ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர்

1965

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட சகலதுறை வீரரான ஷெவோன் டேனியலுக்கு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் களமிறங்கும் முன்னணி அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள அழைப்பு கிடைத்துள்ளது.

இதன்படி, டிசம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளவதற்காக அவர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இடது கை துடுப்பாட்ட வீரரும், சுழல் பந்துவீச்சாளருமான ஷெவோன் டேனியல், இறுதியாக நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான இருதரப்பு தொடர்களை வென்ற இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்தார். மேலும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டு நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான பெரும் கிரிக்கெட் சமரில் (School Big Match) கொழும்பு புனித ஜோசப் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராகவும் ஷெவோன் டேனியல் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த பாகிஸ்தான் ஜுனியர் லீக் T20 தொடரில் குஜ்ரன்வாலா ஜயண்ட்ஸ் அணிக்காக அவர் விளையாடியிருந்தார். குறித்த தொடரில் 5 போட்டிகளில் ஆடிய அவர் 176 ஓட்டங்களைக் குவித்து அனைவரது கவனத்தையும் பெற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள 3ஆவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் தசுன் ஷானக தலைமையில் களமிறங்கும் தம்புள்ள அவுரா (Dambulla Aura) அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பையும் பெற்றுக் கொண்டார்.

அதேபோல, தற்போது ஷெவோன் டேனியலை ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 2023 IPL மினி ஏலத்துக்கு முன் நடைபெறுகின்ற அணித் தெரிவுக்கான பயிற்சி முகாமுக்கு அழைத்துள்ளது. இதில் திறமைகளை வெளிப்படுத்தினால் அடுத்த ஆண்டு IPL தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் இடம்பெறுகின்ற வாய்ப்பு ஷெவோன் டேனியலுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இயக்குனராக பணியாற்றுகின்ற ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் தலைவராக சஞ்சு சாம்சன் செயல்படுகின்மை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<