LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி

Lanka Premier League 2020 – Coverage powered by MyCola

2492
 

இலங்கையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் இலங்கை T20 அணியின் தலைவரும், நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான லசித் மாலிங்க விளையாட மாட்டார் எனத் தெரிவித்துள்ளார். 

பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளையும் தாண்டி இலங்கை கிரிக்கெட் சபையினால் முதல்தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.  

லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து விலகும் கிறிஸ் கெயில்

இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள ஐந்து அணிகளும் தற்போது ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளதுடன், வெளிநாட்டு வீரர்களும் இலங்கையை வந்தடைந்த வண்ணம் உள்ளனர். 

இந்த நிலையில், கொவிட் – 19 வைரஸ் தொற்று மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் இருந்து கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட பல முன்னணி வீரர்களும், டேவ் வட்மோர், சமிந்த வாஸ் உள்ளிட்ட பயிற்சியாளர்களும் விலகுவதாக அறிவித்துள்ளனர். அத்துடன், ஒருசில வீரர்கள் இந்தத் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது

இதுஇவ்வாறிருக்க, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் தலைவராக செயற்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் சர்ப்ராஸ் அஹமட், நியூஸிலாந்து தொடருக்காக தெரிவு செய்யப்பட்டதால் இத்தொடரிலிருந்து விலகிக் கொண்டார்

இதனிடையே, கோல் க்ளேடியேட்டர்ஸ் அணியின் உள்ளூர் நட்சத்திர வீரராக அறிவிக்கப்பட்டுள்ள, லசித் மாலிங்க இத்தொடரில் பங்கேற்பதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Video – அடுத்த T20i திருவிழா தயார்: நவம்பர் 26இல் ‘LPL’ |Sports RoundUp – Epi 139

T20 போட்டிகளில் உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக வலம்வந்து  கொண்டிருக்கின்ற 37 வயதான லசித் மாலிங்க, அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 தொடரில் விளையாடுவது தொடர்பில் இரண்டு மனநிலையுடன் இருப்பதாக கூறப்படட்டது. 

இவ்வாறான ஒரு நிலையில்லேயே மாலிங்க இத்தொடரில் பங்கேற்பதில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பில் மாலிங்க Cricinfo இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வியில், “இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரிலிருந்து நான் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியிருக்கவில்லை. அதேநேரம் நான் எந்தவிதமான பயிற்சிகளையும் எடுத்திருக்கவில்லை.

கடந்த மாதம் வீரர்கள் ஏலம் நடைபெற்ற போது எல்.பி.எல். தொடருக்கு முன்னர் பயிற்சிகளுக்காக மூன்று வாரங்களேனும் இருக்கும் என நினைத்தேன். ஆனால், அப்படி எதுவும் இங்கே இல்லை. அவர்கள் எங்களை ஹம்பாந்தோட்டைக்கு இந்த வாரம் (வெறுமனே) வரவழைக்கின்றனர். அதிலும் மூன்று நாட்கள் சுயதனிமைப்படுத்தலிலும் இருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

ஒரு பந்துவீச்சாளருக்கு உயர்ந்த தரத்தில் இருக்கும் போட்டிகளில் விளையாட பயிற்சிகள் வேண்டும். இதேநேரம், எல்.பி.எல். தொடரில் போட்டிகளும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறுகின்றன. எனவே, நான் தொடரில் விளையாடுவது இல்லை என முடிவு செய்தேன்” என்றார்.

கொழும்பு கிங்ஸ் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக ஹெர்ஷல் கிப்ஸ்!

கடந்த எட்டு மாதங்களாக எந்தவொரு பயிற்சிகளையும் மேற்கொள்ளாத லசித் மாலிங்கவுக்கு துரதிஷ்டவசமாக இம்முறை ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. தனது தந்தைக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவரால் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அடுத்த வருடம்க்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் T20i உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.சி.சி இன் புதிய அறிப்பின் படி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 16 அணிகளும் நேரடியாக இந்தத் தொடரில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதுஎவ்வாறாயினும், T20i உலகக் கிண்ணத்தில் லசித் மாலிங்க இலங்கை அணியை வழிநடத்துவாரா? இல்லையா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

அதிலும் குறிப்பாக, இம்முறை லங்கா ப்ரீமியர் லீக்கில் லசித் மாலிங்க விளையாடாவிட்டால் அவருக்கு இலங்கை T20 அணியில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…