விறுவிறுப்பாக மாறுமா இலங்கை – நெதர்லாந்து மோதல்?

2559

ஐக்கிய அரபு இராச்சிய அணியுடனான முதல் சுற்றுப் போட்டியின் வெற்றியினைத் தொடர்ந்து இலங்கை அணி T20 உலகக் கிண்ணத் தொடரில் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகுவதற்கான தமது வாய்ப்புக்களை பிரகாசப்படுத்தியிருக்கின்றது.

>> T20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கு பேரிழப்பு!

இந்த நிலையில் இலங்கை அணி முதல் சுற்றில் விளையாடவிருக்கும் இறுதிப் போட்டி நாளை (20) நெதர்லாந்து அணியுடன் அவுஸ்திரேலியாவின் கீலோங் அரங்கில் நடைபெறுகின்றது.

சுபர் 12 சுற்று வாய்ப்பு யாருக்கு?

அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள் NRR
நெதர்லாந்து 2 2 0 4 0.149
நமீபியா 2 1 1 2 1.277
இலங்கை 2 1 1 2 0.600
ஐ.அ.இரா. 2 0 2 0 -2.028

மேலுள்ள புள்ளிப்பட்டியலை நோக்கும் போது ஐக்கிய அரபு இராச்சிய அணியினைத் தவிர நெதர்லாந்து, இலங்கை மற்றும் நமீபிய அணிகள் தொடரின் சுபர் 12 சுற்றுக்கு தெரிவாகும் சந்தர்ப்பங்களை அதிகமாக கொண்டிருக்கின்றன.

ஆனால் ஐக்கிய அரபு இராச்சிய அணியும் தமது முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த போதும் அதுவும் கணித அடிப்படையில் (Mathematically) அடுத்த சுற்றுக்கு தெரிவாகும் வாய்ப்பினை இன்னும் கொண்டிருக்கின்றது. இது நடைபெற ஐக்கிய அரபு இராச்சிய அணி தமக்கு எஞ்சியிருக்கும் நமீபிய மோதலில் பாரிய வெற்றியொன்றைப் பதிவு செய்வதோடு, இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் தோல்வியுற வேண்டும். இவை நடைபெற்ற பின்னர் NRR (நிகர ஓட்ட வித்தியாசம்) அடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சிய அணி சுபர் 12 சுற்றுக்கான வாய்ப்பினை பெறலாம்.

இலங்கை அணியினைப் பொறுத்தவரை அடுத்த சுற்றுக்கு தெரிவாக நெதர்லாந்து மோதலில் வெற்றியொன்றைப் பதிவு செய்தால் மாத்திரம் போதுமானது. ஏனெனில் இலங்கை அணி ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான வெற்றியுடன் தற்போது இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்திருக்கும் நெதர்லாந்து அணியினை விட சிறந்த NRR இணைக் கொண்டிருக்கின்றது. எனினும் நெதர்லாந்து அணியுடன் தோல்வியடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கு ஐக்கிய அரபு இராச்சிய – நமீபிய மோதலில் ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வெற்றியினையும், NRR இணையும் கருத்திற் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது.

>> உபாதைகளால் தடுமாறும் இலங்கை அணி

அதேநேரம் நெதர்லாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக வெற்றியினைப் பதிவு செய்தால் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக சுபர் 12 சுற்றுக்கு நுழையும். ஆனால் தோல்வியடையும் போது நமீபிய – ஐக்கிய அரபு இராச்சிய அணிகள் இடையிலான போட்டி முடிவினை வைத்தே அது அடுத்த சுற்றுக்கு செல்லுமா அல்லது இல்லையா என்பதனை தீர்மானிக்க முடியும்.

நமீபிய அணியினைப் பொறுத்தவரை நமீபிய அணி அடுத்த சுற்றுக்குக்கு செல்லும் தமது வாய்ப்பை உறுதி செய்த அடுத்த போட்டியில் கட்டாய வெற்றினைப் பதிவு செய்ய வேண்டும். ஆனால் தோல்வியடையும் போது இலங்கை – நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டியில் இலங்கை அணியின் தோல்வி மற்றும் NRR இன் அடிப்படையில் நமீபிய அணி அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாயப்ப்பு காணப்படுகின்றது.

