கேள்விக்குறியாகும் இலங்கை அணியின் உலகக் கிண்ண கனவு

1200

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் தம்மைத் தயார்படுத்த தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியிருந்த இலங்கை அணி, 5-0 என அத்தொடரை பறிகொடுத்தது.

உலகக் கிண்ணப் போட்டிக்கு இன்னும் 2 மாதங்களே எஞ்சியிருக்கும் நிலையில், இலங்கை அணி விளையாடிய கடைசி சவால்மிக்க சர்வதேச தொடர் இதுவாகும். இதில் தொடரை இழந்து ஒட்டுமொத்த தன்னம்பிக்கையையும், தார்மீக மனோபலத்தையும் இலங்கை அணி தொலைத்திருக்கிறது.

தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றியை இலங்கை அணியால் ஒருநாள் தொடரில் தொடர முடியாமல் போய்விட்டது. தென்னாபிரிக்காவுடனாள ஒருநாள் தொடரில் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் மிகவும் மோசமான பின்னடைவை சந்தித்த இலங்கை அணிக்கு, முதலாவதும், ஐந்தாவதும் ஒருநாள் போட்டிகளில் மாத்திரமே 200 ஓட்டங்களுக்கு (231) மேல் பெற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன், 5 ஒருநாள் போட்டிகளிலும் 23 விக்கெட்டுக்களை மாத்திரமே இலங்கை அணி கைப்பற்றியதுடன், 5 போட்டிகளிலும் சகல விக்கெட்டுகளையும் இழந்து ஏமாற்றத்தை சந்தித்தது.

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்தது முதல் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வருகின்றது. டெஸ்ட் அணி சிறப்பாக செயற்பட்ட போதிலும், ஒருநாள் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றதை கடந்த கால போட்டிகள் பறைசாற்றுகின்றன.

ஒருநாள் தொடரை வைட்வொஷ் செய்து வென்ற தென்னாபிரிக்கா

கேப்டவுனில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள்…

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ள இறுதி அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு நாடுகளும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.  

இதுஇவ்வாறிருக்க, இம்முறை உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக விளையாடப் போகின்ற இறுதி பதினொரு வீரர்களும் யார்? உலகக் கிண்ண குழாம் எவ்வாறு அமையும்? இலங்கை அணியின் தலைவர் யார்? என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.   

இந்த நிலையில், துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானங்களிலேயே இலங்கை அணி தொடரை இழந்துவிட்ட நிலையில், மின்னல் வேகத்தில் ஸ்விங் ஆகும் இங்கிலாந்து ஆடுகளத்தில் இலங்கை வீரர்கள் எவ்வாறு ஏனைய அணிகளின் பந்துவீச்சை எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

அதுமட்டுமல்லாமல், கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கை அணி ஒருநாள் தொடரை வெல்ல முடியாமல் பெரும் நெருக்கடியிலும், நம்பிக்கை குறைவிலும் தள்ளாடிக்கொண்டிருந்தது. அதிலும் குறிப்பாக, இலங்கை அணியில் உள்ள இளம் வீரர்களுக்கான தன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் சிரேஷ்ட வீரர்கள் வழங்கத் தவறிவிட்டனர் என்றும் விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

2015 உலகக் கிண்ணப் போட்டிகளை அடுத்து இலங்கை அணிக்குள் ஏராளமான சோதனை முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், இன்னும் சிறந்த ஒரு ஆரம்பத் துடுப்பாட்ட வீரர், மத்திய வரிசை வீரர், பந்து வீச்சாளர்கள் என உரிய இடத்துக்கு வீரர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.   

வீரர்களின் அடைவுமட்டங்கள்

உலகக் கிண்ணமும் நெருங்கிவிட்டது. உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ என பலரையும் சோதித்துப் பார்த்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

வீரர்கள் தங்களை நிலைப்படுத்திக்கொள்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளை வழங்காமல் இருப்பதாலேயே அவர்களால் தொடர்ந்து திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் முதல் 4ஆவது 5ஆவது இடத்துக்கு தெளிவான துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல், குழப்பத்துடனே உலகக் கிண்ணத்தை இலங்கை அணி எதிர்கொள்ளப்போகிறது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் முயற்சித்தும் இன்னும் வீரர்களை அடையாளம் காண முடியாமல் உள்ளது இலங்கை அணி சந்திக்கும் மிக முக்கிய சவாலாக உள்ளது.

குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, தனன்ஜய டி சில்வா, ஆகியோர் தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பெரிய அளவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை.

