முதல் தடவையாக IPL ஏலத்தில் களமிறங்கும் ஜோ ரூட்

178

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு தயாராகும் நோக்கில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள IPL தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக சுமார் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஜோ ரூட், வெளிநாட்டு T20 லீக் தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வந்தார். இதில் இங்கிலாந்தில் நடைபெறுகின்ற T20 ப்ளர்ஸ்ட் மற்றும் தி ஹண்ரட் தொடர்களில் மாத்திரம் விளையாடிய வந்த அவர், இறுதியாக 2018-19 பருவகாலத்துக்கான பிக் பேஷ் T20 லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடியிருந்தார்.

எவ்வாறாயினும், 2018இல் IPL ஏலத்தில் ஜோ ரூட் பங்கேற்றபோதும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதேபோல, 2019 மே மாதத்துக்குப் பிறகு அவர் சர்வதேச T20i கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

இந்த நிலையில் 2023 ஒருநாள் உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறுவதால் அதற்குத் தயாராவதற்காக அடுத்த ஆண்டு IPL தொடரில் பங்கேற்க ஜோ ரூட் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து Mail இணையத்தளத்துக்கு ரூட் வழங்கிய நேர்காணலில், “IPL ஏலத்தில் பங்கேற்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். அதில் இடம் பெறுவது சிறப்பானதாக இருக்கும். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு T20i கிரிக்கெட்டில் விளையாடுவது நல்லதொரு வெளிப்பாடாக இருக்கும் என கருதுகிறேன். இந்த வடிவத்தில் இருந்து நானே என்னை தூரமாக்கிக் கொண்டேன். தற்போது அதில் விளையாட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஓய்வு குறித்து நான் அறவே எதுவும் சிந்திக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

சுழல் பந்துவீச்சுக்கு எதிராக நன்கு விளையாடும் திறமை கொண்ட ஜோ ரூட்டிடம், T20i போட்டிகளில் டெத் ஓவர்களில் பந்துவீச்சில் நெருக்கடியை கொடுக்கின்ற திறமை இருப்பதால் சென்னை சுபர் கிங்ஸ், லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் உள்ளிட்ட அணிகள் ஜோ ரூட்டை IPL ஏலத்தில் வாங்க முயற்சி எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதில் குறிப்பாக, லக்னோ சுபர் ஜயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் அண்டி பிளவர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ட்ரெவர் பெய்லிஸ் ஆகிய இருவரும் இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர்களாக பணியாற்றிய காரணத்தால் ஜோ ரூட்டின் திறமை குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் மூலம் ஜோ ரூட்டுக்கு அடுத்த ஆண்டு IPL தொடரில் விளையாடுகின்ற வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பர்க்கப்படுகின்றது.

அதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பிரெண்டன் மெக்கலம் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக இருப்பதால் கொல்கத்தா அணியில் ஜோ ரூட்டை இணைத்துக்கொள்ளும் படி கோரிக்கை விடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள 31 வயதான ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்காக 2012 முதல் 124 டெஸ்ட் போட்டிகள், 158 ஒருநாள் மற்றும் 32 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். அதேபோல, பந்துவீச்சில் டெஸ்டில் 47 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 26 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<