இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

338

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 13 பேர் கொண்ட குழாம் சற்று முன்னர் (15) இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் வெளியிடப்பட்டது. 

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டன. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலான காலம் கடந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முயற்சியினால் 117 நாட்களின் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியது. 

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் புதிதாக 6 பேருக்கு கொவிட் 19 தொற்று

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3டி என்கிற புதிய வகை கிரிக்கெட்..

கொரோனா வைரஸ் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மூடிய மைதானத்தில் (ரசிகர்கள் இன்றி) இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. குறித்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) நிறைவுக்கு வந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை (16) மென்செஸ்டரில் ஆரம்பமாகவுள்ளது.

நிறைவுபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் வைத்து 4 விக்கெட்டுகளினால் வீழ்த்தியது. இங்கிலாந்து அணியின் வழமையான அணித்தலைவர் ஜோ ரூட் இரண்டாவது குழந்தைக்கு தந்தையானதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத நிலையில் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு தலைமை தாங்கினார். 

இந்நிலையில் ஜோ ரூட் மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணித்தலைவர் பதவியை அவர் ஏற்றுள்ளார். முதல் டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்ட குழாமிலிருந்து இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழுவானது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக மூன்று மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட் ஆகியோருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அணித்தலைவர் ஜோ ரூட்டின் வருகை காரணமாக முதல் போட்டியில் பிரகாசிக்கத் தவறிய ஜோ டென்லி குழாமிலிருந்து தூக்கப்பட்டுள்ளார். 

இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் சாம் கரன் குழாமுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் 26 வயதுடைய வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சன் முதல் முறையாக டெஸ்ட் அறிமுகம் பெறும் அடிப்படையில் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ரொபின்சன் 56 முதல்தர போட்டிகளில் விளையாடி 4 பத்து விக்கெட்டுகள், 13 ஐந்து விக்கெட்டுகளுடன் மொத்தமாக 236 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து பயிற்சி குழாமில் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் ஷாகிப் மொஹமட் அயர்லாந்து அணியுடன் அடுத்து நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடருக்கான இங்கிலாந்து பயிற்சி குழாமில் இடம்பிடித்துள்ளதனால் நாளை (16) அதன் பயிற்சிகள் ஆரம்பமாகவுள்ளதன் அடிப்படையில் டெஸ்ட் குழாமிலிருந்து விலகுகிறார். 

சாதனையுடன் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முன்னேறிய ஜேசன் ஹோல்டர்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்காக வெளியிட்டுள்ள புதிய தரவரிசையில்…

இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம்

ஜோ ரூட் (அணித்தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், டொம் பெஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜொஸ் பட்லர், ஸக் க்ரௌலி, சாம் கரன், ஒல்லி போப், ஒல்லி ரொபின்சன், டொம் சிப்லேய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

மொத்த குழாமில் இடம்பெற்றுள்ள மேலதிக வீரர்கள்

ஜேம்ஸ் பிரேஸி, ஜோ டென்லி, பென் போக்ஸ், டான் லோரன்ஸ், ஜெக் லீச், க்ரேக் ஓவர்டொன், ஒல்லி ஸ்டோன்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க