இலங்கையின் செய்தி

இலங்கை அணியினைப் பொறுத்தவரை இன்னும் சரி செய்யப்படாத துடுப்பாட்ட வரிசை நெதர்லாந்து அணியுடனான போட்டியிலும் பின்னடைவை ஏற்படுத்துகின்ற விடயமாக இருக்கும் என கருதப்படுகின்றது. இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்களிடம் எதிர்பார்க்கப்படும் சிறந்த ஆட்டம் கடந்த இரண்டு போட்டிகளிலும் வெளிப்படவில்லை. உண்மையினைக் கூறப்போனால் கடந்த போட்டியில் பெதும் நிஸ்ஸங்க இல்லாது போயின் இலங்கை எதிர்பார்த்த முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெற்றிருக்க முடியாது. அதாவது ஒரு வீரர் மாத்திரமே சிறப்பாக ஆடியிருந்தார் மற்றைய வீரர்கள் சொதப்பியிருந்தனர். அத்துடன் நான்காம் இலக்கத்தில் துடுப்பாடவருகின்ற வீரர்களும் மோசமான ஆட்டத்தினையே வெளிப்படுத்துகின்றனர். எதிர்மறையாக இருக்கும் இந்த விடயங்கள் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சரி செய்யப்படும் போதே இலங்கை அணி துடுப்பாட்டத்தில் பிரகாசிக்க முடியும்.

அதேநேரம் பந்துவீச்சாளர்களின் இருப்பினை அவதானிக்கும் போது இலங்கை அணிக்கு துஷ்மன்த சமீரவின் இழப்பு தற்போது பாரிய பின்னடைவாக மாறியிருக்கின்றது. துஷ்மன்த சமீர தவிர ப்ரமோத் மதுசான் மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகியோரும் உபாதைக்கு ஆளாகியிருக்கின்றனர். ஆனால் இந்த இருவரும் தொடரின் ஏனைய போட்டிகளுக்கு முன்னர் பூரண சுகம் பெறுவார்கள் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

நெதர்லாந்துக்கு இலங்கை அணி சவாலா?

இரண்டு அணிகளும் இதுவரை இரண்டு T20I போட்டிகளில் மாத்திரமே விளையாடியிருக்கின்றன. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி பந்துவீச்சில் அசத்தலாக செயற்பட்டிருந்ததோடு அந்தப் போட்டிகள் இரண்டும் T20I உலகக் கிண்ணத் தொடரில் அணிகள் குறைவான ஓட்டங்களை பெற்ற போட்டிகளாகவும் பதிவாகியிருந்தன. அத்துடன் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அபார வெற்றிகளைப் பதிவு செய்திருந்தது. ஆனால் கடந்த காலப் பதிவுகளை வைத்து எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

நெதர்லாந்து அணி அண்மையில் பலம் பொருந்திய அணிகளுக்கு சவால் தரும் வகையிலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது. இன்னும் இலங்கை அணியும் நமீபிய மோதலில் தோல்வியடைந்ததனையும் நாம் பார்க்க கூடியதாக இருந்தது. எனவே கிடைத்த வாய்ப்பினை சரியாக உபயோகம் செய்யும் சந்தர்ப்பத்தில், கடந்த கால வடுக்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் இலங்கைக்கு எதிராக எதிர்பாராத ஆட்டத்தினை வெளிப்படுத்தி நெதர்லாந்து அணி சாதிக்க முடியும்.

>> அவுஸ்திரேலிய அணியில் பெட் கம்மின்ஸுக்கு புதிய பொறுப்பு

மழையின் பிரச்சினை இருக்குமா?

கிடைத்திருக்கும் தரவுகள் நாளைய போட்டியில் நடைபெறும் கீலோங் நகரில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் எதுவும் இருப்பதாக தெரிவிக்கவில்லை. ஆனால் மழை பெய்து போட்டி கைவிடப்படும் போது இலங்கை அணி சுபர் 12 சுற்றுக்கு செல்வது கேள்விக்குறியாகும் என்பதில் துளியளவும் சந்தேகம் கிடையாது.

அணி விபரங்கள்

ஐக்கிய அரபு இராச்சிய அணியினை எதிர்கொண்ட இலங்கை அணி குறைந்தது நாளைய போட்டியில் இரண்டு மாற்றங்களுடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில் T20 உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் வாய்ப்பினை தற்போது முழுமையாக இழந்திருக்கும் துஷ்மன்த சமீரவிற்குப் பதிலாக லஹிரு குமார அணிக்குள் வர முடியும். அத்துடன் ப்ரமோத் மதுசானிற்குப் பதிலாகவும் ஒரு புதிய வேகப்பந்துவீச்சாளர் ஆட எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் நமீபிய அணியினை தமது இறுதிப் போட்டியில் வெற்றி கொண்ட நெதர்லாந்து மாற்றங்கள் எதுவும் இன்றி நாளைய போட்டியில் ஆடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை (எதிர்பார்ப்பு XI) – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ

நெதர்லாந்து (எதிர்பார்ப்பு XI) – மெக்ஸ் ஓடோவ்ட், விக்ரமஜித் சிங், பாஸ் டி லேடெ, டொம் கூப்பர், கொலின் ஏக்கர்மென், ஸ்கொட் எட்வார்ட்ஸ், டிம் பிரின்கல், ரொலோப் வன் டர் மெர்வே, டிம் வன் டர் குக்டேன், பிரட் கிளாஸன், போல் வான் மீக்ரென்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<