இலங்கை – தென்னாபிரிக்க தொடரின் பின்னரான புதிய ஒருநாள் தரவரிசை

இலங்கை அணியை வெள்ளையடிப்பு செய்து ஒருநாள் தொடரை கைப்பற்றிய…

இந்தப் போட்டித் தொடரில் கமிந்து மெண்டிஸ், இசுரு உதான மற்றும் அஞ்செலோ பெரேரா உள்ளிட்ட மூன்று வீரர்களையும் முதல் போட்டியிலேயே களமிறக்கியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மூவருக்கும் 3ஆவது போட்டிக்குப் பிறகே விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் குசல் மெண்டிஸ் 5 போட்டிகளில் விளையாடி 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 202 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களில் 3ஆவது இடத்தையும், அறிமுக வீரர் ஓசத பெர்னாண்டோ, 127 ஓட்டங்களைக் குவித்து 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதேநேரம், கடைசி 3 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை கொடுத்த இசுரு உதான, ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 110 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களில் 6ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேநேரம், இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய சகலதுறை வீரராகக் கருதப்படும் திசர பெரேராவுக்கு இந்த தொடரில் பிரகாசிக்க முடியவில்லை. மேலும், அவரது பந்து வீச்சு இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது. 5 போட்டிகளிலும் விளையாடிய அவர் துடுப்பாட்டத்தில் 56 ஓட்டங்களை பெற்றதுடன், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

நியூசிலாந்துடனான மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட தொடரில் சிறப்பாக செயல்பட்டு இலங்கை அணியின் வெற்றிக்கான பங்களிப்பை வழங்கிய திசர பெரேரா, அதன் பின்னர் தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. துடுப்பாட்டத்தில் பொறுமையில்லாமல் அவசரகதியில் டி-20 போன்று விளையாடி விக்கெட்டை பறிகொடுக்கிறார்.

இதுஇவ்வாறிருக்க, உள்ளூர் கழக மட்ட போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்களுடன் அபாரமான ஆற்றல்களை வெளிப்படுத்தி தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் இணைத்து கொள்ளப்பட்ட அஞ்செலோ பெரேராவுக்கு கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. குறித்த போட்டியில் மத்திய வரிசையில் களமிறங்கிய அவர், 31 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை: இசுரு உதான

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்களின்…

முதல்தர கிரிக்கெட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராகவும் உலகின் இரண்டாமவராகவும் சாதனை படைத்த அஞ்செலோ பெரேராவிற்கு ஏன் 5 போட்டிகளிலும் வாய்ப்பளிக்கவில்லை என்பது மிகப் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், குறிப்பாக எப்போதும் களத்தில் ஆவேசமாக இருக்கின்ற நிரோஷன் திக்வெல்ல, விக்கெட் காப்பில் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும். அதேபோல அவருக்கு துடுப்பாட்டத்திலும் பொறுமையில்லை. உலகக் கிண்ணத்தில் இந்த நிலை மாறுமா என்பது கேள்விக்குறியாகும்.

இலங்கை அணியின் பந்துவீச்சும் இந்த தொடர் முழுவதும் எடுபடவில்லை. தென்னாபிரிக்க அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், இலங்கை வீரர்கள் அதன் பலனைப் பெற்றுக்கொள்ள தவறவிட்டனர்.

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி இலங்கை அணிக்குள் இடம்பெற்று அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்த லசித் மாலிங்கவுக்கு 5 போட்டிளிலும் 4 விக்கெட்டுக்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

அத்துடன், பந்துவீச்சுப் பாணியை சரிசெய்து கொண்டு நம்பிக்கையுடன் மீண்டும் அணிக்குள் இடம்பெற்ற அகில தனன்ஜயவுக்கும் இந்தத் தொடரில் ஏமாற்றமே கிடைத்தது.

இவ்வாறு பார்க்கின்ற போது, மொத்தத்தில் உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பாக இலங்கை அணியின் முன் பல்வேறு கேள்விகள் இருக்கிறது.

இம்முறை உலகக் கிண்ணப் போட்டித் தொடர் ரொபின் ரவுண்ட் முறையில் நடைபெற உள்ளது. இதன்படி இலங்கை அணி 9 லீக் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதில் குறைந்தது 6 ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதியில் கால்பதிக்க முடியும். இதனால் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் SSC அணி சம்பியன்

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இலங்கையின் உள்ளூர் முதல்தரக் கழகங்கள் இடையே…

நெருக்கடியில் தேர்வாளர்கள்

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற மிகப் பெரிய சம்பளமாக 9 கோடி ரூபாய்க்கு சந்திக்க ஹத்துருசிங்க கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், அவரது பயிற்றுப்பின் கீழ் கடந்த 15 மாதங்களில் இலங்கை அணி பங்கேற்றிருந்த 21 ஒருநாள் போட்டிகளில் 6 இல் மாத்திரமே வெற்றிகொண்டது. அதில் ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியும் அடங்கும்.

