இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கிறதா? – கிரிஸ் சில்வர்வூட்!

Sri Lanka tour of India 2023

346
Chris Silverwood press

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடர்பில் தான் கவலையடையவில்லை என தலைமை பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (10) நடைபெற்றது. இந்தப்போட்டியில் இலங்கை அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

>> சாமிக்க, மதுசங்கவுக்கு உபாதை! ; இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

இந்தப்போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் ஏமாற்றத்தை கொடுத்ததா? என்பது தொடர்பில் கிரிஸ் சில்வர்வூட் குறிப்பிட்டுள்ளார்.

“தசுன் ஷானக சிறந்த ஓட்டக்குவிப்புடன் உள்ளார். அதனால் அவர் பிரகாசிக்கின்றார். பெதும் நிஸ்ஸங்கவும் ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். அதேநேரம் பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனன்ஜய டி சில்வா அகியோர் இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பெற்றனர். இந்த இணைப்பாட்டம் எமக்கு ஒரு ஆரம்பத்தை கொடுத்தது.

துடுப்பாட்டத்தில் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய பிரகாசிப்பை கொடுக்கின்றனர். எனவே துடுப்பாட்டத்தை நினைத்து நான் கவலையடையவில்லை. ஆனால், இதுபோன்ற ஆடுகளங்களில் மேலும் பிரகாசிக்கவேண்டும். இணைப்பாட்டங்களை கட்டியெழுப்பவேண்டும். அதனை சரிசெய்யவேண்டும்” என்றார்.

அதேநேரம் குவஹாடி மைதானத்தை போன்று துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான மைதனங்களில் விராட் கோஹ்லி போன்ற துடுப்பாட்ட வீரரின் பிடியெடுப்பை தவறவிடுவது அணிக்கு பின்னடைவை கொடுக்கும் எனவும் சுட்டிக்காட்டினார்.

“இந்தப்போட்டியில் அதிக ஓட்டங்கள் இருக்கும் என்பது தெரியும். அவ்வாறான நிலையில் பிடியெடுப்புகளை தவறவிடுவது மிகவும் கஷ்டங்களை ஏற்படுத்தும். விராட் கோஹ்லி போன்ற திறமைவாய்ந்த துடுப்பாட்ட வீரர் கொடுக்கும் வாய்ப்பினை நாம் பிடித்துக்கொள்ள வேண்டும்.

முதலில் விராட் கோஹ்லி அற்புதமாக ஆடினார். அவர் கொடுத்த வாய்ப்புகளை பயன்படுத்தியிருந்தால், போட்டியில் மாற்றங்கள் இருந்திருக்கலாம்” என்றார்.

இதேவேளை இலங்கை அணி இந்தப்போட்டியில் எங்கு தவறுசெய்திருந்தது என்பதையும் இவர் மேலும் குறிப்பிட்டார். “நாம் போட்டியில் சிறந்த ஆரம்பத்தை பெறவில்லை. முதல் 10 ஓவர்களில் எம்முடைய பந்துவீச்சில் நேர்த்தி இருக்கவில்லை. இந்திய அணி மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொள்ள வைத்திருந்தோம். இதுவொரு அதிக ஓட்டங்களை பெறவேண்டிய மைதானம். எனவே சிறந்த ஆரம்பத்தை பெறவேண்டும் என்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கும்.

இந்த ஆரம்பத்தை அவர்கள் எடுத்துச்சென்றனர். நாம் அதனை நிறுத்துவதற்கான விடயங்களை செய்திருக்கவேண்டும். ஒருசில தருணங்களில் நாம் இதனை செய்தோம். எனினும் இந்தியா போன்ற சிறந்த துடுப்பாட்ட வரிசை இருக்கும்போது அவர்களை தடுப்பது கடினம்” என்றார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி வியாழக்கிழமை (12) கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<