பார்வையளர்களின்றிய கிரிக்கெட்டிற்கு இங்கிலாந்து வீரர் ஆதரவு

63
Getty Images

கொரோனா வைரஸ் ஆபத்து இல்லாமல் போகும் சந்தர்ப்பத்தில் கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் மீள நடாத்துவது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெறுகின்றன. 

பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெற சங்கக்காரவின் அறிவுரை

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை……………..

பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை மீள நடாத்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சிலர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். இவ்வாறு ஆதரவு தெரிவிப்பவர்களில் ஒருவராக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான ஜேசன் ரோய் காணப்படுகின்றார். 

கொரோனா வைரஸ் ஆபத்து காரணமாக இந்த ஆண்டுக்கான பாகிஸ்தான் சுபர் லீக் T20 தொடர் நிறுத்தப்படுவதற்கு முன்னர் சில போட்டிகள் பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களிலேயே நடைபெற்றிருந்தன. இந்த பாகிஸ்தான் சுபர் லீக் போட்டிகளில் குயேட்டா கிளேடியட்டர்ஸ் (Quetta Gladiatiors) அணிக்காக விளையாடிய அனுபவத்தைக் கொண்டே ஆரம்பவீரராக களம் வரும் ஜேசன் ரோய், கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் நடாத்துவதற்கு ஆதரவு தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

”அங்கே ஆரவாரங்கள் எதுவும் இருக்காது. அதைப் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தால் சரி”

”(பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் ஆடுகின்ற) இந்த விடயம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். (வழமையாக) ஒரு துடுப்பாட்டவீரராக உங்களுக்கு பந்துவீசும் போது பார்வையாளர்களின் ஆராவரங்களை சமாளிப்பது எப்படி என்பது புரிந்திருக்கும். எனினும், பந்துவீசப்பட்டவுடன் பார்வையாளர்கள் வேறு விதமான ஆராவர நிலைக்குச் சென்றுவிடுவர். ஆனால், இங்கே மயான அமைதி நிலவும். இன்னும், இங்கே உங்களுக்கு சக துடுப்பாட்டவீரர் எத்தனை ஓட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றார் என்பதையும் கேட்க முடியுமாக இருக்கும். அதனால், நீங்கள் மற்றைய துடுப்பாட்டவீரரின் உடல் சைகையினை அவதானிக்கத் தேவையில்லை. அது பழகிக்கொள்ள முதலில் கஷ்டமாக இருந்தது. ஆனால், என்ன செய்ய? நீங்கள் இவற்றினை சமாளித்தாக வேண்டும்.”

சில விஞ்ஞானிகள் கொரோனா வைரஸிற்கான மருந்து கண்டு பிடிக்கப்படும் வரை கிரிக்கெட் மைதானங்கள் போன்ற இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். அதேவேளை, இதற்கான மருந்து கண்டு பிடிக்கப்படுகின்ற போதும் அது பாவனைக்கு வர நீண்ட காலம் எடுக்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த கோடை காலத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட விருப்பம் காட்டினால் பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவதே அதற்கான தீர்வாக இருக்கும் என கருதப்படுகின்றது. 

”உண்மையாகச் சொல்லப் போனால், எனக்கு கிரிக்கெட் போட்டிகள் சிலவற்றில் விளையாடுவதற்கு விருப்பம். எங்களைப் போன்றவர்களுக்கு வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடுவதே உன்னதமான உணர்வாக இருக்கும் என நினைக்கின்றேன். ஒரு குழந்தை போல மீண்டும் உணர்கின்றேன். இங்கே (இங்கிலாந்தில்) நாம் அரசினால் ஆளப்படுகின்றோம். உண்மையில் எமக்கு வெளியில் என்ன நடக்கின்றது என்பதும் பாதுகாப்புக்கான அளவுகோல்கள் என்ன என்பதும் தெரியாது. வெளியில் பெரிய விடயங்கள் இருக்கின்றன. எனவே, கிரிக்கெட் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் நடாத்தினால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். இன்னும் (கிரிக்கெட் போட்டிகள்) வெளியில் நடாந்தால் சிறப்பு.”

ஜேசன் ரோயின் கருத்து இருக்க, பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் கிரிக்கெட் போட்டிகளை நடாத்துவது தொடர்பில், தமது நாட்டு நிலையினை கருத்திற் கொண்டு இங்கிலாந்து கிரிக்கெட் சபையே தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றது. 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<