ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்றார் கமிந்து மெண்டிஸ்

ICC Awards 2024 

45
kamindu

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த விருதுகளில் ஒன்றான 2024ஆம் ஆண்டுக்கான வளரந்து வரும் வீரருக்கான விருதை இலங்கையின் இளம் நட்சத்திரமான கமிந்து மெண்டிஸ் தட்டிச் சென்றுள்ளார்.

2008ஆம் ஆண்டு அஜந்த மெண்டிஸ் ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை வென்ற பிறகு, இலங்கை வீரர் ஒருவர் இந்த விருதை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

கடந்த ஆண்டு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய 26 வயதான கமிந்து மெண்டிஸ், 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.அதேபோல, கடந்த ஆண்டில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 1451 ஓட்டங்களையும் அவர் குவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி மூலம் 2022ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், முதல் 8 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 9 தடவைகள் 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அரிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 13 இன்னிங்ஸ்களில் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து விரைவாக 1000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்த 3ஆவது வீரர் என்ற பெருமையையும், சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமப்படுத்திய பெருமையையும் கமிந்து மெண்டிஸ் தனதாக்கிக்கொண்டார்.

பங்களாதேஷுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வாவுடன் ஜோடி சேர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதங்கள் குவித்து அரிய மைல்கல்லை கமிந்து மெண்டிஸ் எட்டியிருந்தார்.

அதேபோல, இங்கிலாந்துக்கு எதிராக மென்செஸ்டர் விளையாட்டரங்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சதமடித்து அசத்திய அவர், கியா ஓவல் மைதானத்தில் அரைச் சதமும் அடித்து தனது வாழ்நாளில் மறக்க முடியாத இன்னிங்ஸ்களைப் பதிவு செய்தார். அதுமாத்திரமின்றி, காலியில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் முறையே 114 ஓட்டங்களையும் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் குவித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து வந்த கமிந்து மெண்டிஸ், ஐசிசி இன் மார்ச் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான சிறந்த வீரருக்கான விருதுகளையும் தனதாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த கமிந்து மெண்டிஸ், 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி இன் அதிசிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, கமிந்து மெண்டிஸுடன் ஐசிசி இன் வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு இங்கிலாந்தின் கஸ் அட்கின்சன், பாகிஸ்தானின் சய்ம்  அயூப், மேற்கிந்தியத் தீவுகளில் ஷமர் ஜோசப் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<