துடுப்பாட்ட வீரர்களின் அபாரத்தோடு முதல் இன்னிங்ஸ் வெற்றியை பதிவு செய்த மடவளை மதீனா

110

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு 19 வயதின் கீழ்ப்பட்ட டிவிஷன் – III பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், இன்று (11) நிறைவுக்கு வந்த மடவளை மதீனா கல்லூரி – பண்டாரவளை மத்திய கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி சமநிலை அடைய முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மடவளை மதீனா கல்லூரி தெரிவாகியது.

நேற்று (10) பண்டாரவளை மத்திய கல்லூரி மைதானத்தில் தொடங்கியிருந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மடவளை மதீனா கல்லூரி அணி, முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்தது.

>>கமில் மிஷாரவின் சதத்தோடு வலுப்பெற்ற இலங்கை இளையோர் அணி

இதன்படி முதலில் துடுப்பாடிய மடவளை மதீனா கல்லூரி அணிக்கு, MFM. முன்ஸிப் அபார சதம் ஒன்றுடன் 100 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். இதேநேரம், MSA. மொஹ்சேன் 93 ஓட்டங்களுடன் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்திருந்தார்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு மடவளை மதீனா கல்லூரி அணி, தமது முதல் இன்னிங்ஸில் 327 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து வலுவடைந்து காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

இதில் பண்டாரவளை மத்திய கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக பமுது சசிந்த மற்றும் நதுஷான் ஹேசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதன் பின்னர், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பண்டாரவளை மத்திய கல்லூரி 69.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. பண்டாரவளை மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதித் ரத்னநாயக்க 67 ஓட்டங்களையும் ருச்சிர விஜயசுந்தர 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

மறுமுனையில் மடவளை மதீனா கல்லூரி பந்துவீச்சில் AJM. அஜ்மல் மற்றும் MRM. யாஸிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதன் பின்னர், 105 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த மடவளை மதீனா கல்லூரி 134 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது போட்டியின் இரண்டாம் நாள்  ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. இதனால், ஆட்டம் சமநிலை அடைய போட்டியின் முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் போட்டியின் வெற்றியாளர்களாக மடவளை மதீனா கல்லூரி அணியினர் தெரிவாகினர்.

>>வெள்ளையடிப்புக்கு உள்ளான இலங்கை தொடர்ந்தும் எட்டாமிடத்தில்

மடவளை மதீனா கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸில் MRM. தரீப் அரைச்சதம் ஒன்றினை (50) பெற்றிருக்க, லக்ஷான் சலிந்த 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை பண்டாரவளை மத்திய கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

மடவளை மதீனா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 327/9d (76.2) – MFM. முன்ஸிப் 100, MSA. மொஹ்சின் 93, பமுது சசிந்த 2/39, நதுஷன் ஹேஷான் 2/56

பண்டாரவளை மத்திய கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 222 (69.4) – சதித் ரத்னாயக்க 67, ருச்சிர விஜயசுந்தர 42, AJM. அஜ்மல் 3/11, MRM. யாஸிர் 3/53

மடவளை மதீனா கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்) – 134/5 (34) – MRM. தரீப் 50, லப்வின் பஸ்லி 20, லக்ஷான் சாலிந்த 2/43

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது. (மடவளை மதீனா கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<