தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் முதல் நாளில் வடக்கு வீரர்கள் அபாரம்

102

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளின் முதல் நாளில் வட மாகாணத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் 3 தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர்.  

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்துள்ள 62ஆவது தேசிய கனிஷ் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் நேற்று (02) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது

இம்முறை போட்டிகளில் நாடளாவிய ரீதியில் இருந்து சுமார் 3,000 வீர, வீராங்கனைகள் 96 போட்டி நிகழ்ச்சிகளுக்காக கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப் பிரிவுகளுக்காக தொடர்ந்து 3 நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரில் இருந்து 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டிகளை கைவிடுவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், போட்டிகளின் முதல் நாளான நேற்றைய தினம் (02) 8 போட்டிச் சாதனைகளுடன், 2 போட்டிச் சாதனைகள் சமப்படுத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்

இதில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரியின் ருமேஷ் தரங்க (49.92 மீற்றர்), 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் புனித பேதுரு கல்லூரியின் ஹிருஷ ஹஷேன் (7.28 மீற்றர்) மற்றும் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் வலள ரத்னாயக்க கல்லூரியின் எச். ஹசன்தி (48.49 மீற்றர்), 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் கொழும்பு பிசொப்ஸ் கல்லூரியின் ஒவினி சந்திரசேகர (13.19 மீற்றர்) ஆகியோர் புதிய போட்டிச் சாதனைகள் நிகழ்த்தினர்.  

இந்திய மாநில மெய்வல்லுனரில் இலங்கை அஞ்சலோட்ட அணிக்கு தங்கம்

இந்தியாவில் நடைபெற்ற மாநிலங்களுக்கு ………..

இதேநேரம், 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10,000 மீற்றர் வேகநடை ஓட்டப் போட்டியில் மாகந்துர மத்திய மகா வித்தியாலயத்தின் சசிகலா தில்ருக்ஷி (57 நிமி. 12.22 செக்.), 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் வீரக்கெட்டிய ராஜபக் கல்லூரியின் எஸ்.என் பிரியமாலி (2 மணி. 31.52 செக்.) புதிய போட்டிச் சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர்.  

அத்துடன், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கண்டி லெக்சிகன் சர்வதேச பாடசாலையின் கவிந்து ஷ்மிக்க மற்றும் கொழும்பு புனித பெனெடிக் கல்லூரியின் ரவிந்து சிராத் ஆகிய வீரர்கள் போட்டியை ஒரே நேரத்தில் (ஒரு நிமி. 59.41 செக்.) ஓடிமுடித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை பகிர்ந்து கொண்டனர்

இதுஇவ்வாறிருக்க, போட்டிகளின் முதல் நாளன்று வட மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்

மிதுன்ராஜ் அபாரம்

போட்டிகளின் முதல் நாளான நேற்று காலை நடைபெற்ற 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்கு கொண்ட யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சுசிந்திரகுமார் மிதுன்ராஜ், 44.92 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியில் பம்பலப்பிட்டிய புனித பேதுரு கல்லூரி மாணவன் ருமேஷ் தரங்க 49.92 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், கொழும்பு பாதுகாப்புச் சேவைகள் கல்லூரியைச் சேர்ந்த கே. ரன்தெனிய 42.90 மீற்றர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இறுதியாக, கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ் மெய்வல்லுனர் போட்டியிலும் மிதுன்ராஜ் வெள்ளிப் பதக்கம் வெல்ல, ருமேஷ் தரங்க புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

ஹெரினாவை வீழ்த்திய டக்சிதா

நேற்று காலை நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குகொண்ட யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி என்.டக்சிதா 3.20 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இதேநேரம், குறித்த போட்டியில் டக்சிதாவுக்குப் பலத்த போட்டியைக் கொடுத்த யாழ். மகாஜனாக் கல்லூரியின் எஸ். ஹெரினா 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தை வெற்றி கொண்டார்.   

