ஜெப்னா சுப்பர் லீக்கை வெற்றியுடன் ஆரம்பித்த கொக்குவில் ஸ்டார்ஸ், வேலணை வேங்கைகள்

396

இன்று (12) யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் போட்டித் தொடரானது ஆரம்பமாகியிருந்தது. உள்ளூர் கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் நடாத்தப்படும் இந்த T20 லீக் தொடரானது, வீரர்கள் அறிமுக நிகழ்வினைத் தொடர்ந்து வைபவ ரீதியாக ஆரம்பமாகியது.

கொக்குவில் ஸ்டார்ஸ் எதிர் பண்ணை ரில்கோ கிறேடியேற்ரேர்ஸ்

இவ்வாரம் B குழுவினருக்கான போட்டிகள் மாத்திரம் நிரலிடப்பட்டுள்ள நிலையில் கொக்குவில் ஸ்டார்ஸ் மற்றும் பண்ணை ரில்கோ கிறேடியேற்ரேர்ஸ் அணிகள் முதலாவது ஜெப்னா சுப்பர் லீக்கின் (JSL) முதலாவது போட்டிக்காக களங்கண்டிருந்தன.

துடுப்பாட்ட வீரர்களின் அபாரத்தோடு முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த மடவளை மதீனா

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பண்ணை ரில்கோ கிறேடியேற்ரேர்ஸ் கொக்குவில் ஸ்டார்ஸை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தனர்.

பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அணித்தலைவர் ரதிசன் இரண்டு விக்கெட்டுக்களை சாய்க்க ஆரம்பத்திலேயே கொக்குவில் அணி தடுமாறியது.

பிரதான பந்துவீச்சாளர்கள் ரதிசன், ஜனுதாசின் மூன்று ஓவர்கள் பவர் பிளேயினுள்ளேயே வீசி முடிக்கப்பட லாவகமாக இந்த இணைப்பாட்டத்தை கையாண்ட கொக்குவில்லின் நட்சத்திரங்களான ஜான்சன், ஜெனுதாஸ் ஜோடி 130 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

சிறிய மைதானத்தை சாதகமாக்கி துடுப்பாட்ட வீரர்கள் சிக்ஸர்களைப் பெற விக்கெட் சாய்க்க பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். ஜான்சன் மற்றும் ஜனுதாஸ் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்க, வினோத்தும் தன் பங்கிற்கு வீழ்த்தப்படாத 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பண்ணை அணி சார்பில் இளம் வீரர் ரதீசன் 4 ஓவர்களில் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார்.

207 ஓட்டங்களை வெற்றி இலக்காக நோக்கி களமிறங்கிய பண்ணை அணியின் முதலாவது விக்கெட் முதல் ஓவரிலேயே பறிக்கப்பட்டது, அணி 20 ஓட்டங்களை பெற்றிருக்கையில் இரண்டாவது விக்கெட்டாக கௌதமன் ஓய்வறை திரும்பினார். தொடர்ந்தும் பண்ணை அணியின் விக்கெட்டுக்கள் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக வீழ்த்தப்பட, 18.5  ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பண்ணை ரில்கோ கிறேடியேற்ரேர்ஸ் வீரர்களால் 181 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.

பந்துவீச்சில் கிருஷ்ணதீபன் 3 விக்கெட்டுக்களையும், சுபேந்திரன், ஜான்சன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை சாய்த்திருந்தனர்.

  • ஆட்ட நாயகன் – ஜான்சன் (கொக்குவில் ஸ்டார்ஸ்)

போட்டியின் சுருக்கம்

கொக்குவில் ஸ்டார்ஸ் – 206/4 (20) – ஜனுதாஸ் 79, ஜான்சன் 66, வினோத் 36, ரதீசன் 2/28

பண்ணை ரில்கோ கிறேடியேற்ரேர்ஸ் 181 (18.5) – கிருஷ்ணதீபன் 3/34, ஜான்சன் 2/19, சுபேந்திரன் 2/35

முடிவு –  25  ஓட்டங்களால் கொக்குவில் ஸ்டார்ஸ் அணியினர் வெற்றி


தெல்லியூர் டைடன்ஸ் எதிர் வேலணை வேங்கைகள்

நாளின் இரண்டாவது போட்டியிலும் தெல்லியூர் டைடன்ஸ் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய வேங்கைகளை தெல்லியூர் வீரர்கள் பந்துவீச்சில் அச்சுறுத்திய போதும், ஆதித்தன் 27 ஓட்டங்களை பெற்றுக்கொத்தார். 23 வயதிற்கு உட்பட்ட யாழ் மாவட்ட அணியினை வட மாகாண கிண்ணத்திற்காக இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியிருக்கும் இளைய வீரர் பாணுஜன் 45 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினார். பின்வரிசையில் லிங்கநாதன் அதிரடியாக 8 பந்துகளில் 21 ஓட்டங்கள் பெற்றுக்கொடுக்க வேலணை வேங்கைகள் 177 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திஸர டி20 சகலதுறை தரவரிசையில் ஐந்தாமிடத்தில்

பந்துவீச்சில் மதுசன் 3 விக்கெட்டுக்களையும், விஷ்ணு பிரகாஷ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறிய தெல்லியூர் டைடன்ஸ் அஜித்தின் 35 ஓட்டங்கள் மற்றும் பிரசாந்தனின் 18 ஓட்டங்களின் துணையுடன் வெற்றி இலக்கினை நோக்கி நகர்ந்தனர். அதிரடியாக துடுப்பாடிக் கொண்டிருந்த டைடன்ஸின் தலைவர் சுஜாந்தன் 35 ஓட்டங்களுடன் ரண் அவுட் முறை மூலம் ஆட்டமிழக்க மீண்டும் தெல்லியூர் அணி தடுமாறியது.

பின்வரிசை வீரர்களும் எல்லைக் கோட்டினை தாண்டி பந்தை அனுப்பும் நோக்கத்தில் அடித்தாட, வேலணை வேங்கைகள் விரைவாக விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

விதுசன் மற்றும் கோகுலன் ஜோடி தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்த, 15.2 ஓவர்களில் 122 ஓட்டங்களுக்கு தெல்லியூர் வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.

  • ஆட்ட நாயகன் – விதுசன் (வேலணை வேங்கைகள்)

போட்டியின் சுருக்கம்

வேலணை வேங்கைகள் – 177 (19.5) – பாணுஜன் 45, ஆதித்தன் 27, லிங்கநாதன் 21, மதுசன் 3/20, விஷ்ணுபிரகாஷ் 2/34

தெல்லியூர் டைடன்ஸ் – 122 (15.2) – சுஜாந்தன் 35, அஜித் 32, விதுசன் 3/13, கோகுலன் 3/31

முடிவு – 54 ஓட்டங்களால் வேலணை வேங்கைகள் வெற்றி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<