ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறினார் மலிங்க

526
Lasith Malinga
© BCCI

முழங்காலில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 9ஆவது ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவக் குழு மலிங்க எதிர்வரும் 4 மாதங்களுக்கு விளையாட முடியாத நிலையில் உள்ளார் என்று கூறியுள்ளது. இதனால் இலங்கை அணியின் மருத்துவக் குழு மலிங்க எதிர்கால போட்டிகளில்  விளையாடுவது தொடர்பில் பரீட்சை செய்ய உள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் குறிப்பிட்டுள்ள அறிக்கையில்  லசித் மலிங்கவை இலங்கை கிரிக்கட் சபையினால் நியமிக்கப்பட்ட விஷேட மருத்துவக் குழுவின் முன் எதிர்வரும் புதன்கிழமை ஏப்ரல் மதம் 20ஆம் திகதி ஆஜராகுமாறு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

லசித் மலிங்க அறுவை சிகிச்சைக்கு  உட்படுத்தப்பட்டால் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான தொடர்களில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டித் தொடரின் போதே மலிங்கவின் இடது முழங்காலில் காயம் ஏற்பட்டு இருந்தது.  அவ்வாறு இருந்தும் மலிங்க  தான் நல்ல உடல் நிலையைப் பெறத் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து அணியில் இணைய முயன்றாலும் அது பயனளிக்கவில்லை. கடந்த 5 மாதங்களில் மலிங்க ஒரே ஒரு போட்டியில் தான் பங்கு பற்றியுள்ளார். கடந்த ஆசியக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கெதிராக அவர் பங்கு பற்றிய அந்த ஒரு போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசி 26 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்று இருந்தார் என்பது முக்கிய அம்சமாகும்.