கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்த CSK அணி

307

காயம் காரணமாக நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் இருந்து விலகிய நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் சிசண்டா மகாலாவை (Sisanda Magala)  சென்னை சுபர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 31ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை சம்பியன் பட்டத்தை வென்ற எம்எஸ் டோனி தலைமையிலான சென்னை சுபர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன.

இதற்கிடையில் சென்னை சுபர் கிங்ஸ் அணிக்காக மினி ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சு சகலதுறை வீரர் கைல் ஜேமிசன் முதுகுவலி உபாதை காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனிடையே, ஐபிஎல் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை சென்னை அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது கைல் ஜேமிசனுக்குப் பதிலாக தென்னாபிரிக்கா வேகப் பந்துவீச்சாளர் சிசண்டா மகாலாவை ஒப்பந்தம் செய்வதாக சென்னை சுபர் கிங்ஸ் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, அடிப்படை ஏலத்தொகையான 50 இலட்சத்திற்கு சிசண்டா மகாலாவை சென்னை சுபர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன் மூலம் கைல் ஜேமிசனுக்குப் பதிலாக சென்னை அணியில் இடம்பிடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை T20 அணித்தலைவர் தசுன் ஷானகவின் ஐபிஎல் கனவு நிறைவேறாமல் போனது.

32 வயதான சிசண்டா மகாலா, தென்னாபிரிக்கா அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 4 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். அண்மையில் நடைபெற்ற SA20 லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக விளையாடி 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் இறுதிப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<