களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I (பிரிவு 1) கால்பந்து சுற்றுப் போட்டியின் முதல் நாள் ஆட்டமொன்றில் இரண்டாம் பாதியில் பெற்றுக்கொண்ட கோலின் மூலம் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என கொழும்பு ரட்ணம் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியது.
கடந்த முறை பிரிவு இரண்டில் இரண்டாம் இடம் பெற்று இம்முறை பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்ட ரட்ணம் அணி வீரர்கள் இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தை செலுத்தினர்.
எனினும், ஆட்டத்தின் போக்கிற்கு மாறாக சென் மேரிஸ் அணி போட்டியின் முதலாவது வாய்ப்பை உருவாக்கியது. ரட்ணம் களத்தடுப்பில் ஏற்பட்ட சிறிய பிழையை சாதகமாக்கப் பயன்படுத்தி சிவநேசன் மதிவதனன் அடித்த பந்தை ரட்ணம் கோல் காப்பாளர் தடுத்தார்.
அகீலின் சிறந்த தடுப்பினால் டிவிஷன் 2 சம்பியன் கிண்ணம் கெலிஓய அணிக்கு
இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரிவு 2 (டிவிஷன் 2) அணிகளுக்கு..
அதற்குப்பின் சுதாகரித்து விளையாடிய ரட்ணம் அணியின் முன்கள வீரர் ஒழுவாசென் ஒலவாலே மறுபக்கத்தில் கோலடிக்க, அது கோலுக்கு வெளியில் சென்றது.
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ரட்ணம் அணிக்காக ப்ரி கிக் வாய்ப்பு கிடைக்கப்பெற அதனை மதுரங்க சற்றே மேலே உதைந்ததால் கோல் பெறும் சிறந்த வாய்ப்பு மீண்டும் பறிபோனது.
தொடர்ந்து சிறப்பாட்டத்தை வெளிக்காட்டிய மதுரங்க மீண்டும் பல வாய்ப்புக்களை உருவாக்கினார். எனினும் அவற்றின்மூலம் ரட்ணம் அணிக்கான பலன் கிடைக்கவில்லை.
போட்டியின் மிக இலகுவான வாய்ப்பு 30வது நிமிடத்தில் ஒலவாலேயிற்கு கிடைக்க, அந்த வாய்ப்பையும் ஒலவாலே தவறவிட்டார்.
இரு அணிகளும் சமபலத்துடன் மோத முதலாம் பாதி எந்தவித கோல்களும் இன்றி முடிவடைந்தது.
முதல் பாதி: ரட்ணம் விளையாட்டுக் கழகம் 0-0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்
முதலாம் பாதியைப் போலவே இரண்டாம் பாதியையும் உத்வேகத்துடன் தொடங்கியது ரட்ணம் கழகம்.
இரண்டாம் பாதியின் ஆரம்பத்தில், ரட்ணம் அணியின் இளம் வீரர் மொஹமட் அமானுக்கு கிடைத்த வாய்ப்பை அவர் நழுவ விட்டார். எனினும் அவரே போட்டியின் முதலாவது கோளிற்கு வித்திட்டார்.
ஆட்டத்தின் 59வது நிமிடத்தில் அமான் உள்ளனுப்பிய பந்தை மொஹமட் ஆகில் தலையால் முட்டி கோலாக்கினார்.
அவர் அடித்த கோலிற்குப் பின்பு சுதாகரித்த சென் மேரிஸ் அணி வீரர்கள் புத்துணர்ச்சியுடன் விளையாடினர். எனினும் சென் மேரிஸ் அணியின் உள்ளனுப்பல்களை ரட்ணம் கழக பின்கள வீரர்கள் லாவகமாகத் தடுத்தனர்.
போட்டியின் இறுதி நேரத்தில் சென் மேரிஸ் அணிக்கு ஹெடர் மூலம் கோலைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு கிடைத்த போதிலும் மரியதாஸ் நிதர்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.
எனவே போட்டி 1-0 என ரட்ணம் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது.
முழு நேரம்– ரட்ணம் விளையாட்டுக் கழகம் 1-0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்
கோல் பெற்றவர்கள்
ரட்ணம் விளையாட்டுக் கழகம் – மொஹமட் ஆகில் 59’