இறுதிவரை போராடி பெங்களூர் அணியிடம் வீழ்ந்த ராஜஸ்தான்!

IPL 2023

100
RCB triumph over Rajasthan Royals in their

ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற IPL தொடரின் 32வது போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியினை பதிவுசெய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று களத்தடுப்பில் ஈடுபட ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தீர்மானிக்க, பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

>> இரண்டாவது டெஸ்டில் மாற்றங்கள் மேற்கொள்ளுமா இலங்கை?

இன்னிங்ஸின் முதல் பந்தில் டிரெண்ட் போல்டின் பந்துவீச்சில் விராட் கோஹ்லி ஆட்டமிழக்க, 12 ஓட்டங்களை பெற்றிருந்த போது அணியின் இரண்டாவது விக்கெட் (சபாஷ் அஹ்மட்) வீழ்த்தப்பட்டது.

எனினும் இந்த தொடர் முழுவதும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பெப் டு பிளெசிஸ் மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினர். 3வது விக்கெட்டுக்காக இவர்கள் இருவரும் 66 பந்துகளில் 127 ஓட்டங்களை விளாச ஒரு கட்டத்தில் 13.1 ஓவர்களில் 139 ஓட்டங்களை குவித்துக்கொண்டது.

பெங்களூர் அணிக்கு 200 ஓட்டங்களை பெறுவதற்கான வாய்ப்பு இலகுவாக இருந்தபோதும், பெப் டு பிளெசிஸ் (66 ஓட்டங்கள்) மற்றும் கிளென் மெக்ஸ்வெல் (77 ஓட்டங்கள்) ஆகியோர் குறுகிய இடைவெளிகளில் ஆட்டமிழக்க, ஓட்ட எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

தொடர்ந்து வந்த வீரர்களில் தினேஷ் கார்த்திக் மாத்திரம் 16 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் டிரெண்ட் போல்ட் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஓட்டங்களின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். முதல் விக்கெட் இழக்கப்பட்ட போதும் யசஷ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்துத் படிக்கல் ஆகியோர் 98 ஓட்டங்களை பகிர்ந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர்.

இதில் படிக்கல் 52 ஓட்டங்களுடனும், ஜெய்ஸ்வால் 47 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறியதுடன், 10 தொடக்கம் 15 ஓவர்களில் பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்கள் ஓட்ட எண்ணிக்கையை கட்டுப்படுத்தி முக்கிய விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதனைத்தொடர்ந்து 15வது ஓவரிலிருந்து ஓட்டங்களில் சற்று வேகத்தை ராஜஸ்தான் அணி காட்டியிருந்தாலும், சஞ்சு சம்சன் மற்றும் சிம்ரொன் ஹெட்மையர் ஆகியோரின் ஆட்டமிழப்புகள் மீண்டும் ஏமாற்றம் கொடுத்தது.

இறுதியாக துருவ் ஜூரல் 16 பந்துகளில் 34 ஓட்டங்களை விளாசியிருந்த போதும் ராஜஸ்தான் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. பந்துவீச்சில் இறுதி ஓவர்களை சிறப்பாக வீசிய ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

எனவே இந்தப் போட்டியில் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி 8 புள்ளிகளுடன் 5வது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், தோல்வியடைந்திருந்தாலும் 8 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முதலிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<