”நூறு சதவீத பாதுகாப்பை இந்தியாவாலும் வழங்க முடியாது” – ருமேஷ் ரத்நாயக்க

115

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சிறந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருந்தாலும், நூறு சதவீத பாதுகாப்பை எந்த நாட்டினாலும் வழங்க முடியாது என இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளைய தினம் (30) கராச்சியில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த இரண்டாவது ஒருநாள் போட்டி இன்றைய தினத்திலிருந்து ஒருநாள் பிற்போடப்பட்டது.

சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்டது இலங்கை – பாகிஸ்தான் போட்டி!

இலங்கை மற்றும் பாகிஸ்தான்……………

தொடரில் மழை ஒருபக்கம் குறுக்கிட்டு வரும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான கேள்விகளும் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இவ்வாறான நிலையில், பாகிஸ்தானில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு தொடர்பில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருமேஷ் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

“பாகிஸ்தானில் சிறந்த பாகாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், எந்தவொரு நாட்டாலும் 100 சதவீதமான பாதுகாப்பை வழங்க முடியாது என்பதை நான் அறிவேன். அது பாகிஸ்தான், இந்தியா அல்லது இஸ்ரேல் ஆகட்டும் எந்தவொரு நாட்டிலும் 100 சதவீத பாதுகாப்பினை வழங்க முடியாது. இதுதொடர்பில் எமக்கு தெரியும். அதனை நாம் அறிந்துள்ளதால், அதுதொடர்பில் நாம் எதனையும் கூறுவதில்லை”

அதேவேளை, பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் செல்வதற்கு இலங்கையின் முக்கிய வீரர்கள் 10 பேர் மறுத்திருந்தனர். இந்நிலையில் இலங்கை அணியின் ஏனைய வீரர்கள் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள், சில நாட்கள் அங்கு தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களுடைய அப்போதை மனநிலை மற்றும் இப்போதைய மனநிலை தொடர்பிலும் ருமேஷ் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

பாதுகாப்பை விட கிரிக்கெட்டில் அதிக கவனம் செலுத்தும் திரிமான்ன

பாகிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு…………

“நாம் அனைவரும் பாகிஸ்தான் வருவதற்கு முன்னர், ஏற்கனவே இங்கு நடந்தவை தொடர்பில் கலந்துரையாட மாட்டோம் என்ற மனநிலையுடன் வந்தோம். அதேபோன்று, நடந்தவற்றை இப்போது பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை. நடந்தவை நடந்துவிட்டன. முழு அணிக்கும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்பது தெரியும். குறித்த விடயத்தை மறந்து, போட்டியில் மாத்திரம் அவதானம் செலுத்துகிறோம்”  என்றார். 

இதேவேளை, அணியில் முக்கிய வீரர்கள் விலகியுள்ள நிலையில், தற்போது அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும் வீரர்களுக்கு இருக்கும் சவால் தொடர்பிலும் ருமேஷ் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

“இதுவொரு கடினமான சவாலாகும். ஆனாலும், நான் வீரர்கள் அனைவருக்கும் நாம் ஒரு அணி என்பதை தெளிவுப்படுத்தியுள்ளேன். இப்போது, எமது முன்னணி வீரர்கள் 8 அல்லது 9 பேர் அணியில் இல்லை என நினைக்கலாம். ஆனாலும், இதுபோன்ற வாய்ப்பினாலேயே புதிய வீரர்கள் விளையாடுகின்றனர். அதனால், இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எம்மிடமும் ஒரு அணி உள்ளது. அதேபோன்று அவர்களிடமும் (பாகிஸ்தான்) அணி ஒன்று உள்ளது. இரு அணிகளையும் ஒப்பிட்டால், அவர்கள் சற்று பலமான அணியாக தெரிவார்கள். ஆனால், அந்த சவாலை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு முன்னர் இப்படியான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றிபெற்றிருக்கிறோம். குறிப்பாக, இப்போது அழைக்கப்பட்டுள்ள வீரர்கள், எப்போதாவது ஒருநாள் முன்னணி வீரர்களுக்கான இடத்திற்கு வரவேண்டியவர்கள். அதனால், இதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும்” என்றார்.

அதேநேரம், இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹதுருசிங்க மற்றும் தனக்கிடையில் உள்ள வேறுபாடு தொடர்பில் குறிப்பிட்ட ருமேஷ் ரத்நாயக்க“மிகப்பெரிய வேறுபாடுகள் இல்லை. அவர் ஒரு சிறந்த பயிற்றுவிப்பாளர். சிறந்த முறையில் திட்டங்களை வகுப்பவர். பயிற்றுவிப்பாளர்களை பார்க்கும் போது திட்டங்கள் ஒரே மாதிரியானவைதான். ஆனால், அதனை நடைமுறைப்படுத்தும் விதம் மாறுபட்டது. எனவே, நடைமுறைப்படுத்துவதில் மாற்றங்கள் இருக்கலாம். அது மாத்திரம் தான்” எனவும் இவர் சுட்டிக்காட்டினார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<