லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய (22) IPL தொடரின் முதல் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
லக்னோவில் நடைபெற்ற இந்தப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஓட்டங்களை பெறுவதற்கு தடுமாறியது. ஆடுகளமும் துடுப்பாட்டத்துக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருந்ததுடன், லக்னோவ் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறந்த ஓட்டக்கட்டுப்பாட்டுடன் பந்துவீசினர்.
>>IPL பிளே-ஓஃப் சுற்றுக்கான மைதானங்கள் அறிவிப்பு
குஜராத் அணிக்கு விரிதிமன் சஹா சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த போதும், எதிர்பார்க்கப்பட்ட சுப்மான் கில் தன்னுடைய 2வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மூன்றாவது வீரராக அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா களமிறங்கி நிதானமான இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார்.
குஜராத் டை்டன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்த போதும், துடுப்பாட்ட வீரர்களின் ஓட்டவேகம் கேள்விகளை ஏற்படுத்தியிருந்தது. அரைச்சதம் கடந்த ஹர்திக் பாண்டியா 50 பந்துகளில் 66 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், சஹா 37 பந்துகளில் 47 ஓட்டங்களை பெற்றார். இவர்களையடுத்து களமிறங்கிய வீரர்கள் ஏமாற்றமளிக்க, டேவிட் மில்லர் 12 பந்துகளில் 6 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் குர்னால் பாண்டியா 4 ஓவர்களில் வெறும் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இதுமாத்திரமின்றி ஏனைய பந்துவீச்சாளர்களும் சிறந்த ஓட்டக்கட்டுப்பாட்டுடன் பந்துவீச, ரவி பிஸ்னோய் மாத்திரம் 4 ஓவர்களில் 49 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.
குஜராத் அணி 136 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணியித்திருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோவ் அணிக்கு கே.எல்.ராஹுல் மற்றும் கெயல் மேயர்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 6.3 ஓவர்களில் 55 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
குறித்த இந்த வேகமான ஓட்டக்குவிப்பின் ஆரம்பத்துடன் கெயல் மேயர்ஸ் ஆட்டமிழந்தபோதும் கே.எல். ராஹுல் தனியாளாக அரைச்சதம் கடந்து அணியை வெற்றியிலக்கை நோக்கி அழைத்துச்செல்ல தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் கைவசமிருக்க 30 ஓட்டங்களை மாத்திரமே பெறவேண்டிய தேவை இருந்த நிலையில், குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் போட்டியை தங்களுடைய பக்கம் திருப்ப தொடங்கினர்.
>>WATCH – வரலாற்று பதிவுகளுடன் அயர்லாந்தை வீழ்த்திய இலங்கை!
நூர் அஹ்மட் தன்னுடைய சுழல் பந்துவீச்சால் அழுத்தம் கொடுத்து 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்ற, கடைசி 3 ஓவர்களில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கே.எல். ராஹுல் ஆரம்பத்தில் வேகமாக ஓட்டங்களை குவித்த போதும், கடைசி ஓவர்களில் மந்தமான முறையில் துடுப்பெடுத்தாடி 61 பந்துகளில் 68 ஓட்டங்களை மாத்திரம் பெற்று கடைசி ஓவரில் ஆட்டமிழக்க, போட்டி முழுமையாக குஜராத் அணி பக்கம் திரும்பியது.
ராஹுலின் மோசமான இன்னிங்ஸ் நிறைவுடன் கடைசி 3 ஓவர்களில் 2 ஓவர்களை வீசிய மொஹித் சர்மா அபாரமாக பந்துவீசியதுடன், கடைசி ஓவரில் 12 ஓட்டங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் 4 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுக்க 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றியை பதிவுசெய்தது. மொஹித் சர்மா 3 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எனவே முழுமையான வெற்றி வாய்ப்பு இருந்த போட்டியில் கடைசி நேரத்தில் தோல்வியடைந்த லக்னோவ் சுபர் ஜயண்ட்ஸ் அணி 4வது தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்துள்ளதுடன், குஜராத் அணி தங்களுடைய 4வது வெற்றியை பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்துள்ளது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<