ஆப்கான் வீரர்களின் சுழலில் சிக்கி வீழ்ந்த மும்பை அணி

Indian Premier League 2023

89

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று (25) நடைபெற்ற IPL தொடரின் 35ஆவது லீக் போட்டியில் சகலதுறையிலும் பிரகாசித்த ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, குஜராத் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக விருத்திமான் சஹா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். சற்று தடுமாற்றதுடன் துடுப்பாடிய சஹாவை 7 ஓட்டங்களுடன் அர்ஜூன் டெண்டுல்கர் வெளியேற்ற, அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதன்பின் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் சுப்மன் கில் 30 பந்துகளில் தனது அரைச் சதத்தைப் பதிவுசெய்தார். இம்முறை IPL தொடரில் அவரது 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.

எனினும், அதிரடியாக ஆடி அரைச் சதம் அடித்த சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ஓட்டங்களுடனும், விஜய் சங்கர் 19 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க குஜராத் அணி 101 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பிறகு டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் ஆகிய இருவரும் அதிரடியாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர். இதில் மில்லர் 22 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ஓட்டங்களையும், அபினவ் மனோகர் 21 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ஓட்டங்களையும் விளாசினர்.

இறுதி நேரத்தில் வந்து அதிரடி காண்பித்த ராகுல் திவாட்டியா 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 20 ஓட்டங்களை விளாச, 20 ஓவர்கள் நிறைவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 207 ஓட்டங்களைக் குவித்தது.

மும்பை அணி தரப்பில் பியூஸ் சாவ்லா 2 விக்கெட்டுகளையும், அர்ஜுன் டென்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரிலே மெரிடித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுளை வீழ்த்தினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா 2 ஓட்டங்களுடனும், இஷான் கிஷன் 13 ஓட்டங்களுடனும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார்.

பின்னர் ஜோடி சேர்ந்த கெமரூன் க்ரீன் – சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையாடிய கெமரூன் க்ரீன் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நூர் அஹ்மட் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற, அடுத்து களமிறங்கிய டிம் டேவிட்டும் அதே ஓவரில் ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த சூர்யகுமார் யாதவ் 23 ஓட்டங்களுடன் நூர் அஹ்மட்; பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய நேஹல் வதெரா அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 3 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்காலாக 41 ஓட்டங்களையும், அர்ஜுன் டெண்டுல்கர் 13 ஓட்டங்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால் 20 ஓவர்கள் நிறைவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்கடததளை மட்டுமே எடுத்தது. குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் நூர் அஹ்மட் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான், மோஹித் சர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை எடுத்து குஜாரத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 2ஆவது இடத்துக்கு முன்னேற, மும்பை இந்தியன்ஸ் அணி 4ஆவது தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<