ஐசிசியின் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பெதும் நிஸ்ஸங்க கடந்த மாதம் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் அதிரடியாக ஆடியிருந்தார்.
த்ரில் வெற்றியுடன் T20I தொடரில் முன்னிலை அடைந்த இலங்கை
இதில் ஒருநாள் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணிக்காக இரட்டைச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார். இவர் வெறும் 139 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 20 பௌண்டரிகள் அடங்கலாக 210 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.
அதுமாத்திரமின்றி T20I தொடரின் இரண்டாவது போட்டியில் 10 பந்துகளில் 25 ஓட்டங்களை விளாசி ஆரம்பம் ஒன்றை கொடுத்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் 200 இற்கும் அதிகமான ஓட்ட எண்ணிக்கை எதிர்நோக்கும் போது 30 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசினார். எனினும் உபாதை காரணமாக களத்திலிருந்து வெளியேற நேரிட்டது.
இவ்வாறு துடுப்பாட்டத்தில் சிறந்த பிரகாசிப்புகளை வெளிப்படுத்தியதன் காரணமாக பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர்களில் ஒருவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்த கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இரட்டைச்சதமடித்த யசஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் பெப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<