பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸை வென்றது டெல்லி

Indian Premier League 2023

87

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக நேற்று (24) நடைபெற்ற விறுவிறுப்பாபான போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

IPL தொடரில் நேற்று நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – டெல்லி கெபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதாராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் ஆரம்ப வீரர்களாக டேவிட் வோர்னர் – பிலிப் சோல்ட் ஆகிய இருவரும் களமிறங்கியனர். இதில் பிலிப் சோல்ட் சந்தித்த முதல் பந்திலேயே புவனேஷ்வர் குமாரிடம் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வோர்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர்.

இதில் மிட்செல் மார்ஷ் 5 பௌண்டரிகளுடன் 25 ஓட்டங்களை எடும்த நிலையில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட டேவிட் வோர்னரும் 21 ஓட்டங்களை எடுத்த நிலையில் வொஷிங்டன் சுந்தரிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து அதே ஓவரில் சர்ப்ராஸ் கான் 10 ஓட்டங்களுடனும், ஆமான் கான் 4 ஓட்டங்களுடனும் வொஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே – அக்சர் படேல் ஆகிய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அக்சர் படேல் 34 ஓட்டங்களை எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மனீஷ் பாண்டேவும் 34 ஓட்டங்களுடன் ரன் அவுட்டாகினார். அதன்பின் களமிறங்கிய பின்வரிசை வீரர்கள் சோபிக்க தவறினர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் டெல்லி கெபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வொஷிங்டன் சுந்தர் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 145 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் சார்பில் ஹெரி புரூக் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.

இதில் ஹெரி ப்ரூக் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்ததாக மயங்க் அகர்வாலுடன் ராகுல் திரிபாதி ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடியில் அரைச் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 49 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஒரு ஓட்டத்தினால் அரைச் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

அவரைத் தொடர்ந்து திரிபாதி 15 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 5 ஓட்டங்களையும், அணித்தலைவர் எய்டன் மார்க்ரம் 3 ஓட்டங்களையும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஹென்ரிச் கிளாசனுடன், வொஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை வேகமாக உயர்த்தினர்.

ஒரு கட்டத்தில் பௌண்டரிகளாக விளாசித்தள்ளிய கிளாசன் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.  டெல்லி அணி தரப்பில் கடைசி ஓவரை முகேஷ் குமார் வீச, வொஷிங்டன் சுந்தர் – மார்கோ ஜான்சன் களத்தில் இருந்தனர்.

ஆனால் கடைசி ஓவரை அபாரமாக வீசிய முகேஷ் குமார் அதில் வெறும் 5 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றி உறுதி செய்தார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல், ஆன்ரிச் நோர்ட்ஜே தலா 2 விக்கெட்டுகளைக் வீழ்த்தினர்.

இதன்மூலம் டெல்லி கெபிடல்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியதுடன், நடப்பாண்டு IPL தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்ய, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5ஆவது தோல்வியை சந்தித்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<