஒரு இடம் முன்னேற்றம் கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலி தற்போது 14ஆவது இடத்தில் உள்ளது.

FIFA உலகக் கிண்ணத்தில் ஆடும் 32 அணிகளும் இவைதான்

நியூசிலாந்துடனான இரண்டாவது கட்ட பிளே ஓப்..

எனினும் இங்கிலாந்து அணி இத்தாலியை விடவும் கிழே சரிந்துள்ளது. இந்த மாதத்தில் உலக சம்பியன் ஜெர்மனி மற்றும் பிரேசில் அணிகளுடனான நட்புறவுப் போட்டிகளை இங்கிலாந்து சமன் செய்த போதும் அந்த அணி தரவரிசையில் மூன்று இடங்கள் சரிந்து 15ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் இங்கிலாந்தின் மோசமான தரநிலை இதுவாகும்.  

FIFA தரவரிசையில் முதல் 20 இடங்களில் இருக்கும் அணிகளில் நான்கு அணிகள் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண போட்டிக்கான தகுதியை இழந்துள்ளன. இத்தாலியுடன் தற்போது 10 ஆவது இடத்தில் உள்ள சிலி, 19ஆவது இடத்தில் இருக்கும் வேல்ஸ் மற்றும் 20ஆவது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து அணிகளே உலகக் கிண்ண வாய்ப்பை பெறாமல் உள்ளன.  

எனினும் இந்த மாத தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட அணியாக ஆபிரிக்காவின் செனகல் உள்ளது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக இரண்டு வெற்றிகளைப் பெற்று உலகக் கிண்ண போட்டிக்கு தகுதிபெற்ற செனகல் அதிரடியாக ஒன்பது இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தை பெற்றுள்ளது. இது செனகலின் சிறந்த தரநிலையாகும்.

2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறை உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றிருக்கும் செனகல் தரவரிசையில் ஆபிரிக்காவில் முதலிடத்தில் இருக்கும் அணியாக மாறியுள்ளது. முன்னர் ஆபிரிக்காவின் சிறந்த தரநிலையை பெற்ற அணியாக இருந்த துனீஷியா ஒரு இடம் முன்னேறி 27 ஆவது இடத்தில் உள்ளது.   

அடுத்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறாத மற்றொரு முக்கிய அணியான அமெரிக்காவும் மூன்று இடங்கள் ஏற்றம் கண்டு தற்போது 24ஆவது இடத்தில் உள்ளது.

சமநிலையான போட்டி முடிவுடன் ஒற்றுமைக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில்..

தவிர 2 இடம் முன்னேறி 82ஆவது இடத்தை பிடித்த பலஸ்தீன், 9 இடங்கள் முன்னேறி 84ஆவது இடத்தை பெற்ற லக்செம்பேர்க் மற்றும் 8 இடங்கள் முன்னேற்றம் கண்டு 135ஆவது இடத்திற்கு வந்த சைனீஸ் தாய்பே அணிகள் தமது சிறந்த தரநிலையை பெற்றுக்கொண்டன.

எவ்வாறாயினும் கடந்த பல மாதங்களாக எந்த ஒரு சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடாதபோதும் இலங்கை கால்பந்து அணி  FIFA தரவரிசையில் மேலும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த மாதம் 198ஆவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது இரண்டு இடங்கள் சரிந்து 200ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதன்படி தற்பொழுது இலங்கை அணியின் தரநிலைப் புள்ளிகளும் 11 புள்ளிகளால் குறைந்து 16 ஆக உள்ளது. 1993ஆம் ஆண்டு FIFA தரவரிசை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து இலங்கை அணியின் மிக மோசமான பின்னடைவு இதுவாகும்.

இந்த ஆண்டு முழுவதிலும் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் ஆடாத இலங்கை கால்பந்து அணி ஜனவரி மாதத்தில் 196ஆவது இடத்தில் இருந்து தற்போது நான்கு இடங்கள் சரிவை சந்தித்துள்ளது.  

இலங்கை கால்பந்து அணி இறுதியாக கடந்த வருடம் இறுதிப் பகுதியில், ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஒற்றுமைக் கிண்ண (Solidarity Cup) கால்பந்து சுற்றுத் தொடரில் பங்கு கொண்டது. குறித்த தொடரில் இலங்கை எந்தவொரு வெற்றியையும் றெவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் கடைசியாக 2017 டிசம்பர் 21ஆம் திகதி FIFA தரவரிசை புதுப்பிக்கப்படவுள்ளது.