சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக தரவரிசையில் நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி தனது முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக சர்வதேச அளவில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் மற்றும் நட்புறவு போட்டிகளின் முடிவுகள் அடிப்படையிலேயே தரவரிசையில் புதிய மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
எனினும் உலக தரவரிசையின் முதல் ஆறு இடங்களிலும் எந்த மாற்றமும் இடம்பெறவில்லை. ஜெர்மனிக்கு அடுத்து பிரேசில், போர்த்துக்கல், ஆர்ஜன்டீனா, பெல்ஜியம் மற்றும் போலந்து அணிகள் முறையே 2 முதல் 6 ஆவது இடம் வரை நீடிக்கின்றன.
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் அதிக பலம் கொண்ட அணியாக பார்க்கப்படும் பிரான்ஸ் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அண்டை நாடான ஸ்பெயின் மூன்று இடங்கள் முன்னேற்றம் கண்டதால் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்து 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
கோபா அமெரிக்கா கிண்ணத்தில் அடுத்தடுத்து நடப்பு சம்பியனாக வலம்வரும் சிலி 9 ஆவது இடத்தில் நீடிக்கிறது. உலகக் கிண்ண கால்பந்து தகுதிகாண் போட்டியில் தென் அமெரிக்க மண்டலத்தில் 6 ஆவது இடத்தை பெற்ற சிலி அடுத்த ஆண்டு உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை FIFA உலக தரவரிசையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பேரு அணி செய்துள்ளது. தரவரிசையில் இரண்டு இடங்கள் முன்னேறிய பேரு முதல் முறை முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. 10 ஆவது இடத்தை பிடித்திருக்கும் பேருவின் சிறந்த தரநிலை இதுவாகும்.’
சக வீரருடன் மோதி இந்தோனேஷிய கோல் காப்பாளர் திடீர் மரணம்
உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் தென் அமெரிக்க மண்டலத்தில் ஐந்தாவது இடத்தை பெற்ற பேரு அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற நியூசிலாந்துடன் பிளே ஓப் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவில் இங்கிலாந்து 3 இடங்கள் முன்னேறி 12 ஆவது இடத்திற்கும், டென்மார்க் 7 இடங்கள் முன்னேறி 19 ஆவது இடத்திற்கும் ஸ்கொட்லாந்து 14 இடங்கள் முன்னேறி 29 ஆவது இடத்திற்கும் ஏற்றம் கண்டுள்ளன. சுவிட்சர்லாந்து முதல் 10 இடங்களில் இருந்து 4 இடங்கள் சரிந்து தற்போது 11 ஆவது இடத்தில் உள்ளது.
தரவரிசையில் முதல் 50 இடங்களுக்குள் முன்னேறிய அணிகளில் ஆஸ்திரியாவும் இடம்பிடித்துள்ளது. 18 இடங்கள் முன்னேறிய அந்த அணி 39 ஆவது இடத்தில் இருப்பதோடு செக் குடியரசு (46), மொரோக்கோ (48) மற்றும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற பனாமா (49) அணிகளும் தர வரிசையில் முன்னேற்றம் அடைந்துள்ளன.
பேரு தவிர மேலும் நான்கு அணிகள் தனது சிறந்த FIFA உலக தரநிலையை இம்முறை பெற்றுள்ளன. பலஸ்தீன் 7 இடங்கள் முன்னேறி தனது சிறந்த தரநிலையான 84 ஆவது இடத்தைப் பெற்றதோடு லக்சம்பேர்க் 8 இடங்கள் முன்னேறி 93 ஆவது இடத்திற்கும் கொமரோஸ் 127 ஆவது இடத்திற்கும், சைனீஸ் தாய்ப்பே 143 ஆவது இடத்திற்கும் ஏற்றம் கண்டு தனது சிறந்த தரநிலையை பெற்றுள்ளன.
எனினும் துர்க்மனிஸ்தான் அணியே இம்மாத தரநிலையில் அதிக இடங்கள் முன்னேறிய அணியாகும். அந்த அணி 22 இடங்கள் முன்னேற்றம் கண்டு 114 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
ஆபிரிக்காவின் சிறந்த தரவரிசை அணியாக இருந்த எகிப்தை பின்தள்ளி தியூனீசியா (Tunisia) முன்னேற்றம் கண்டுள்ளது. அந்த அணி மூன்று இடங்கள் முன்னேறி 28 ஆவது இடத்தை பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற எகிப்து தொடர்ந்தும் 30 ஆவது இடத்திலேயே உள்ளது.
தரவரிசையில் ஒன்பது இடங்கள் பின்தங்கியபோதும் ஆசியாவில் சிறந்த தர நிலையை பெற்ற அணியாக ஈரான் தொடர்ந்து நீடிக்கிறது. அந்த அணி தற்போது 34 ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இலங்கை கால்பந்து அணி எந்த ஒரு மாற்றமும் இன்றி FIFA உலக தரவரிசையில் தொடர்ந்து 198 ஆவது இடத்தில் நீடிக்கிறது.