கனிஷ்ட மெய்வல்லுனரில் 2019இன் அதிசிறந்த வீரரானார் கமல்ராஜ்

51

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று (04) நிறைவுக்குவந்த 62ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் வருடத்தின் அதிசிறந்த கனிஷ்ட மெய்வல்லுனராக வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையைச் சேர்ந்த கமல்ராஜ் இரோய் தெரிவானார்.

அத்துடன், 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவிலும் அதிசிறந்த மெய்வல்லுனருக்கான விருதையும் அவர் தட்டிச் சென்றார்.

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் மிதுன்ராஜுக்கு ஹெட்ரிக் பதக்கம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில்……..

சுவட்டு மைதான நிகழ்ச்சிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற கமல்ராஜ், இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கனிஷ் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்றிருந்தார்

எனினும், இடைக்கிடையே ஏற்பட்ட உபாதை காரணமாக அவருக்கு தொடர்ச்சியாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்ற முடியவில்லை

இந்த நிலையில், சுமார் ஒருவருட கால இடைவெளிக்குப் பிறகு இம்முறை கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் களமிறங்கிய கமல்ராஜ், 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் 7.36 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்

குறித்த போட்டியில் பாதுக்க ஸ்ரீ ப்ரியரத்ன கல்லூரியின் எஸ். நுவிந்து (7.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் ஆர். தஸநாயக்க (6.91 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்

இதேநேரம், நேற்று (04) நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் சுற்றுப் போட்டியில் பங்குகொண்ட கமல்ராஜ், 11.65 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

இந்த நிலையில், தனது வெற்றி குறித்து கமல்ராஜ் எமது இணைத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில், ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. எனது வெற்றிக்கு உதவி செய்த எனது பயிற்றுவிப்பாளரான ஒகஸ்டின் அப்புஹாமிக்கும் எனது அம்மாவுக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனது இந்த வெற்றிக்கான அனைத்து கௌரவங்களும் அவர்களையே சாரும்

ஆரம்பத்தில் நான் சிறியதொரு பாடசாலையில் கல்வி கற்றேன். அப்போது தேவாலயங்களில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வந்தேன். இதனால் எனக்கு வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அங்கு சென்று 6 மாதங்கள் பயிற்சி பெற்றேன். அதன்பிறகு சர்வதேச பாடசாலைகளுக்கிடையில் நடைபெறுகின்ற மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்றுக் கொண்டேன்

இந்த நிலையில், நான் கடந்த வருடம் உபாதைக்குள்ளாகியிருந்தேன். இதனால் தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வாய்ப்பு கிடைக்காமல் போனது. எனினும், உபாதைக்குப் பிறகு தொடர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டேன்

எனவே, எதிர்வரும் காலங்களில் சிறந்த முறையில் பயிற்சிகளைப் பெற்று இலங்கைக்கு பெருமையைத் தேடிக் கொடுப்பேன்என தெரிவித்தார்

20 போட்டிச் சாதனைகள் முறியடிப்பு

 இந்தப் போட்டித் தொடரில் 16, 18 மற்றும் 20 ஆகிய மூன்று வயதுப் பிரிவுகளுக்காக மாத்திரம் நடைபெற்ற இம்முறை போட்டிகளில் 20 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், 3 போட்டிச் சாதனைகள் சமப்படுத்தப்பட்டன

தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற ……

அத்துடன், இம்முறை போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட பிரிவில் 13 போட்டிச் சாதனைகள் நிகழ்த்தப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்

போட்டிகளின் முதலிரண்டு நாட்களில் ஒட்டுமொத்தமாக 11 போட்டிச் சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன், இறுதி நாளான நேற்று (04) மேலும் 7 போட்டிச் சாதனைகள் புதுப்பிக்கப்பட்டன.  

இதில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் அரையிறுதிப் போட்டியில் மொறட்டுவ புனித செபெஸ்டியன் கல்லூரியின் நவிஷ் சந்தேஷ் புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 47.96 செக்கன்களை எடுத்துக் கொண்டார்

எனினும், இறுதிப் போட்டியை 48.66 செக்கன்களில் ஓடிமுடித்த நவிஷ்கவுக்கு வெள்ளிப் பதக்கத்தையே வெற்றி கொள்ள முடிந்தது

இதேநேரம், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 100 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் சூரியவெவ விஹரகல மகா வித்தியாலயத்தின் பாக்யா நில்மினி புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்

Photos: Junior National Athletics Championship 2019 – Day 03

குறித்த போட்டியில் பாக்யாவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தின் செனுரி அனுத்தரா 14.75 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முந்தைய சாதனையை சமப்படுத்தியிருந்தார்

இதுஇவ்வாறிருக்க, அதேவயதுப் பிரிவில் ஆண்களுக்கான 110 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் கொழும்பு றோயல் கல்லூரியின் கவீஷ பண்டார (14.10 செக்.) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், வத்தளை லைசியம் சர்வதேசப் பாடசாலையின் கௌஷல்ய டயஸ் (4.19 செக்.) முந்தைய போட்டிச் சாதனையை சமப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தினையும் சுவீகரித்தனர்

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் நீர்கொழும்பு சென். ஜூட்ஸ் கல்லூரியின் ரனித் அரவ்வல புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். குறித்த போட்டியில் 13.63 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்

அதேபோல, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் மருதானை புனித ஜோசப் கல்லூரியின் பசிந்து மல்ஷான் 14.99 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார்.  

இதேவேளை, 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் கண்டி தர்மராஜ கல்லூரியின் எம்.டி விஜேரத்ன புதிய போட்டிச் சாதனை நிகழ்த்தினார். போட்டியை நிறைவுசெய்ய அவர் 4 நிமிடங்களும் 01.45 செக்கன்களை எடுத்துக் கொண்டார்

குறித்த போட்டியில் பங்குகொண்ட அம்பிட்டிய பெரவட்ஸ் கல்லூரியின் டி. ப்ஞகஹபிட்டிய 4 நிமிடங்களும் 05.00 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து முந்தைய சாதனையை முறியடித்தார்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<