நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை: இசுரு உதான

642

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் துடுப்பாட்ட வீரர்களின் மோசமான வெளிப்படுத்தல்கள் காரணமாக இலங்கை அணி படுதோல்வியை சந்தித்ததுடன், தொடரையும் 0-4 என இழந்துள்ளது.

நான்காவது ஒரு நாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த இலங்கை

சுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க …..

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் தொடர் முழுவதும் பிரகாசிக்க தவறி வருகின்றனர். முக்கியமாக உபுல் தரங்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோர் தேவையற்ற துடுப்பாட்ட யுத்திகளை கையாண்டு விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து வருவதுடன், புதிய வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் தடுமாறி வருகின்றார்.

ஆரம்பத் துடுப்பாட்டம் சருக்கி வருவதுடன், மத்திய வரிசை வீரர்கள் போட்டியின் நிலைமையை அறிந்து துடுப்பெடுத்தாட தவறி வருகின்றனர். குறிப்பாக குசல் மெண்டிஸ் மாத்திரம் இந்த தொடரில் ஓரளவு பிரகாசித்து வருவதுடன், ஏனைய வீரர்கள் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். அத்துடன், நியூசிலாந்து தொடரில் சிறப்பாக விளையாடிய திசர பெரேரா, இந்த தொடர் முழுவதும் ஏமாற்றமளித்து வருகின்றார்.

இவ்வாறு முன்னணி வீரர்கள் தடுமாறி வரும் நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலான துடுப்பாட்டத்தை இசுரு உதான மேற்கொண்டிருந்தார். இலங்கை T20 அணியில் விளையாடி வந்த இவர், தனது 4வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடியதுடன், அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் இலங்கை அணி 97 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய தருணத்தில் களமிறங்கிய இவர், 57 பந்துகளில் 78 ஓட்டங்களை விளாசியிருந்தார்.

Photo Album : Sri Lanka vs South Africa – 4th ODI

இவரது இந்த ஓட்ட எண்ணிக்கையானது ஒருநாள் போட்டிகளில் 9வது இடத்தில் களமிறங்கிய வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட 4வது அதிகூடிய ஓட்டம் என்பதுடன், இலங்கையின் இரண்டாவது அதிகூடிய ஓட்டமாகவும் பதிவாகியது. இதற்கு முன்னர் 2014ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் திசர பெரேரா 80* ஓட்டங்களை பெற்றிருந்தமையே, 9வது இடத்தில் இலங்கை வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை சாதனையாக இருந்தது.

இவ்வாறு அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலம் இலங்கை அணிக்கு ஆறுதல் அளித்திருந்த இசுரு உதான நேற்றைய போட்டியின் பின்னர் எமது www.thepapare.com இணையத்தளத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், “நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை. அதுதான் தோல்விக்கு காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.

தோல்வி குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “துடுப்பாட்ட வீரர்கள் அடிப்படையான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தால் எம்மால் 270 அல்லது 280 ஓட்டங்களை இலகுவாக பெற்றிருக்க முடியும். இந்த ஆடுகளமானது ஆசிய நாடுகளின் ஆடுகளங்களின் தன்மையை கொண்டிருந்தது. உண்மையாக கூற வேண்டுமானால், நாம் சிறப்பாக துடுப்பெடுத்தாடவில்லை. அதுதான் தோல்விக்கு முதல் காரணம்.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகிய ஹசிம் அம்லா

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இறுதி இரண்டு ஒருநாள் …..

எனது துடுப்பாட்டத்தின் மூலம் அணிக்கு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தமை மகிழ்ச்சியத்தாலும், போட்டியானது தோல்வியில் முடிந்தமையால் பெரிதான மகிழ்ச்சியில்லை.

அதேநேரம், நாம் அடிப்படைகளை சிறப்பாக செய்தால், இன்னும் முன்னோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதிலும், அடுத்து வரவுள்ள போட்டிகள் தொடர்பில் சிந்தித்து விளையாடும் பட்சத்தில் எம்மால் சாதகமான பெறுபேறுகளை பெறமுடியும்” என்றார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்கு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியுற்று தொடரை இழந்துள்ள இலங்கை அணி, ஒருநாள் தொடரின் வைட்வொஷ்ஷை தடுப்பதற்கு, இறுதி போட்டியில் கட்டாய வெற்றியினை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, இரண்டு அணிகளுக்கும் இடையிலான இறுதி ஒருநாள் போட்டி எதிர்வரும் 16ம் திகதி கேப்டவுனில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

>>?மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<