லிவர்பூல் தொடர்ந்து வெற்றி: மெட்ரிட்டுடன் புள்ளிகளை சமன் செய்த பார்சிலோனா

59

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1 தொடர்களின் முக்கிய போட்டிகள் சனிக்கிழமை (15) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு.

லிவர்பூல் எதிர் நோர்விச் சிட்டி

சாடியோ மானேவின் பிந்திய நேர கோல் மூலம் ப்ரீமியர் லீக்கில் கடைசி இடத்தில் இருக்கும் நோர்விச் சிட்டிக்கு எதிராக 1-0 என வெற்றியீட்டிய லிவர்பூல் அணி தொடர்ச்சியாக மற்றொரு வெற்றியை பெற்றுக்கொண்டது.

ஐரோப்பிய போட்டிகளில் மன்செஸ்டர் சிட்டிக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஐரோப்பிய கால்பந்து நிதி……

இதன்மூலம், லிவர்பூல் அணி ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் 25 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி 30 ஆண்டுகளில் முதல் ப்ரீமியர் லீக் பட்டத்தை நெருங்கியுள்ளது. லிவர்பூல் தனது 35 ஆவது லீக் போட்டிகளில் பெறும் 34 ஆவது வெற்றி இதுவாகும். 

நோர்விச் சிட்டி அணியை விடவும் 55 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கும் நிலையிலேயே லிவர்பூல் அந்த அணியை எதிர்கொண்டபோதும் எதிர்பார்த்த அளவு போட்டியில் ஆதிக்கம் செலுத்தவில்லை. 

எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் லிவர்பூலால் கோல் பெறுவது கடும் ​போராட்டமாகவே இருந்தது. போட்டியின் ஒரு மணி நேரத்தை எட்டும்போது நபி கெயிட் நெருங்கிய தூரத்தில் பட்டுவந்த பந்தை கோலாக மாற்ற முயன்றபோது நோர்விச் சிட்டி கோல் காப்பாளர் டிம் க்ருல் அபாரமாகத் தடுத்தார். தொடர்ந்து மொஹமட் சலாஹ்வின் கோல் முயற்சியையும் தடுத்தார்.

இந்நிலையில் ஐரோப்பிய சம்பியனான லிவர்பூல் அணி சார்பில் 78 ஆவது நிமிடத்தில் சாடியோ மானே கோல் பெற்று வெற்றியை உறுதி செய்தார். செனகல் வீரரான மானே இங்கிலாந்து கழகங்களுக்காக ஆடத் தொடங்கியதில் இருந்து அவர் பெறும் 100 ஆவது கோல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.    

லிவர்பூல் தற்போது 43 லீக் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக நீடிப்பதோடு, 49 போட்டிகளில் தோல்வியுறாத அணியாக சாதனை படைத்திருக்கும் ஆர்சனலை முறியடிக்க நெருங்கியுள்ளது.  

பார்சிலோனா எதிர் கெடபே

கெடபே அணிக்கு எதிராக 2-1 என போராடி வெற்றியீட்டிய பார்சிலோனா அணி லா லிகாவில் முதலிடத்தில் இருக்கும் ரியல் மெட்ரிட்டுடன் புள்ளிகளை சமநிலை செய்துள்ளது. 

மூன்றாவது இடத்தில் இருக்கு கடபே அணிக்காக அலன் நியோம் ஆரம்பத்தில் கோல் பெற்றபோதும் சாமுவேல் உடிடி தவறிழைத்தது வீடியோ உதவி நடுவர் மூலம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கோல் நிராகரிக்கப்பட்டது.     

லியோனல் மெஸ்ஸியின் அபார பந்துப் பரிமாற்றத்தின் உதவியோடு அன்டொனியன் க்ரீஸ்மான் 33 ஆவது நிமிடத்தில் பார்சிலோனா சார்பில் முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். ஐந்து நிமிடங்களுக்கு பின் கித்து ஜூனியர் பிர்போ வழங்கிய பந்தைக் கொண்டு செர்கியோ ரொபர்டோ இரண்டாவது கோலை புகுத்தினார்.  

அங்கெல் ரொட்ரியோ கெடபே அணி சார்பில் 66 ஆவது நிமிடத்தில் கோல் புகுத்தியபோதும் போட்டியில் விறுவிறுப்பு அதிகரித்தது. 

பார்சிலோனா, ரியல் மெட்ரிட் இலகு வெற்றி

ஸ்பெயின் லா லிகா மற்றும் பிரான்ஸ் லீக் 1….

இந்நிலையில் அங்கெல்லின் இரண்டாவது கோல் முயற்சியை பார்சிலோனா கோல்காப்பாளர் மார்க் டெர் ஸ்டெஜன் சிறப்பாக தடுத்தார். 

இந்தத் தோல்வியுடன் கெடபே அணி லா லிகாவில் 42 புள்ளிகளுடன் தொடர்ந்து மூன்றாவது அட்டத்தில் நீடிக்கிறது. அந்த அணி ரியல் மெட்ரிட் மற்றும் பார்சிலோனாவை விடவும் 10 புள்ளிகள் பின்தங்கியுள்ளது. 

எனினும் ரியல் மெட்ரிட் இன்று (16) கால்டா விகோ அணியை எதிர்கொள்ளவிருப்பதோடு அதில் வெற்றி பெற்றால் 3 புள்ளிகளால் முதலிடத்தில் முன்னிலை பெறும். 

பரிஸ் செயின்ட் ஜெர்மைன் எதிர் அமியன்ஸ்

லீக் 1 தொடரில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் மற்றும் அமியன்ஸ் அணிகளுக்கு எதிரான பரபரப்பான போட்டி 4-4 என சமநிலை பெற்றது. அதன்போது அமியன்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றிருந்த நிலையிலேயே PSG தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

தகுதி இழப்பு வலயமான தொடரில் 19 ஆவது இடத்தில் இருக்கும் அமியன்ஸ் ஐந்தாவது நிமிடத்திலேயே முதல் கோலை புகுத்தியதோடு தொடர்ந்து 29 மற்றும் 40 ஆவது நிமிடங்களில் கோல்கள் பெற்று முன்னிலை அடைந்தது. 

எனினும், அன்ட்ரே ஹெர்ராரே 45ஆவது நிமிடத்தில் PSG அணிக்காக முதல் கோலை பெற்றதோடு டன்குய் குவாசி 5 நிமிட இடைவெளியில் தலையால் முட்டி இரு கோல்களை பெற்றார்.

இதனைத் தொடர்ந்து மௌரோ இகார்டி 74 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலின் உதவியோடு PSG அணி 4-3 என முன்னிலை பெற்றது. 

எனினும், கியுராசி கடைசி நேரத்தில் பெற்ற கோலின் உதவியோடு அமியன்ஸ் போட்டியை சமநிலை செய்தது. 

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<