தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் தொடருடன் இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க

911

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்கவை தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு மீண்டும் இலங்கைக்கு திரும்பி அழைப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) தீர்மானித்துள்ளது.

இராணுவ தொப்பி விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பதிலளித்த ஐ.சி.சி

இதன்படி, தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரில் இலங்கை அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக, தற்போதைய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரான ஸ்டீவ் றிக்சன் செயற்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா எமது இணையத்தளத்துக்கு வழங்கிய விசேட செவ்வியில், எதிர்வரும் 16ஆம் திகதி கேப்டவுனில் நடைபெறவுள்ள 5ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டிக்குப் பிறகு சந்திக்க ஹத்துருசிங்கவை நாடு திரும்புமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கு வழங்பப்படுகின்ற மிகப் பெரிய சம்பளமாக 9 கோடி ரூபாய்க்கு சந்திக்க ஹத்துருசிங்க கடந்த வருடம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும், அவரது பயிற்றுப்பின் கீழ் கடந்த 15 மாதங்களில் இலங்கை அணி பங்கேற்றிருந்த 23 ஒருநாள் போட்டிகளில் 6இல் மாத்திரமே வெற்றிகொண்டது. அதில் ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியும் அடங்கும்.

நான்காவது ஒரு நாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை

இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போட்டித் தொடர்களில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்து இருந்ததுடன், இதுதொடர்பில் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்கவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களில் அஞ்செலோ மெதிவ்ஸும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இலங்கை அணி சந்தித்து வருகின்ற தொடர் தோல்விகள் காரணமாகவே சந்திக்க ஹத்துருசிங்கவை மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த சம்மி சில்வா, உலகக் கிண்ணப் போட்டிகள் வரை இலங்கை அணியின் பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்க செயற்படுவார் என சுட்டிக்காட்டினார்.

இந்த கேள்விக்கு தொடர்ந்து அவர் பதிலளிக்கையில், எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவரை நாட்டுக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்தோம். உண்மையில் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்த காலங்களில் பெரும்பாலான போட்டிகளில் நாம் தோல்வியைத் தழுவினோம். ஆனால் அவரை நாடு திரும்புமாறு திடீரென அழைப்பு விடுத்தது அவரை பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அல்ல.

நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை: இசுரு உதான

ஏனெனில், கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு அவரை நாங்கள் சந்திக்கவில்லை. அதேபோல, தென்னாபிரிக்காவுடனான போட்டித் தொடர் நிறைவடைந்த கையோடு விடுமுறைக்காக அவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார். அதேபோல, உலகக் கிண்ணப் போட்டிகள் வரை எமக்கு எந்தவொரு சர்வதேசப் போட்டியும் இல்லை. எனவே உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்கு நிறைய விடயங்கள் உள்ளன. இவ்வாறு அவரை அழைத்து பேசினால்தான் எமக்கும் இலகுவாக இருக்கும். அத்துடன், தென்னாபிரிக்காவுடன் விளையாடுவதற்கு டி-20 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில், அவருடைய வருகை எந்த விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தாது. மேலும், குறித்த விடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

2011 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுவதற்கு முன் இலங்கை அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய சந்திக்க ஹத்துருசிங்க, இலங்கை அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2019 உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கு இலங்கை அணியை தயார்படுத்துவது அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பாக இருந்தாலும், இலங்கை அணி இதுவரை எந்தவொரு முன்னேற்றத்தையும் காணவில்லை.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க