இந்த சூழ்நிலையில், உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாத்தை எவ்வாறு தெரிவுசெய்வது என்பது தொடர்பில் அசந்த டி மெல் தலைமையிலலான தெரிவுக் குழுவினர் மிகப் பெரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர். இதில் புதுமுக வீரர்கள் சிறந்த மனநிலையுடன் தமக்கு கிடைக்கின்ற போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினாலும், சிரேஷ்ட வீரர்கள் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேபோல, சிரேஷ்ட வீரர்கள் மைதானத்துக்கு வெளியில் தமது தனிப்பட்ட பிரச்சினைகளை சமூகவலைத்தளங்கள் வாயிலாக பூதாகரமாக்கி அதை அணியின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட விதம் மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியது. எனினும்,விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீட்டினால் அந்தப் பிரச்சினைக்கு சுமுகமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடரில் பெற்றுக்கொண்ட தோல்விகளைப் பார்க்கும்போது அதன் தாக்கம் இன்னும் இருக்கின்றதா என்ற உணர்வையும் எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

ஹத்துருசிங்கவுக்கு திடீர் அழைப்பு

2019 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு சிறந்த அணியொன்றை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க கடந்த 2017ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். எனினும், அவரது பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இதுவரை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லை.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்கவை…

இந்த நிலையில், தற்போது நடைபெற்றுவருகின்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடரிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவி தொடரையும் இழந்தது. இந்தப் பின்னணியில் சந்திக ஹத்துருசிங்கவை தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக சந்திக்க ஹத்துருசிங்க செயற்படவுள்ளார். எனவே, அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நாங்கள் தீர்மானிக்கவில்லை. இந்த நிலையில், எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவரை நாட்டுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் போட்டி

இவ்வாறான ஒரு இக்கட்டான நிலையில், தற்போது நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க சுற்றுப்பயணம் முடிவுக்கு வந்தபிறகு நாடு திரும்பவுள்ள இலங்கை அணிக்கு, உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பலம் குறைந்த ஸ்கொட்லாந்து அணியுன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மாத்திரமே உள்ளது.

இந்த நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகள் மே மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதால் அதில் பங்கேற்கவுள்ள வீரர்களை ஒவ்வொரு நாடுகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதிக்கு முன் அறிவிக்க வேண்டும். எனவே உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இறுதி அணியை தேர்வு செய்வதில் ஒவ்வொரு நாடும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது. இதுஇவ்வாறிருக்க, இலங்கை அணிக்குழாமும் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரமளவில் வெளியிடப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மாகாண ஒருநாள் தொடருக்கான குழாம்கள், போட்டிகள் அறிவிப்பு

இதனால் உலகக் கிண்ணத்தில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியை தெரிவுசெய்வதற்கு மாகாணங்களுக்கிடையிலான ஒருநாள் தொடரை மீண்டும் நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தேசித்துள்ளது.

எனவே, கடந்த வருடத்தைப் போல கொழும்பு, காலி, கண்டி மற்றும் தம்புள்ளை ஆகிய நான்கு அணிகள் இம்முறை போட்டிகளில் பங்கேற்கவுள்ளதுடன், இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அனைத்து வீரர்களும் பங்குபற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தத் தொடரில் திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு உலகக் கிண்ணத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதன்பிறகு தம்புள்ளை மற்றும் பல்லேகலையில் நடைபெறவுள்ள விசேட பயிற்சி முகாம்களில் அவர்கள் பங்குபற்றவுள்ளனர். அதன்பிறகு எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி இலங்கை அணி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

இறுதியாக

கால் முறிந்த குதிரையைக் காட்டிலும், பலமிக்க குதிரைகளை போட்டியில் ஓடவிடுவது தான் மிகவும் சிறந்த முடிவாகும் என்பது அனைவரது பொதுவான கருத்தாக உள்ளது. அதேபோல சிரேஷ்ட வீரர்கள் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறும் பட்சத்தில் முழுவதும் இளம் வீரர்களைக் கொண்ட ஒரு அணியை உலகக் கிண்ணத்தில் களமிறக்கி அதில் ஓரிண்டு போட்டியிலாவது இலங்கை அணி வெற்றி பெறுவதென்பது மிகப் பெரிய சாதனை வெற்றியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதுஇவ்வாறிருக்க, திருமணம் ஒன்று நடைபெறுவதற்கு ஜோடிகள் கட்டாயம் இருக்க வேண்டும். ஆனால் உலகக் கிண்ணம் என்ற திருமணத்துக்கு இலங்கை அணி தயாராக இருந்தாலும், உரிய ஜோடிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதுதான் கவலைக்குரிய விடயமாகும்.

இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அதிக தடவைகள் பங்குபற்றிய பெருமையைக் கொண்ட இலங்கை அணிக்கு நேர்ந்த இந்த நிலைமைக்கு பதில் இம்முறை உலகக் கிண்ணத்தில் கிடைக்குமா என்பது சந்தேகம்.

எனினும், இவற்றுக்கெல்லாம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஒரு தெளிவு கிடைக்கக்கூடும் என நம்பப்படுகிறது. ஏனெனில் உலகக் கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை இறுதி செய்வதற்கு அன்றுதான் கடைசி நாள்.

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<