அனுபவம் குறைந்த வீரர்களுடன் கன்னி LPL தொடரில் கண்டி டஸ்கர்ஸ்

Lanka Premier League 2020 – Coverage powered by My Cola

264

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் (LPL) T20 தொடர் ஆரம்பமாக இன்னும் ஓரிரு தினங்களே இருக்கும் நிலையில், இந்த தொடரில் ஆடுகின்ற கண்டி நகரினை பிரதிநிதித்துவம் செய்யும் கண்டி டஸ்கர்ஸ் குழாம் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்த தொடரில் களம் காண காத்திருக்கின்றது. 

”சொஹைல் கான்” திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இந்திய பொலிவூட் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் சொஹைல் கான் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் இந்த கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகன் ஹஷான் திலகரட்ன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

லங்கா ப்ரீமியர் லீக்கை ஆளுமா கொழும்பு கிங்ஸ்?

ஹஷான் திலகரட்ன தவிர கண்டி டஸ்கர்ஸ் பயிற்சிக் குழாத்தினை நோக்கும் போது அவ்வணிக்கு நுவான் குலசேகர, லங்கா டி சில்வா ஆகியோர் முறையே பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், களத்தடுப்பு பயிற்சியாளராகவும் செயற்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறைவீரரான பர்வீஸ் மஹரூப் அணியின் முகாமையாளர் பொறுப்பினை எடுத்திருக்கின்றார். 

கண்டி டஸ்கர்ஸ் அணிக் குழாம்

  • துடுப்பாட்டவீரர்கள் – குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், ப்ரியமால் பெரேரா, ப்ரன்டன் டெய்லர், றஹ்மத்துல்லா குர்பாஸ், நிஷான் மதுஷ்க
  • சகலதுறைவீரர்கள் – கவிஷ்க அஞ்சுல, சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ன, கமிந்து மெண்டிஸ், லஹிரு சமரக்கோன், இஷான் ஜயரட்ன
  • சுழல் பந்துவீச்சாளர்கள் – தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, கெவின் கொத்திகொட, சாமிக்கர எதிரிசிங்க  
  • வேகப் பந்துவீச்சாளர்கள் – நுவான் ப்ரதீப், விஷ்வ பெர்னாந்து, இர்பான் பதான், முனாப் படேல், டேல் ஸ்டெய்ன், நவீன் உல் ஹக், சொஹைல் தன்வீர்

கண்டி அணியின் முன்வரிசை துடுப்பாட்டத்தினை நோக்கும் போது அவ்வணிக்கு அதன் தலைவர் குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் ஜிம்பாப்வே நட்சத்திரம் ப்ரன்டன் டெய்லர் போன்றோர் சிறந்த ஆரம்பத்தினை கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், மத்திய வரிசையினை நோக்கும் போது நட்சத்திர சகலதுறைவீரர் அசேல குணரத்ன, கமிந்து மெண்டிஸ் மற்றும் ப்ரியமால் பெரேரா ஆகியோரின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

மறுமுனையில் பந்துவீச்சு வரிசையினை நோக்கும் போது டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய போன்ற, இலங்கை அணிக்கு தொடர்ச்சியாக ஆடும் சுழல் பந்துவீச்சாளர்கள் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைக்கப்பட்ட போதும் இவர்கள் T20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களாக இருக்கும் சீக்குகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ் மற்றும் மாய சுழல்பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொட ஆகியோரிடம் போட்டியிட்டே முதல் பதினொருவர் அணிக்குள் வாய்ப்பினை பெறும் சூழ்நிலை இருக்கும். 

LPL ஆடுவது கடையில் பாண் வாங்குவது போன்ற விடயமல்ல – மாலிங்க

அதேநேரம், கண்டி அணியின் வேகப் பந்துவீச்சு வரிசையை நோக்கும் போது அவ்வணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அனுபவம் கொண்ட தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் உள்ளடக்கமாகும். ஆனால், ஸ்டெய்னுக்கு இலங்கை வந்த பின்னர் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் கண்டி டஸ்கர்ஸ் அணி ஆடும் ஓரிரு போட்டிகளில் விளையாட முடியாத நிலை காணப்படுகின்றது. 

ஆனாலும் இலங்கை அணியின் அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் நுவன் ப்ரதிப், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான், முனாப் படேல் போன்றோரும் வேகப் பந்துவீச்சாளர்களாக கண்டி அணியினை பலப்படுத்த காத்திருக்கின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக அண்மையில் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்த விஷ்வ பெர்னாந்துவும் ஒரு மேலதிக வேகப் பந்துவீச்சாளராக கடமை புரிய தயார் நிலையில் உள்ளார். 

LPL தொடரில் கண்டி அணிக்காக பிரகாசிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் யார் என நோக்கினால் நமக்கு கிடைக்கும் பதிலாக குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர் வருகின்றது. இதில் அடிக்கடி உபாதைக்கு ஆளாகும் குசல் ஜனித் பெரேரா இந்த ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்காது போனாலும், குசல் மெண்டிஸ் இராணுவப்படை தளபதி லீக் T20 தொடர் போன்ற உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார். 

லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் ஆடும் அணிக் குழாம்கள் உறுதி

இவர்கள் தவிர கமிந்து மெண்டிஸ், கெவின் கொத்திகொட போன்ற இளம்வீரர்களும் கண்டி டஸ்கர்ஸ் அணியின் இளம் நட்சத்திரங்களாக ஜொலிக்க எதிர்பார்க்கப்படுகின்றனர். இதில் இரண்டு கைகள் மூலமும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட கமிந்து மெண்டிஸ் பந்துவீச்சினை விட துடுப்பாட்ட வீரராகவே ஆளுமைகளை அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தியிருந்தார். 

அதேநேரம், தனது மாயசுழல் மூலம் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை குழப்படமையச் செய்யும் ஆற்றலை கெவின் கொத்திகொட கொண்டிருக்கின்றார். அதேநேரம் 21 வயது நிரம்பிய வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் அண்மையில் நிறைவுக்கு வந்த CPL T20 தொடரில் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

இறுதியாக, கண்டி டஸ்கர்ஸ் அணி தமக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கெட், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர் போன்றோரினை பல்வேறு காரணங்களினால் இந்த தொடரில் இழந்த போதும் சில திருப்பங்களை ஏற்படுத்தும் நம்பிக்கையோடு தமது முதல் போட்டியில் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு கிங்ஸ் அணியினை எதிர்கொள்கின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<