ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தமிழ் நாட்டு வீரர்

217

ஒருநாள் கிரிக்கெட் (List A) வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து இன்னிங்ஸ்களில் சதம் பெற்ற முதல் வீரராக இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த N. ஜகதீசன் புதிய உலக சாதனையினை நிலை நாட்டியிருக்கின்றார்.

>> மூன்றாவது T20I போட்டியிலிருந்து வெளியேறும் வில்லியம்சன்!

தற்போது இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ் நாட்டு அணியின் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக ஆடி வரும் ஜகதீசன் இந்த தொடரில் ஆந்திரா, சட்டிஸ்கார், கோவா மற்றும் ஹரியானா ஆகிய அணிகளுக்கு எதிராக ஏற்கனவே சதங்கள் பெற்ற நிலையில் இன்று (21) அருணாச்சல் பிரதேச அணிக்கு எதிராகவும் சதம் பெற்று ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து இன்னிங்ஸ்களிலும் தொடர்ச்சியாக சதம் எடுத்த முதல் வீரராக சாதனை படைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் (ODI) வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார ஏற்கனவே நான்கு தடவைகள் தொடர்ச்சியாக சதம் பெற்றிருக்கும் நிலையிலையே ஜகதீசன் உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் இந்த புதிய சாதனையினைப் படைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அருணாச்சல் அணிக்கு எதிரான போட்டியில் இன்று மொத்தமாக 141 பந்துகளுக்கு 277 ஓட்டங்களையும் எடுத்திருந்த ஜகதீசன், 114 பந்துகளில் 200 ஓட்டங்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக இரட்டைச் சதம் விளாசிய இந்திய வீரர் என்கிற சாதனையினையும் படைத்திருப்பதோடு, விஜய் ஹசாரே தொடரில் இரட்டைச் சதம் பெற்ற ஆறாவது இந்திய வீரராகவும் சாதனை படைத்திருக்கின்றார்.

>> நிசாந்தன் அஜயின் அபார சதத்தால் யாழ். மத்திக்கு இலகு வெற்றி!

இதேநேரம் குமார் சங்கக்கார அடங்கலாக ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இந்தியாவின் டேவ்டட் படிக்கல், தென்னாபிரிக்க அணியின் ஆரம்பவீரர் அல்வைரோ பீடர்சன் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு தடவைகள் சதம் விளாசிய வீரர்களாக காணப்படுகின்றனர்.

இந்த ஆண்டு இந்திய பிரீமியர் லீக் (IPL) மெகா ஏலத்தில் சென்னை சுபர் கிங்ஸ் அணியினால் கொள்வனவு செய்யப்பட்ட J. ஜகதீசன், 2023ஆம் ஆண்டுக்கான பருவகால தொடருக்காக சென்னை சுபர் கிங்ஸ் (CSK) குழாத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<