உலகக் கிண்ணத்திற்கான இலங்கை அணியில் இருந்து வெளியேறும் நுவன் பிரதீப்

2547

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப் தனக்கு ஏற்பட்ட நோய் ஒன்றின் காரணமாக, இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து முழுமையாக வெளியேறியுள்ளார்.

சிக்கன் பொக்ஸ் என அழைக்கப்படும் சின்னம்மை நோய் மூலம் பாதிக்கப்பட்ட பிரதீப், இலங்கை அணி வெள்ளிக்கிழமை (28) தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விளையாடியிருந்த உலகக் கிண்ண லீக் போட்டியிலும் பங்கேற்றிருக்கவில்லை.

நுவன் பிரதீப் இல்லாத நிலையில், உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி வாய்ப்பை தீர்மானிக்கும் ஆட்டங்களில் ஒன்றாக அமைந்த தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் தோல்வியினை தழுவியிருந்தது. 

தென்னாபிரிக்காவுக்கு எதிராக நுவான் பிரதீப் ஆடுவதில் சந்தேகம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நுவான் பிரதீப் நாளை (28) நடைபெறவுள்ள தென்னாபிரிக்க…

இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள நுவன் பிரதீப் 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். அத்தோடு, அவர் இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத் தொடரில் முதல் வெற்றியினை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பதிவு செய்ய 4 விக்கெட்டுக்கள் கைப்பற்றி முக்கிய பங்களிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நுவன் பிரதீப்பின் இடத்தினை இலங்கை குழாத்தில், உலகக் கிண்ணத் தொடருக்கான மேலதிக இலங்கை வீரராக இங்கிலாந்து சென்றிருக்கும் வேகப்பந்துவீச்சாளரான கசுன் ராஜித நிரப்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணிக்காக இதுவரையில் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் 26 வயதான கசுன் ராஜித, மொத்தமாக 5 விக்கெட்டுக்களை சாய்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த உலகக் கிண்ணத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி, 2 வெற்றிகளுடன் மொத்தமாக 6 புள்ளிகளை  பெற்றுள்ளது. இந்நிலையில் இலங்கை அணி இந்த உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு தெரிவாக வேண்டுமெனில் தமக்கு எஞ்சியிருக்கும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா ஆகிய  இரண்டு அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் கட்டாயம் வெற்றிகளை பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் காணப்படுகின்றது.

அதன்படி இலங்கை அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் தமது அடுத்த லீக் போட்டியில் எதிர்வரும் திங்கட்கிழமை (1) மேற்கிந்திய தீவுகள் அணியை செஸ்டர்-லீ-ஸ்ரிட் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கின்றது.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<