சமநிலையான போட்டி முடிவுடன் ஒற்றுமைக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறும் இலங்கை அணி

969
SL v Macau
Photo: Lagardère Sports

ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெறும் ஒற்றுமைக் கிண்ண கால்பந்து சுற்றுத் தொடரில் இன்று இடம்பெற்ற இறுதி குழுநிலைப் போட்டியில் இலங்கை அணியும் மக்காவு அணியும் மோதிக் கொண்டன. மலேஷியாவின் நெஜரி காற்பந்து மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியை இலங்கை அணி சம்பூர்ணமாக ஆதிக்கம் செலுத்திய போதிலும், போட்டி நிறைவடையும் தருவாயில் மக்காவு அணி பெற்றுக் கொண்ட கோலினால் ஆட்டம் 1-1 என்ற அடிப்படையில் சமநிலையில் நிறைவடைந்தது.

கடந்த இரண்டு போட்டிகளிலும் முறையே லாவோஸ் (2-1) மற்றும் மொங்கோலிய (2-0) அணிகளுடன் தோல்வியை தழுவியிருந்த இலங்கை, அரையிறுதி வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்தது. எனினும் சுற்றுத்தொடரை சிறப்பான முறையில் நிறைவு செய்யும் நோக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

ஆரம்பம் முதலே மிகவும் சுதந்திரமாக ஆடிய இலங்கை வீரர்கள் சிறப்பான திறமையை வெளிக்காட்டினர். முக்கியமாக நடுக்கள வீரர்கள் சர்வான் ஜொஹார் மற்றும் மொஹமட் ரிப்னாஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

வலப்புற தடுப்பாளர் நிலையில் விளையாடிய சலன சமீர தனது வேகமான விளையாட்டு பாணியினால் அணிக்கு நம்பிக்கையளித்ததுடன், களத்தின் வலப்பக்கத்தில் ஆடுதல் இலங்கைக்கு வினைத்திறன் மிக்கதாக காணப்பட்டது.

இவ்வாறானதொரு நகர்வின் மூலம் மொஹமட் ரிப்னாஸிடமிருந்து பந்தை பெற்றுக் கொண்ட கவிந்து இஷான் அசத்தலான முறையில் கோல் ஒன்றைப் பெற்று இலங்கையை முன்னிலைக்கு இட்டுச் சென்றார். முதல் பாதியில் இலங்கை தொடர்ந்து தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மற்றுமொரு கோலைப் பெற்றுக் கொள்ள இயலவில்லை.

அஸிகுர் ரஹ்மான் தவறவிட்ட வாய்ப்பு உள்ளடங்கலாக பல இலகுவான வாய்ப்புகளை இலங்கை தவறவிட்ட நிலையில் முதல் பாதி 1-0 என்று நிறைவுற்றது.

முதல் பாதி : இலங்கை 01 – 00 மக்காவு

இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் தீவிரம் சற்று குறைந்த போதிலும், இலங்கை போட்டியை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தது. 62 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைத்த போதிலும், மக்காவு கோல் காப்பாளர் கவிந்து இஷானின் உதையை சிறப்பான முறையில் தடுத்தார். காப்பாளரின் தடுப்பிலிருந்து மீண்டு வந்த பந்தை சங்க தனுஷ்க மீள்தாக்கிய போதிலும், இம்முறை பந்து கம்பத்தில் பட்டு களத்தின் வெளியே சென்றது.

மக்காவு அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதுடன் பந்தை சிறப்பான முறையில் கைமாற்ற தவறியதால் பந்தை தம்வசம் வைத்திருக்க முடியாமல் தடுமாறியது. இலங்கை அணியின் விவேகமான மற்றும் துரிதமான தடுப்பாட்டம் இதற்கு காரணமாகும்.

எனினும் சற்றும் எதிர்பாராத விதமாக போட்டியின் 86 ஆவது நிமிடத்தில், இலங்கை பின்கள வீரர்களின் மந்தமான பந்து பரிமாறலை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாய் வெய் ஹொங், மக்காவு அணியின் முதல் கோலை பெற்றுக் கொடுத்தார்.

இறுதி நிமிடங்களில் ஆட்டத்தை தீவிரப்படுத்திய இலங்கை வீரர்கள் கோல் ஒன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சி செய்த போதிலும் பலனளிக்கவில்லை. இதன்படி இலங்கை வீரர்களின் பலத்த ஏமாற்றத்துடன் போட்டியும் சுற்றுத்தொடரும் நிறைவுக்கு வந்தன. எனினும் இன்றைய தினம் இலங்கை அணி வெளிக்காட்டிய ஆக்ரோஷமான மற்றும் புத்துணர்ச்சி மிக்க ஆட்டம் பாராட்டத்தக்கது.

முழு நேரம் : இலங்கை 01 – 01 மக்காவு

போட்டி நிறைவடைந்ததன் பின்னர் கருத்து தெரிவித்த இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் டட்லி ஸ்டைன்வோல், “நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தோம். எனினும் இத்தொடரில் அதிர்ஷ்டம் எம் பக்கம் இருக்கவில்லை. எமக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும், அவற்றில் ஒரு வாய்ப்பையே எம்மால் கோலாக மாற்ற முடிந்தது. இதன் காரணமாகவே எம்மால் வெற்றி பெற இயலவில்லை. எவ்வாறாயினும் எமது வீரர்கள் அடைந்த முன்னேற்றம் குறித்து நான் பெருமையடைகிறேன்” எனத் தெரிவித்தார்.

கோல் பெற்றுக் கொண்டவர்கள்

இலக்கை – கவிந்து இஷான் (5 ஆவது நிமிடம்)

மக்காவு – சாய் வெய் ஹொங் (86 ஆவது நிமிடம்)