அவுஸ்திரேலிய தொடரில் சமீர, எரங்க பங்கேற்க மாட்டார்கள் – மெதிவ்ஸ்

1244
Sri Lanka vs Australia Pre tour Press con

5 வருடங்களுக்கு பின் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி  இலங்கையில் சுமார் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இந்நிலையில் இந்தத் தொடர் ஆரம்பமாக முன் நடைபெறும் செய்தியாளர் மாநாடு இன்று மாலை கொழும்பு 07இல் அமைந்துள்ள இலங்கை கிரிக்கட் சபையில் இடம்பெற்றது. இது இலங்கை கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி எஷ்லி டி சில்வா தலைமையில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டிவ் ஸ்மித் மற்றும் பயிற்றுவிப்பாளர் டெரன் லீமன் ஆகியோரோடு இலங்கை அணியின் தலைவர் எஞ்சலோ மெதிவ்ஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Photos Album – Australia Tour of Sri Lanka Press Conference 2016

செய்தியாளர் மாநாட்டின் ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி எஷ்லி டி சில்வா இலங்கை கிரிக்கட் சார்பாக தமது வரவேற்பைத் தெரிவித்தார்.

இதன் பின் ஏஞ்சலோ மெதிவ்ஸ் கருத்துத் தெரிவிக்கும் போது “இனிய மாலை வந்தனங்கள், முதலில் இலங்கை வந்துள்ள ஸ்மித் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியை அன்புடன் வரவேற்கிறேன். நாம் கடைசியாக 5 வருடங்களுக்கு முன் 2011ஆம் ஆண்டு இலங்கை மண்ணில் சந்தித்தோம். அந்தத் தொடர் நமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமைந்திருந்தது. அதைப்போன்றே இந்தமுறையும் சவாலான தொடரை எதிர்பார்க்கிறோம். காலநிலைகள் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். இந்தத் தொடர் இரண்டு அணிகளுக்கும் சிறந்த தொடராக அமைய எனது வாழ்த்துக்கள்” என்றார்.

இதன் பின் கருத்துத் தெரிவித்த அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டிவ் ஸ்மித் “நன்றி எஞ்சலோ!! இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்திருப்பது சிறந்த விடயம். மெதிவ்ஸ் கூறியது போல் நாம் 5 வருடங்களுக்கு பின் இலங்கை வந்துள்ளோம். நாம் இந்தத் தொடரை உற்சாகமாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். உங்களது வரவேற்பிற்கு எமது நன்றிகள் என்று கூறியிருந்தார்.

இதன் பின் தலைவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடையே இந்தத் தொடர் தொடர்பான வினாக்கள் எழுப்பப்பட்டன.

ஸ்டிவ் ஸ்மித்திடம் “காயத்தில் இருந்து மீண்டுவரும் டேவிட் வோர்னரின் தற்போதைய நிலை என்ன”?

அவர் தற்போது குணமடைந்து வருகிறார். இன்று அவர் பயிற்சிகளில் ஈடுபட்டார். அதனால் அவர் 1ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

மெதிவ்ஸிடம் “இந்த தொடர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் உபாதைக்கு உள்ளாகி இருப்பதால் இந்த தொடருக்கு எவ்வாறு ஆயத்தமாகி உள்ளீர்கள்”?

துரதிர்ஷ்டவசமான முறையில் எமது வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைந்துள்ளனர். உண்மையாகக் கூறப்போனால் எமது அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை. ஆனாலும் நாம் இன்று பயிற்சிகளை ஆரம்பித்தோம். அவுஸ்திரேலிய அணியை வெற்றி கொள்ள முழுமையாகத் தயராகிவிட்டோம்.

மெதிவ்ஸிடம் “இங்கிலாந்து தொடரில் பங்கேற்காத ஜெப்ரி வெண்டர்சே அவுஸ்திரேலிய தொடரில் பங்கேற்பாரா”?

எமக்கு உறுதியாகக் கூறமுடியாது. அவர் தற்போது கைவிரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பிசியோ (உடற்பயிற்சிவிப்பாளர்) அவரோடு இணைந்து அவரைக் குணமடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகிறார். ஆனாலும் அவர் விளையாடுவது அசாத்தியமான விடயமாகும்.

மெதிவ்ஸிடம் “இங்கிலாந்து தொடரில் ரன் அவுட் முறையில் பல விக்கட்டுகளை இலங்கை அணி இழந்தது. இந்த தொடரில் இதற்கான ஆயத்தம் என்ன”?

இங்கிலாந்து மண்ணில் விக்கட்டுகளிடையே ஓடி ஓட்டங்ளைப் பெறுவது பலவீனமாகவே காணப்பட்டது. ஆனால் இந்தத் தொடரில் அவ்வாறான முறையில் விக்கட்டுகளை பறிகொடுப்பதை நாம் தவிர்ப்போம்.

ஸ்மித்திடம் “5 வருடங்களுக்கு முன் வந்த அணியோடு ஒப்பிடும் போது 3 வீரர்களைத் தவிர நீங்கள், வோர்னர் அனைவரும் இலங்கை மண்ணுக்கு புதிய வீரர்கள். இது தொடர்பாக உங்களது அணியின் ஆயத்தம் என்ன”?

நாம் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றோம். குறிப்பாக ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சுக்கு முகங்கொடுப்பது ஒரு சவாலான விடயம் தான். நாம் ரங்கன ஹேரத் மற்றும் ஏனைய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை   முகங்கொடுக்க நமது துடுப்பாட்ட வீரர்களை சரியான துடுப்பாட்ட வரிசையில் துடுப்பெடுத்தாட முயற்சிப்போம்.

மெதிவ்ஸிடம் “காயத்துக்கு உள்ளாகியுள்ள வீரர்களான துஷ்மந்த சமீர, தம்மிக்க பிரசாத் மற்றும் ஷாமிந்த எரங்க ஆகிய வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவார்களா”?

குறிப்பாக தம்மிக்க பிரசாத் தற்போது பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் 100% குணமடையவில்லை. சமீர மற்றும் எரங்க ஆகியோர் இந்தத் தொடரில் பங்கேற்கமாட்டார்கள்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

FIXTURE Sri Lanka vs Australia - Press Conference Article