ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் மேலும் இரு இலங்கை வீரர்கள்!

264

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2023 தொடருக்கு முன்னதாக நடைபெறவுள்ள ராஜஸ்தான் றேயால்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள இலங்கை அணியின் இளம் சுழல் பந்துவீச்சாளர்களான கெவின் கொத்திகொட மற்றும் ட்ரெவின் மெத்யூ ஆகிய இருவருக்கும் அழைப்பு கிடைத்துள்ளது. 

தென்னாபிரிக்க முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் போல் அடம்ஸ் போன்று வழக்கத்திற்கு மாறான அசாதாரண பந்துவீச்சு பாணியைக் கொண்ட மர்ம சுழல் பந்துவீச்சாளரான 24 வயதுடைய கெவின் கொத்திகொட இதுவரை சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகவில்லை. எனினும், கடந்த 3 ஆண்டுகளாக அபுதாபி T10 லீக் தொடரில் விளையாடி வருகின்றார்.

இதில் கடந்த ஆண்டு அபுதாபி T10 லீக்கில் மராத்தா அரேபியன்ஸ் அணியில் விளையாடிய அவர், கடந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் தொடரில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்காக இணைக்கப்பட்ட போதும், அவர் எந்தவொரு போட்டியிலும் விளையாடியிருக்கவில்லை.

கொத்திகொட 2017 இல் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக ஆடியதோடு காலி மஹிந்த கல்லூரிக்காக பாடசாலை மட்டப் போட்டிகளில் ஆடினார். தனது அசாதாரண பந்துவீச்சு பாணி காரணமாக உள்நாட்டு மற்றும் சர்வதெச அளவில் அவர் அதிகம் பேசப்பட்டார்.

இதனிடையே, கண்டி புனித அந்தோனியார் கல்லூரியின் 18 வயதுடைய சுழல் பந்துவீச்சாளரான ட்ரெவின் மெத்யூ, இந்த ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் இலங்கை வீரர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட சகலதுறை வீரரான ஷெவோன் டேனியல் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி முகாமிற்காக அழைக்கப்பட்டிருந்தார்.

எனவே, குறித்த மூன்று வீரர்களும் வியாழக்கிழமை (01) நாட்டிலிருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<