இதேநேரம், இப்போட்டியில் 3.00 மீற்றர் உயரத்தைத் தாவிய நீர்கொழும்பு நியூஸ்டட் மகளிர் கல்லூரியின் அனுஷாதி விக்ரமசேகர வெண்கலப் பதக்கத்தை வெற்றி கொள்ள, யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவிகளான எஸ் தரனிகா (2.90 மீற்றர்), வி. விஷோபிகா (2.90 மீற்றர்) ஆகிய இருவரும் முறையே 4ஆவது, 5ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டனர்

குறித்த இரு மாணவிகளும் கொழும்பில் கடந்த வாரம் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் களமிறங்கியிருந்தனர்.

தேசிய மட்டத்தில் முன்னிலையில் உள்ள வீராங்கனைகள் பங்குகொண்ட இப்போட்டியில் யாழ் பாடசாலைகள் மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட என்.டக்சிதா 3.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும், எஸ். ஹெரினா 3.10 மீற்றர் உயரத்தைத் தாவி 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது

தனுசங்கவி, தீபிகா அபாரம்

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். அளவெட்டி அருணோதயா கல்லூரியைச் சேர்ந்த பி. தனுசங்கவி 2.90 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றார்.

கடந்த வருடமும் இதே போட்டியில் முதல்தடவையாகக் களமிறங்கிய அவர், 2.90  உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்

குறித்த போட்டியில் முதல்தடவையாகப் பங்குகொண்ட தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் சி. தீபிகா, 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்தார்.  

ஹெரினாவின் சகோதரியான இவர், தேசிய கனிஷ் மெய்வல்லுனரில் முதல் தடவையாக பதக்கமொன்றினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

இதேநேரம், நீர்கொழும்பு நியூஸ்டட் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தமாஷா விக்ரமசிங்க 2.70 மீற்றர் உயரம் தாவி, வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார்

இராணுவ மெய்வல்லுனரை ஆக்கிரமிக்கும் தமிழ் பேசும் வீரரகள்

இலங்கை இராணுவத்தினால் 56ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவ மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் நேற்றுமுன்தினம் (28) கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறைவுக்கு வந்தது.

ஹெரினாவுக்கு 2ஆவது பதக்கம் 

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி நிறைவடைந்த கையோடு 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் பங்குகொண்ட எஸ் ஹெரினா, 1.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் வென்றார்.

எனினும், இப்போட்டியில் 1.55 மீற்றர் உயரத்தைத் தாவிய எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் வி.எஸ் அபேரத்ன தங்கப் பதக்கத்தையும், ஹோமாகம மஹிந்த ராஜபக் கல்லூரியின் தேஜானி  டில்ருக்ஷிகா வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், போட்டிகளின் 2ஆவது நாளான இன்று (03) ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட மைதான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் வட பகுதி வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது

வேகநடையில் அசத்திய கௌஷியா

18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மெய்வல்லுனர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குகொண்ட மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலய மாணவி ஆர்.கௌஷியா 3 நிமிடங்களும் 31.70 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தையும், வவுனியா மெய்வல்லுனர் சங்கத்தைச் சேர்ந்த ஜெயராசா தனுஷியா (33 நிமி. 26.55 செக்.) வெள்ளிப் பதக்கத்தையும் வெற்றி கொண்டனர்.   

இதேநேரம், களுத்துறை மிரிஸ்வத்த தேசிய பாடசாலையின் சந்திமா ஜயதிலக வெண்கலப் பதக்கத்தை வென்றனர்

கமல்ராஜுக்கு தங்கம்

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம்பாய்தல் போட்டியில் பங்குகொண்ட வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த கமல்ராஜ் இரோய் தங்கப் பதக்கம் வென்றார். போட்டியில் அவர் 7.36 மீற்றர் தூரத்தைப் பாய்ந்தார்

குறித்த போட்டியில் பாதுக்க ஸ்ரீ ப்ரியரத்ன கல்லூரியின் எஸ். நுவிந்து (7.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் ஆர். தஸநாயக்க (6.91 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தினையும் வெற்றி கொண்டனர்

இதேநேரம், குறித்த போட்டியில் பங்குகொண்ட யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரியின் சி.பி தனூஜன் 6.48 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து எட்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<