காயத்தால் மற்றுமொரு தொடரை தவறவிடும் ரவீந்திர ஜடேஜா

56

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர்.

இதனையடுத்து சகலதுறை வீரர் சபாஷ் அஹ்மட் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் குல்தீப் சென் ஆகிய இரண்டு வீரர்களும் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20i மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. T20i தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை (25) ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது. 2ஆவது ஒருநாள் போட்டி 7ஆம் திகதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10ஆம் திகதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதற்கிடையே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட சிரேஷ்ட வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர்.

முழுங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் அவர் பங்களாதேஷ் அணியுடனான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. எனவே, ரவீந்திர ஜடேஜாவிற்குப் பதிலாக சகலதுறை வீரர் சபாஷ் அஹ்மட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது ஒருநாள் தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றுள்ள சபாஷ் அஹ்மட், விஜய் ஹசாரே தொடரில் 6 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர இரண்டு அரைச் சதங்களையும் விளாசி துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.

அதேபோல டெஸ்ட் தொடரிலும் ஜடேஜா பங்கேற்பது சந்தேகம். ஒருவேளை அவர் டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகினால், உத்தர பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த 29 வயது இடதுகை சுழல் பந்துவீச்சாளர் சௌராப் குமார் தேர்வு செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ரஞ்சி கிண்ண தொடரில் இவர், 58 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அத்துடன். அண்மையில் நிறைவடைந்த நியூசிலாந்து A அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனிடையே, IPL தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் முதல் முறையாக இந்திய அணியில் இடம்பெற்றிருந்த யாஷ் தயாளும் காயம் காரணமாக பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக குல்தீப் சென் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் நிறைவடைந்த விஜய் ஹசாரே தொடரின் குழு நிலை ஆட்டங்கள் முடிவடையும் வரை அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் முதலிடம் பிடித்தார். எனினும், குறித்த தொடரில் 6 போட்டிகளில் ஆடி 18 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியிருந்தார்.

பங்களாதேஷுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய குழாம்

ரோஹித் சர்மா, கே.எல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ராஜத் படித்தர், ஸ்ரேயஸ் ஐயர், ராகுல் த்ரிபாட்டி, ரிஷப் பண்ட், இஷான் கிஷன், சபாஷ் அஹமட், அக்சர் பட்டேல், வொசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், மொஹமட் ஷமி, மொசிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<